ஆசிரியர் தின கொண்டாட்டம்!

9/5/2017 5:17:50 PM

ஆசிரியர் தின கொண்டாட்டம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர்தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்குத் தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்குக் கற்றுத்தந்து, குற்றங்களை நீக்கி நல்லவர்களாக, பண்புள்ளவர்களாக, சிறந்தவர்களாக, அறிஞர்களாக, மேதைகளாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம், பண்பு, ஆன்மிகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களைச் சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமான பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள்தான் உண்மையான ஆசிரியர்கள்.

தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியைப் புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்து காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாள், இந்தியாவில் 1962ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

கல்வி தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக்கொண்டு இளங்கலைப் (பி.ஏ.) பட்டமும், பின்னர் முதுகலைப் (எம்.ஏ.) பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார்.

மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்துச் சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார். 1931 ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணனை பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது.

இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.இந்தியாவில் கொண்டாடப்பட்டுவரும் ‘ஆசிரியர் தின’நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகிறது. சிறந்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்துகிறது. மாணவர்களும், ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.

- திருவரசு