You Tubeபில் கணித வகுப்பு! அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் ரூபி!

9/1/2017 5:44:19 PM

You Tubeபில் கணித வகுப்பு! அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் ரூபி!

அடுத்த பீரியட் கணக்குப் பாடம் என்றதுமே, விளக்கெண்ணெய் குடித்தது போல் முகம் மாறும் மாணவர்கள் மதில் சுவர் தாண்டி ஓடுவது வழக்கம்தான். ‘‘கணக்கை ஈஸியாக போட அதோட பேசிக் தெரிஞ்சா போதும். மத்தது சுலபம்தான்’’ என்கிறார் ரூபி தெரசா. மாணவர்களுக்கு ரூபி டீச்சர். திருச்செங்கோட்டிலுள்ள பெண்கள் அரசுப் பள்ளியில் ரூபி தெரசா கணக்கு டீச்சர்.  வேம்பாய்க் கசக்கும் கணக்குப் பாடத்தை மிகவும் சுலபமாகவும், எளிதில் புரியும்படி யூட்யூப் வழியாகவே பசங்களுக்கு சொல்லித் தருகிறார் ரூபி. இவரின் கணக்குப் பாட வீடியோக்கள் யுடியூபில் செம ஹிட்.

‘‘என்னுடைய இந்த முன்னேற்றத்திற்கு என் பள்ளி மாணவிகளுக்குத்தான் கிரெடிட் கொடுக்கணும். ஒரு மாணவன் படிக்கலைன்னா அது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தவறுன்னுதான் நான் சொல்லுவேன். குழந்தைகள் களிமண்மாதிரி. அவங்கள நாமதான் சீர்படுத்தி சிற்பமாக்கணும். பெற்றோர்கள் வேலைக்கு முக்கியத்துவம் தருகிறார்களே தவிர குழந்தைகளின் தேவைகளைக் கவனிப்பதில்லை. 40 மாணவர்களின் மீதும் ஆசிரியர்கள் ஸ்பெஷல் கவனம் செலுத்துவது கடினம்” என்றவர் கடந்த ஒரு ஆண்டாகக் கணக்கு வகுப்பு வீடியோக்களை யூட்யூபில் பதிவிட்டுவருகிறார்.

‘‘2007ல் இருந்து பத்து வருஷமா அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை. அதற்கு முன் 18 வருஷமா மெட்ரிக்குலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளியில் வேலை பார்த்தேன். ஒப்பீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களிடம் ஆர்வம் அதிகம். நான் படிச்சதும் அரசுப் பள்ளியில்தான். பட்டப்படிப்பு என்ன படிக்கலாம்ன்னு திணறியபோது, கணக்கு படிச்சால் வீட்டில் பசங்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கலாம் என்ற என் அத்தையின் அட்வைஸ்தான் நான் கணக்கைத் தேர்ந்தெடுக்கக் காரணம்.  உதாரணத்திற்கு 2+3 = 5. அதைப் படம் கொண்டு விளக்கினால், குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும்.

அவர்களுக்காகவே நான் என் 51 வயதிலும் இன்னும் தேடித்தேடி கற்றுக்கொண்டு இருக்கிறேன்’’ என்றவர் இந்தத் தேடலின் பின்னணி பற்றி ஆர்வமாக விவரித்தார். ‘‘2015ல எனக்கு குரல் நாணில் ஏற்பட்ட சிக்கலால குரல் உயர்த்தி பேசமுடியாத நிலை. குரல் நாண் சரியானதும், முளசியில் உள்ள சின்ன அரசுப் பள்ளியில் ஆசிரியராக மாற்றலாகி வந்தேன். ஸ்கூலில் மொத்தமே 72 பசங்கதான். அதிலும் ஒன்பதாவது, பத்தாம் வகுப்பில் மொத்தம் 10 பேர்தான். அங்கு படிக்கும் மாணவர்கள் சாதாரணமாக வாய்ப்பாடு சொல்லவே தடுமாற்றம்.

வாய்ப்பாட்டை எளிதாக எப்படி புரிய வைக்கலாம்ன்னு இணையத்தில் தேடினேன். கிடைச்ச விஷயங்களை நம்முடைய சிலபஸிற்கு ஏற்ப மாற்றினேன். ஒரே கணக்கை மூன்று ஸ்டைலில் சொல்லித் தருவேன். அவர்களுக்கு எது புரிகிறதோ அதை அவர்கள் பயன்படுத்தலாம். வாய்ப்பாட்டில் 2,5,10 வாய்ப்பாடு ஈஸி. அதே போல் 19 வாய்ப்பாட்டை மிகவும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.

முதலில் 1x19, 2x19, ... என 10x19 வரை எழுதிக்கொள்ளவும். இதற்கான விடையில் 9,8,7.... என ஒன்று வரை எழுதிக் கொள்ளவும். அதன் பிறகு 9க்கு முன் ஒற்றைப்படை எண்களான 1,3,5,7... என சேர்த்தால் 19ம் வாய்ப்பாடு ரெடி. அதாவது 1x19 = 19, 2x19 = 38, ,3x19 = 57, 4x19 = 76, 5x19 = 95 இப்படி படித்தால் மனதில் எளிதாக பதியும். விடையை ஈஸியாக சொல்ல முடியும். அதே போல் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வாய்ப்பாட்டை பொறுத்தவரை அதை இரட்டிக்க மட்டுமே தெரிஞ்சா போதும்.

1x2 = 2, 2x2 = 4, 4x2 = 8, 8x2 = 16.  அதே போல் 5 ம் வாய்ப்பாட்டிற்கும் ஒரு டெக்னிக். இரட்டை எண்கள் எப்போதும் 0 வில்தான் முடியும். 5 ம் வாய்ப்பாட்டில் அதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 5x2 =10, 5x4 =20, 5x6 = 30. இதில் ஐந்தை இரண்டால் பெருக்கும்போது இரண்டின் பாதி 1, அதன் அருகில் 0 ரை சேர்த்துக்கொண்டால் 5x2 = 10. அதே போல்தான் மற்ற இரட்டை எண்களையும் கணிக்க வேண்டும்’’ என உற்சாகமாக பேசுகிறார் ரூபி தெரஸா.

ஆங்கில ஆசிரியராக இருந்த ரூபி தெரஸாவின் கணவர், அண்மையில் காலமாகிவிட்டார். தமிழ்வழியில் படித்த ரூபி, தயங்கி தடுமாறியபோதெல்லாம் கைகொடுத்து நம்பிக்கை தந்திருக்கிறார் அவரது கணவர். “உலகிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் எனது கணித முறைகளை பரப்ப, கணித வீடியோக்களை யூட்யூபில் பதிவேற்றத் தொடங்கினேன். இப்போதுவரை rubitheresa என்ற சேனலில் யூட்யூபில் 525 வீடியோக்கள் இருக்கு.

2015ல் கணக்கு ரிசோர்ஸ் பயிற்சியாளரானேன். அந்த குழுவில் என்னுடைய வகுப்பு மாணவர்களின் திறமையை காண்பித்தபோது பலருக்கும் ஆச்சரியம். அடுத்த மாதம் அதற்கு அங்கீகாரமாக விருது வழங்க இருக்கிறார்கள். யூட்யூப் கடந்து, பிளாக்கிலும் எழுதி வருகிறேன் (rubitheresa.blogspot.in) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அதில் அப்லோட் செய்துள்ளேன்.

அடுத்து மொபைலில் ஆப் டிசைன் செய்யும் பிளான் உள்ளது. கணக்கைப் பொறுத்தவரை தமிழில் அதிக வீடியோக்கள் இல்லை. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு நிறைய வீடியோக்களை அப்லோட் செய்து கணக்கு கற்கண்டுதான் என மாணவர்களுக்குப் புரிய வைப்பதே என் லட்சியம்”  என உறுதியாக பேசுகிறார் கணக்கு ஆசிரியர் ரூபி தெரசா.

- ப்ரியா
படங்கள் : சங்கர். சேலம்