யு.ஜி.சி.யின் உயர்கல்வி ஆய்வுகளை வெளியிடுவதற்கான ஆய்விதழ்களின் பட்டியல்!

9/11/2017 11:55:44 AM

யு.ஜி.சி.யின் உயர்கல்வி ஆய்வுகளை வெளியிடுவதற்கான ஆய்விதழ்களின் பட்டியல்!

இந்தியாவில் உயர்கல்விக்கான உயர் அமைப்பாகச் செயல்பட்டு வரும் யுசிஜி பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கும், உயர்கல்வி ஆய்வுகளுக்கான தரவுகளைப் பெறுவதற்கும் ஏற்ற ஆய்விதழ்களின் பட்டியலை (UGC Approved List of Journals) அண்மையில் வெளியிட்டிருக்கிறது.  

* ஆய்விதழ்கள்
பல்கலைக்கழக மானியக்குழு அறிவியல் மேற்கோள் அகவரிசை (Science Citation Index) சமூக அறிவியல் மேற்கோள் அகவரிசை (Social Science Citation Index) மற்றும் கலை மற்றும் மானுடவியல் மேற்கோள் அகவரிசை (Arts and Humanities Citation Index) போன்றவைகளை உள்ளடக்கிய 1. அறிவியல் வலை (Web of Science), 2. ஸ்கோபஸ் அமைப்பு வெளியிட்டிருக்கும் அகவரிசையிலான ஆய்விதழ்கள் (Journals Indexed in Scopus), 3. இந்தியர்களுக்கான மேற்கோள்கள் அகவரிசையிலான ஆய்விதழ்கள் (Journals Indexed in Indian Citation Index), 4. பல்கலைக்கழக மானியக்குழுவின் நிலைக்குழு மற்றும் மொழியியல் குழு உறுப்பினர்கள் பரிந்துரையிலான ஆய்விதழ்கள் (Journals Recommended by the Members of UGC Standing Committee and Language Committee), 5. பல்கலைக்கழகங்கள் பரிந்துரைத்த ஆய்விதழ்கள் (Journals Recommended by the Universities) என ஐந்து வகைப்பாடுகளின் கீழ் பல்வேறு ஆய்விதழ்களைப் பரிசீலித்து, அவற்றிலிருந்து தரமுடையதான ஆய்விதழ்களின் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.      

* ஆய்விதழ்கள் தேர்வு
மேற்காணும் ஐந்து பிரிவுகளில் 1. ஆய்விதழின் பெயர் (Name of the Journal), 2. பன்னாட்டுத் தரத் தொடர் எண் (ISSN Number), 3. அச்சிதழ் / இணைய இதழ் / அச்சு மற்றும் மின்னிதழ் (Only Hard Copy / Only Online / Hard Copy and Online) என்று மூன்று வகைகளிலான வெளியீடுகள் (Nature of Publication), 4. காலமுறை (Periodicity), 5. வெளியீட்டாளர், நகரம் மற்றும் நாடு (Publisher, City and Country) போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டு, அந்த ஆய்விதழின் வலைப்பக்கத்தில் முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் இடம்பெற்றிருக்கிறதா? அந்த முகவரிகள் உறுதிப்படுத்தப்பட்டதா? என்பதை முதன்மைக் கேள்வியாகக் கொண்டு, ஆம் என்று உறுதிப்படுத்தப்பட்டால், அதனைத் தொடர்ந்து, வலைப்பக்கத்தில் கட்டுரை ஆசிரியர்கள்/ ஆய்வாளர்களின் விவரங்கள் தரப்பட்டிருக்கிறதா?
 
ஆய்விதழ் முழுமையான ஆய்வு மற்றும் வெளியீட்டுக் கொள்கைகளைக் கொண்டிருக்கிறதா?
ஆய்விதழ் சிறப்பான நன்னெறிக் கொள்கையினைக் கொண்டிருக்கிறதா?
ஆய்விதழ் ஒவ்வொரு ஆண்டும் அறிவித்த காலமுறையின்படி செயல்பட்டிருக்கிறதா?
ஆய்விதழ் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டிருக்கிறதா? அதன் காலமுறை பின்பற்றப்பட்டிருக்கிறதா?
ஆய்விதழில் தரவுகள் அகவரிசை செய்யப்பட்டிருக்கிறதா? அவை சரிபார்க்கப்பட்டுள்ளதா?
ஆய்விதழ் சமர்ப்பிப்பதற்கு / வெளியீடுவதற்கு எனத் தனிக் கட்டணம் வைத்திருக்கிறதா?
ஆய்விதழ் தொடர்ந்து எத்தனை ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது?
எனும் எட்டு விதமான நிலைகளில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பீட்டில் பன்னாட்டுத் தரத் தொடர் எண் (ISSN Number) இல்லாத இதழ்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவே இல்லை.

* பல்கலைக்கழகப் பரிந்துரை
பல்கலைக்கழக மானியக்குழு தேர்வு செய்த ஆய்விதழ்களின் முதல் பட்டியல் ஜூன் மாதத்தில் வெளியிட்டது. அதன் பின்னர், இந்தியாவிலுள்ள 141 பல்கலைக்கழகங்கள் பரிந்துரை செய்த 7,255 ஆய்விதழ்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இவற்றில் மோசமான தரத்திலிருந்த இதழ்கள், பல்கலைக்கழக மானியக்குழுவின் தேர்வில் முன்பே இடம்பெற்ற ஆய்விதழ்கள், நிலைக்குழுவின் தரவரிசைக்கு உட்படாத ஆய்விதழ்கள் என்று பல ஆய்விதழ்கள் நீக்கம் செய்யப்பட்டன. இது போல் முதல் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஆய்விதழ்களின் மேல் வரப்பெற்ற புகார்களின் அடிப்படையிலும் பல இதழ்கள் முந்தைய பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டன. இறுதியாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட இதழ்களாக மொத்தம் 33,112 ஆய்விதழ்களைக் கொண்டு இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டது.      

* பாடப்பிரிவுகள்
இந்தப் பட்டியல் அறிவியல் (Science), சமூக அறிவியல் (Social Science), கலை மற்றும் மானுடவியல் (Art & Humanities), பன்முகத் தன்மையுடையது (Multidisciplinary) என நான்கு பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவான அறிவியல் (Science) பிரிவில், அறிவியல், மருத்துவம், பொறியியல், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அறிவியலை முதன்மைப் பாடங்களாகக் கொண்ட 248 பாடப்பிரிவுகள் உள்ளன.

சமூக அறிவியல் (Social Science) எனும் இரண்டாவது பிரிவில், கணக்குப் பதிவியல், வணிகம் மற்றும் மேலாண்மை, உளவியல், வளர்ச்சி, பொருளாதாரம், கல்வியியல் உள்ளிட்ட பாடங்களைக் கொண்ட 46 பாடப்பிரிவுகள் உள்ளன. கலை மற்றும் மானுடவியல் (Art & Humanities) எனும் மூன்றாவது பிரிவில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழியியல் பாடங்கள், ஆய்வியல், சமயப் படிப்புகள், இசை, நிகழ்த்துக்கலைகள் மற்றும் காட்சிக்கலைகள் உள்ளிட்ட 46 பாடப்பிரிவுகள் உள்ளன. இவை தவிர, பன்முகத்தன்மையுடையது (Multi disciplinary) எனும் நான்காவது பிரிவும் உள்ளது.

* அதிக எண்ணிக்கை
இப்பட்டியலில் அறிவியல் பிரிவில் மருத்துவம் (அனைத்துப் பிரிவுகள்) எனும் பாடப்பிரிவில் அதிக அளவாக 5485 ஆய்விதழ்களும், பொறியியல் (அனைத்துப் பிரிவுகள்) எனும் பாடப்பிரிவில் 1591 ஆய்விதழ்களும், சுற்றுச்சூழல் அறிவியல் (அனைத்துப் பிரிவுகள்) எனும் பாடப்பிரிவில் 1108 ஆய்விதழ்களும், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் பிரிவில் 1067 ஆய்விதழ்களும் அதிக அளவாக இடம் பெற்றிருக்கின்றன.

சமூக அறிவியல் பிரிவில் சமூக அறிவியல் (அனைத்துப் பிரிவுகள்) எனும் பாடப்பிரிவில் 1694 ஆய்விதழ்களும், கல்வி யியல் பிரிவில் 1473 ஆய்விதழ்களும், சட்டம் பாடப்பிரிவில் 1272 ஆய்விதழ்களும்  மொழியியல் மற்றும் மொழிப்பாடப்பிரிவில் 1189 ஆய்விதழ்களும், சமூகவியல் மற்றும் அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 1172 ஆய்விதழ்களும் அதிக அளவாக இடம் பெற்றிருக்கின்றன.

கலை மற்றும் மானுடவியல் பிரிவில் வரலாறு பாடப்பிரிவில் 1132 ஆய்விதழ்களும், இலக்கியம் மற்றும் இலக்கியக் கருத்தியல் பாடப்பிரிவில் 794 ஆய்விதழ்களும், ஆய்வியல் பாடப்பிரிவில் 705 ஆய்விதழ்களும் அதிக அளவாக இடம் பெற்றிருக்கின்றன. இப்பிரிவில் இடம்பெற்றிருக்கும் மொழிப்பாடங்களுக்கான ஆய்விதழ்களில் ஆங்கிலம் 375, இந்தி 245, சமஸ்கிருதம் 95, உருது 78 என்று இடம்பெற்றிருக்கின்றன. இப்பட்டியலில் தமிழ்மொழிக்கான ஆய்விதழ்கள் பட்டியலில் முத்துக்கமலம் மின்னிதழ் உள்ளிட்ட 22 ஆய்விதழ்கள் இடம்பெற்றிருக்கின்றன.  

* ஆய்விதழ்களின் பயன்பாடு
இந்தியப் பல்கலைக்கழகங்களில் Ph.D, M.Phil போன்ற ஆய்வியல் படிப்புகளைப் படித்துவரும் மாணவர்கள் தங்களுடைய துறைக்கான பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள ஆய்விதழ்களின் பட்டியலில் இருக்கும் ஆய்விதழ்களிலிருந்து தங்கள் ஆய்வுகளுக்கான தரவுகளைச் சேகரித்துக் கொள்ள முடியும். இது போல், ஆய்வு மாணவர்கள் தங்களுடைய ஆய்வுப்பணிகளில் ஒன்றாக இருக்கும் ஆய்வு தொடர்பான கட்டுரைகளை மேற்காணும் ஆய்விதழ்களில் வெளியிடலாம்.

இதுபோல் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி வரும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வி தொடர்பான பிற பணிகளில் இருப்பவர்கள் தங்களுடைய ஆய்வுக்கட்டுரைகளை மேற்காணும் ஆய்விதழ்களில் வெளியிட்டுத் தங்களுடைய கல்வி தொடர்பான செயல்திறனை (Academic Performance) உயர்த்திக்கொள்ள முடியும். இந்தச் செயல்திறனுக்கென அவர்கள் கல்வி தொடர்பான மதிப்பீடுகளுக்குத் தரப்புள்ளிகள் அளிக்கப்படுகின்றன. இத்தரப்புள்ளிகள் கல்லூரி / பல்கலைக்கழக / ஆய்வு நிறுவனங்களில் பணி தேடல், பணி உயர்வு போன்ற சில பயன்பாடுகளுக்குக் கூடுதல் தகுதி.

* ஆய்விதழ்களின் பட்டியல்
http://www.ugc.ac.in/journallist/ எனும் இணையப் பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதிலுள்ள அறிவியல், சமூக அறிவியல், கலை மற்றும் மானுடவியல் பிரிவில் பல்வேறு பாடப்பிரிவுகளின் பெயர்கள் மற்றும் ஆய்விதழ்களின் எண்ணிக்கை ஆகியவை தரப்பட்டிருக்கின்றன. தேவையான பாடப்பிரிவின் மேல் சொடுக்கினால், அந்தப் பாடப்பிரிவிலுள்ள ஆய்விதழ்கள் அனைத்தும் 1. பார்வை, 2. வரிசை எண், 3. ஆய்விதழ் எண், 4. ஆய்விதழின் தலைப்பு, 5. வெளியீட்டாளர், 6. பன்னாட்டுத் தரத் தொடர் எண் ஆகியவைகளைக் கொண்ட அட்டவணையின் கீழ் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த அட்டவணையை 25, 50, 100 எனும் அளவுகளில் பெறுவதற்கான வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. இவை தவிர, வலது புறம் தொடர்புடைய குறியீட்டுச் சொல்லினை உள்ளீடு செய்து தேடுதல் மூலம் கண்டறிவதற்கான வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அட்டவணையில் இடம் பெற்றிருக்கும் பார்வை எனுமிடத்தில் சொடுக்கினால், அந்த ஆய்விதழின் பெயர், பன்னாட்டுத் தரத் தொடர் எண், ஆதாரம், பாடம், வெளியீட்டாளர், வெளியிடும் நாடு, அகன்ற பாடப்பிரிவு வகைப்பாடு எனும் தலைப்புகளில் சில விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன. இப்பக்கத்தில் அச்சிதழ்களாக இருப்பின் அச்சிதழ் அலுவலக முகவரியும், மின்னிதழாக இருப்பின் வலைப்பக்க முகவரியும் கொடுத்திருந்தால் ஆய்வு மாணவர்கள் அதனை எளிதில் அடைவதற்கான வாய்ப்புண்டு என்று சில கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

* புகார்கள்
மேற்காணும் ஆய்விதழ்களின் பட்டியல் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிலைக்குழு முழுமையாகப் பரிசீலித்த பின்பே வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்விதழ்களில் தரமுடையதல்ல எனக் கருதும் நிலையிலும், பணம் அல்லது பிற வழிகளில் வேட்டையாடும் நிலையிலான ஆய்விதழ் மற்றும் போலியான ஆய்விதழ் எனக் கருதும் நிலையிலுள்ள இதழ்கள் குறித்த புகாரினை ugcjournal17@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்குத் தகுந்த ஆதாரங்களுடன் அளிக்கலாம்.

இந்தியப் பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் மேலாய்வு (D.Lit), முனைவர் (Ph.D), ஆய்வியல் நிறைஞர் (M.Phil) உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப்படிப்புகளில் சேர்க்கை பெற்றிருக்கும் மாணவர்கள், பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் ஆசிரியப் பணிகளில் பணியாற்றுபவர்கள், ஆய்வு நிறுவனங்களில் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் போன்றவர்கள் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டிருக்கும் ஆய்விதழ்களின் பட்டியலைப் பார்வையிட்டுத் தங்களுக்குத் தேவையான தரவுகளைத் தரக்கூடிய, தங்கள் ஆய்வு தொடர்புடைய ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட ஏற்ற ஆய்விதழ் குறித்த விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

உ.தாமரைச்செல்வி