திருக்குறளைக் கற்க சூப்பர் கையேடு: உயர்நீதிமன்றம் பாராட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர்!

8/10/2017 6:12:48 PM

திருக்குறளைக் கற்க சூப்பர் கையேடு: உயர்நீதிமன்றம் பாராட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர்!

உலகப்பொதுமறையான திருக்குறளை நன்னெறிக் கல்வியாக பள்ளிகளில் கற்பிக்க கையேடுகள் தயாரித்து வெளியிட்டுள்ளார் மதுரையைச் சேர்ந்த மேலூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சூர்யகுமார்.

மாணவர்களுக்கு விளையாட்டுடன் பாடம் கற்பிப்பது, கோடை விடுமுறையில் மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிப்பது, வகுப்பறையில் பாடம் நடத்த பவர்பாய்ண்ட் சி.டி.க்களை தயாரிப்பது, கலாசாரப் பெருமை மிக்க இடங்களைப் பற்றி ஆய்வு செய்வது என மாணவர்களை உயிரோட்டமாக வைத்திருப்பது இவரின் தனிச்சிறப்பு.

உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை 6 -12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழுமையாகக் கற்பிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தின் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டு 6 - 12ம் வகுப்பு வரையிலும் நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தில் திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவிலுள்ள 108 அதிகாரங்களையும் பயிற்றுவிக்கத் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

திருக்குறளை நன்னெறிக் கல்விப்பாடங்களாகக் கையேடுகளில் அச்சிட்டு தனது பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர் சூரியகுமார். இம்முயற்சிக்குத்தான் உயர்நீதிமன்றத்தில் அட்டகாச பாராட்டு. “திருக்குறள் உலகிற்கே வழிகாட்டக்கூடிய நூல். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 7 வகுப்பு களுக்கு 700 பக்கங்கள் எழுதியிருக்கிறேன். இந்தப் பணிக்கு ஓராண்டு பிடித்தது.

இந்த நூலின் ஒவ்வொரு திருக்குறளுக்கும், அதிகாரவாரியாகப் பொருளுரையோடு, ஒரு நீதிக்கதை அதிகாரத்தின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ளது.  மாணவர்கள் திருக்குறளையும், அதன் பொருளையும் எவ்வாறு உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை அறிவதற்கு எளிமையாக மாணவர்களைக் ஈர்க்க பயிற்சிகளும் உண்டு’’ என்ற ஆசிரியர் சூரியகுமாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.

‘‘உலகிலேயே மிகச்சிறந்த ஆசிரியர், திருவள்ளுவர். காரல் மார்க்ஸ் தன்னுடைய ‘மூலதனம்’ என்ற நூலில் சொன்ன ஒட்டு மொத்தக் கருத்தையும் “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்ற ஒரே வரியில் சுருக்கமாகச் சொன்னவர் வள்ளுவர். திருக்குறளை மார்க்குக்கான செய்யுளாகப் படிக்காமல் வாழ்க்கைப் பாடச் செய்யுளாகப் படிக்க வேண்டும். திருக்குறளைக் கற்பித்தால் வன்முறையற்ற சமூகம் உருவாகும்.

என்னுடைய தீர்ப்பால் ஊக்கம் பெற்று திருக்குறள் நன்னெறி நூல்களை உருவாக்கிய ஆசிரியர் சூர்யகுமாரையும், அப்பள்ளித் தலைமை ஆசிரியர் டெய்சி நிர்மலாராணியையும் பாராட்டுகிறேன்” என நெகிழ்ச்சி மேலிட பேசுகிறார் நீதிபதி மகாதேவன். புத்தகப் பாடங்களையே சொல்லித் தர தயங்கும் இந்தக் காலத்தில் மாணவர்களுக்காகச் சிரத்தை எடுத்து நேரம் செலவிட்டு திருக்குறளை அழகியே கையேடாக்கிய ஆசிரியர் சூர்யகுமாரைப் போல அர்ப்பணிப்பான ஆசிரியர்கள்தான், மாணவர்களுடைய  வாழ்வில் என்றும் ஒளிவிளக்காக வாழ்வார்கள்.

மேலும்

X