குழந்தைகளின் திறனை மேம்படுத்த ஒரு செயலி!

2/27/2020 3:45:06 PM

குழந்தைகளின் திறனை மேம்படுத்த ஒரு செயலி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இன்றைய குழந்தைகள் உலகம் மிகவும் அபூர்வமானது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள். எனவே, அந்தக் குழந்தைகளின் தனித்துவமான ஆற்றலைக் கண்டெடுத்து அதனை செழுமைப்படுத்த வேண்டிய தேவை நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. குழந்தைகளின் இளம் மனதும், சிந்திக்கும் மூளையும் இன்னும் ஆற்றலுடனும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வகையிலும் இருப்பதற்கு கிட்ஸ் சௌபால் என்ற பெயரில் ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலீட்டு வங்கியாளரான தேவேந்திர ஜெய்ஸ்வால், மென்பொருள் மற்றும் நிதி சார்ந்த நிபுணர் மற்றும் தொழில் முனைவோர் ஆஷிஷ் ஸ்ரீவத்சவா, பல்திறன் கொண்ட தொழில்முனைவோர் ரேஷ்மி சிங் ஆகிய மூவரும் இணைந்து இச்செயலியை உருவாக்கியுள்ளனர்.

இச்செயலியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்து தேவேந்திர ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘கிட்ஸ் சௌபால் என்பது இரண்டு செல்லிடப்பேசி செயலி அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஒன்று குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கானது. மற்றொன்று ஆசிரியர்கள், பயிற்சியாளர்களுக்கானது. பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் இணைப்பதற்கு மட்டுமின்றி குழந்தைகள் தொடர்பான பயிலரங்குகள், முக்கிய நிகழ்வுகள் குறித்த விவரங்களையும் அறிந்துகொள்ள முடியும். கிட்ஸ் சௌபால் பார்ட்னர் செயலியானது ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் எளிதாக அதனைக் கையாளும் வகையிலும், அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கவும் உதவி செய்கிறது. குழந்தைகளுக்கு இருக்கும் ஆற்றல், திறன்கள், தனித்த செயல்பாடுகள் ஆகியவற்றைக் கண்டறிந்து அதில் அவர்களை மேலும் மேம்படுத்தவும் வழிசெய்கிறது.

பல்வேறு திறன்களில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களைக் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு அருகில் கொண்டு வருவதன் மூலம் அவர்களுக்குச் சரியான கற்பித்தல் மற்றும் பயிற்சிகளை அளிக்க முடியும். இது அவர்களுக்கு எதிர்கால வாழ்வுக்கான சரியான முதலீடாக அமையும். மாணவர்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆற்றல் மிகுந்த குழந்தைகளுக்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான ஸ்காலர்ஷிப் திட்டத்தை கிட்ஸ் சௌபால் செயல்படுத்துகிறது. இது குழந்தைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான அம்சங்களை ஊக்குவிக்கவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சவால் நிறைந்த கல்விச்சூழலில் மிகச்சிறந்த ஆசிரியர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்குப் பரிசு அளிக்கும் திட்டத்தையும் செயல்படுத்துகிறது. இதற்காக ரூ.5 லட்சம் செலவிடப்படுகிறது.

கிட்ஸ் சௌபாலின் பிராண்ட் அம்பாசிடராக பல்வேறு திறன்களைப் பெற்றுள்ள பெங்களூரைச் சேர்ந்த 14 வயது திஸ்யா சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் பெங்களூரு கிழக்கு டி.பி.எஸ். பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் ஏ1 கிரேடு பெற்றுவரும் அவர், விளையாட்டு, கவிதை, ஓவியம், நடனம் என பல்துறையிலும் சிறந்து விளங்குகிறார். பல்வேறு பதக்கங்களையும் அவர் பெற்றுள்ளார்’’ என்றார். இதுகுறித்து, திஸ்யா சிங் கூறுகையில், ‘‘கிட்ஸ் சௌபாலின் ஒரு அங்கமாக இருப்பதில் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். இதன் மூலமாக, மற்றவர்களும் குறிப்பாக என்னுடன் பயிலும் மாணவ-மாணவிகள் உள்பட பலரும் தங்களது வாழ்வின் பாதை எது என்பதை மனதில் நிலைநிறுத்த வாய்ப்பாக இருக்கும். கல்வியின் மற்றொரு பகுதியாக மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தலாம்’’ என்றார்.

தொகுப்பு: திருவரசு

X