தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஓர் அரசுப் பள்ளி!

9/6/2017 12:56:01 PM

தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஓர் அரசுப் பள்ளி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் செலவுகளையும் கணக்கெடுத்தால், அத்தியாவசிய தேவைகளுக்குச் செலவழிப்பதைவிட தன் குழந்தைகளின் கல்விக்குச் செலவழிப்பதே அதிகமாக இருக்கும். நாம்தான் கஷ்டப்படுகிறோம், நமது குழந்தைகளாவது நன்கு படித்து ஒரு நல்ல வேலைக்குப் போய்விட்டால் அவர்கள் வாழ்வாவது வளமாக அமையும் என்ற எதிர்பார்ப்பினாலேயே இந்தச் செலவினம் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அரசு இலவசக் கல்விக் கொடுத்தாலும், அது தரமான கல்வியாக இல்லை என்பதே இதற்குக் காரணமாகக் கூறப்
படுகிறது. இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் மேலாக ஓர் அரசுப் பள்ளியை மாற்றிவருகிறார் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் அன்பழகன்.

அவரின் இந்த முயற்சி குறித்துக் கேட்டபோது, “இது மீனவர் வாழும் பகுதி. இங்கு 1949-ல் தொடக்கப்பள்ளியாகத் தொடங்கப்பட்டு 2004-ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் மூலம் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது இவ்வூர் அரசுப் பள்ளி. மாணவர் எண்ணிக்கை அதிகரித்து நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இங்குத் தனியார் பள்ளிகள் மற்றும் ஆங்கிலப் பள்ளிகள் அருகில் தோன்றின. இதனால், காலப்போக்கில் அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேபோனது” என்று தனியார் பள்ளிகளால் அரசுப் பள்ளிக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கூறினார்.

மேலும் அவர், “நான் இப்பள்ளியின் தலைமையாசிரியராக 2015ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். அதன் பிறகும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்வதைக் கருத்தில்கொண்டு அவ்வூர் நாட்டார், காரியதரிசி, பஞ்சாயத்தார், ஊர்ப் பொதுமக்கள், கிராமக் கல்விக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என எல்லோரையும் சந்தித்து  நமது ஊர்  பள்ளி யில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முயற்சிகள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

மேலும், இதே நிலை நீடித்தால் உங்கள் ஊர் நடுநிலைப்பள்ளி மீண்டும் தொடக்கப்பள்ளியாக மாறிவிடும் சூழ்நிலை உள்ளது என்பதையும் எடுத்துக் கூறினேன். அதற்கு அவர்கள், தனியார் பள்ளிகளில் கராத்தே, டான்ஸ் உள்ளிட்ட பல திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கொடுப்பதாகவும், பள்ளிக்குச் சென்றுவரப் போக்குவரத்து வசதி உள்ளதாகவும் தெரிவித்தனர். அதுபோன்ற வசதிகளை நம்மூர் பள்ளிக்கும் நாம் ஏன் செய்யக்கூடாது என எடுத்துக் கூறினேன்” என்றார் அன்பழகன். “நான் கூறிய அத்தனை விஷயங்களையும் மனதில் வாங்கிக்கொண்ட ஊர் மக்களும் உதவ முன்வந்தனர். அதன் மூலம் அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்த தனியார் பள்ளிக்கு நிகராகப் பல்வேறு நலத்திட்ட அம்சங்களை உருவாக்கினோம்.

இதனையடுத்து தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்த தங்கள் பிள்ளைகளை அங்கிருந்து நிறுத்தி உள்ளூர் அரசுப் பள்ளியில் கொண்டுவந்து சேர்ந்தனர். இதனால், சென்ற கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் மூன்று மாணவர்கள் சேர்ந்த நிலைமை மாறி நடப்பாண்டில் 21 மாணவர்கள் முதல் வகுப்பிலும்,  இரண்டாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையில் 36 மாணவர்களைச் சேர்த்து கூடுதலாக 57 மாணவர்கள் சேர்ந்தனர். தற்போது 88 மாணவர்களாக இருந்தது புதிதாக வந்த 57 மாணவர்களுடன் 145 ஆக எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்று மகிழ்ச்சிபொங்க கூறினார்.

“இதோடு முடிந்துவிடவில்லை. இவ்வூர் சார்பாகச் சென்ற கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படித்து முடித்துச் சென்ற மாணவர்களுக்கு தலா ரூ.4,000 வீதம் 22 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. (இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை ஊக்கப்படுத்தும்விதமாக இந்தத் தொகை வழங்கப்படும்.) பள்ளி சுற்றுச்சுவரை ஒரு அடி உயர்த்தி கட்டியுள்ளோம். தண்ணீர் வசதிக்காக நீர்மூழ்கி மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது. பால்வாடி, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்களை அைழத்துவர வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கு வாட்ச்மேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனியார் பள்ளி மாணவர்களோடு போட்டிப்போடும் விதமாக Spoken English, கராத்தே, யோகா போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

தற்போதைய கல்விமுறைக்கு ஏற்ப Smart Class தொடங்கப்பட்டு,  இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கல்விச் சுற்றுலா ஊர்மக்களின் உதவியோடு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். விளையாட்டுச் சீருடை, மாணவர்களுக்கு நாட்காட்டி,  ஆண்டுதோறும் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்துவது போன்றவற்றுக்காக இதுவரையில் சுமார் ரூ.5 லட்சம் வரை பள்ளிக்காக ஊர்ப் பொதுமக்கள் செலவு செய்திருக்கிறார்கள்.

இப்பள்ளியில் அறிவியல், கணக்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு என மொத்தம் 7 ஆசிரியர்கள் பணியாற்றிவருகிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் இங்கு பணியாற்றிய பகுதி நேர ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். விரைவில் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து அனைத்துத் துறைப் பகுதி ஆசிரியர்களையும், பாடத்துக்கான ஆசிரியர் மற்றும் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் பெற வேண்டும் என்பதே எங்கள் அனைவருடைய ஆசையாக உள்ளது” என்று எதிர்காலத் திட்டத்தையும், எதிர்பார்ப்பையும் சொல்லி முடித்தார்.

- தோ.திருத்துவராஜ்