தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி 1,060 பேருக்கு வாய்ப்பு!

2/6/2020 4:42:59 PM

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி 1,060 பேருக்கு வாய்ப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை  கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி சிவில், மெக்கானிக்கல், EEE, ECE, ஐடி, ஆங்கிலம், கணிதம், இயற்பியல் என மொத்தம் 15 துறைகளில் 1,060 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங் களை நிரப்ப கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து செப்டம்பரில் நடந்த தேர்வில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 568 பேர் தேர்வு எழுதினர். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டின்போது முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இறுதியில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி 1,060 பணியிடங்களுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியானது. இதையடுத்து, தற்போது அதற்கான விண்ணப்பம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வரும் பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால், எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

TN TRB Lecturer Recruitment 2020 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அந்தந்த துறைகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும். எஞ்சினியரிங் அல்லாத துறைகளுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்தகைய கல்வித்தகுதிக்கு இணையான படிப்பு முடித்தவர்களும் TRB Lecturer தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் தங்களின் வயது 1.7.2019-ன் படி 57-க்கு மிகாமல் இருக்கவேண்டும். இவை அரசு ஆணை 156-ன் உயர்கல்வியின் பி1 தேதி 15.9.2014-க்கு உட்பட்டது. மேலும் முழு விவரங்களை அறிய trb.tn.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தொகுப்பு: முத்து

X