தமிழக அரசின் குடிமைப்பணி பயிற்சி மையத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுக்கு ரெடியா?

9/14/2017 5:17:11 PM

தமிழக அரசின் குடிமைப்பணி பயிற்சி மையத்தில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுக்கு ரெடியா?

யுபிஎஸ்சி நடத்தும் இந்திய ஆட்சிப்பணி (IAS), இந்தியக் காவல்பணி (IPS) உள்ளிட்ட பல்வேறு இந்தியக் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination - 2018) எழுதும் பயிற்சிக்கு மாணவர்களை வரவேற்றுள்ளது சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசின் அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம்.

பயிற்சி மையம்

தமிழ்நாடு அரசு 1966 ஆம் ஆண்டில் நிறுவிய எஸ்சி; எஸ்டி; பிரிவினருக்கான முதல் நிலைத் தேர்வுப் பயிற்சி மையம் (Pre-Examination Training Centre), 1971 ஆம் ஆண்டில் நிறுவிய பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சிறப்புப் பயிற்சி மையத்தை ஒன்றிணைத்து 2000 ஆம் ஆண்டில், அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் சென்னையில் உருவானது. அண்ணா மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் ஒரு பிரிவாகச்செயல்படும் இந்தப் பயிற்சி நிறுவனம், இந்திய அரசின் குடிமைப் பணிகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பை அதிகரிக்க  உதவும் உயரிய நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறது.

பயிற்சி இடங்கள்

இந்தியக் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination - 2018) பயிற்சிக்கு முழுநேர இருப்பிடப் பயிற்சி (Full   time - Residential), பகுதிநேரப் பயிற்சி (Part time - Non Residential) என்று இரு பிரிவுகளாக உள்ளது. முழுநேர இருப்பிடப் பயிற்சிக்குத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) - 92, அருந்ததியர் (SCA) - 18, பழங்குடியினர் (ST) - 3, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC & DNC) - 40, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) - 54, பிற்படுத்தப்பட வகுப்பினர் (இசுலாமியர்) (BCM) - 7, மாற்றுத்திறனாளிகள் (PH) - 7, பிற வகுப்பினர் (OC) - 4 என்று மொத்தம் 225 காலியிடங்கள் இருக்கின்றன.

பகுதிநேரப் பயிற்சிக்குத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) - 41, அருந்ததியர் (SCA) - 8, பழங்குடியினர் (ST) - 1, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC & DNC) - 18, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) - 24, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இசுலாமியர்) (BCM) - 3, மாற்றுத் திறனாளிகள் (PH) - 3, பிற வகுப்பினர் (OC) - 2 என்று மொத்தம் 100 இடங்கள் இருக்கின்றன. இரண்டு வகையான பயிற்சிகளிலும் சேர்த்து மொத்தம் 325 காலியிடங்கள் இருக்கின்றன.

கல்வித்தகுதி

2018 ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி நடத்தவிருக்கும் இந்தியக்குடிமைப் பணிகளுக்கான பிரிலிமினரி முதல்நிலைத் தேர்வுக்கு (Preliminary Examination -2018) மாணவர்களைத் தயார் செய்யும் பயிற்சியில் சேர்க்கை பெறுவதற்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகப் பட்டம் அவசியம்.

வயது வரம்பு

1-8-2018 அன்று 21 வயதுக்குள் இருப்பது அவசியம். பொதுப்பிரிவினருக்கு 32 வயது வரம்பு. 2-8-1986 முதல் 1-8-1997 க்குள் பிறந்திருக்கவேண்டும். எஸ்சி; எஸ்டி; பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வரையும் வயதுத் தளர்வுண்டு.     

விண்ணப்பம் http://aicscc.examsonline.co.in/ எனும் இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். அச்சிட்ட விண்ணப்பத்தில்  விண்ணப்பிக்க சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருக்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் அலுவகத்திலும், சென்னையிலிருப்பவர்கள் ”முதல்வர், அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம், காஞ்சி கட்டடம், 163/1, பி. எஸ். குமாரசாமி ராஜா சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600028” எனும் முகவரியிலும் அச்சிட்ட விண்ணப்பத்தினை விலையின்றிப் பெற்று, அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அச்சிட்ட விண்ணப்பங்களை உரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும் கடைசி நாள்: 20-9-2017.  

நுழைவுத்தேர்வு

இந்தியாவில் 13 தேர்வு மையங்களில் 5-11-2017 அன்று நுழைவுத்தேர்வு நடத்தப்பெறும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதி அட்டையினை இந்நிறுவனத்தின் http://www.civilservicecoaching.com/ எனும் இணையதளத்திலிருந்து 20-10-2017 முதல் தரவிறக்கலாம்.

நுழைவுத்தேர்வு முடிவுகள்

கீ ஆன்சர் 6-11-2017 அன்று இந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த விடைகளில், தவறானது என்று கருதும் விடைகளைக் குறிப்பிட்டுச் சரியான விடையினை உரிய ஆதாரங்களுடன் 12-11-2017 மாலை 5.30 மணி வரை சமர்ப்பிக்கலாம். பின் இந்நிறுவன இணையதளத்தில் 15-11-2017 அன்று  சரியான விடைகள் வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கை

மேற்காணும் பயிற்சிக்கான இடங்களுக்கேற்ப இந்தியக் குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு எழுவதற்கான பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்.

பயிற்சிக் கட்டணம்

முழுநேர இருப்பிடப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் பிற வகுப்பினருக்குப் பயிற்சிக் கட்டணம் ரூ. 1000/-பகுதிநேரப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் பயிற்சிக் கட்டணம் ரூ. 3000/-. முழுநேரப் பயிற்சிக்கான வகுப்புகள் அனைத்து நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பகுதிநேர பயிற்சிக்கான வகுப்புகள் வாரநாட்களில் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறும்.  

விடுதி வசதி

முழுநேர இருப்பிடப் பயிற்சிக்குத் தேர்வான மாணவர்களுக்கு மட்டும் இலவச உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி உண்டு. கூடுதல் தகவல்களுக்கு, சென்னையிலுள்ள இப்பயிற்சி நிறுவன அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று விவரங்களைஅறியலாம். இந்நிறுவனத்தின் 044 - 24621475, 24621909 அலுவலகத் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அஜய் குல்சன்