இளநிலை ஆராய்ச்சியாளர் பணிச்சேர்க்கைக்கு உதவும் NET தேர்வுக்குத் தயாரா?

9/11/2017 11:57:45 AM

இளநிலை ஆராய்ச்சியாளர் பணிச்சேர்க்கைக்கு உதவும் NET தேர்வுக்குத் தயாரா?

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழுள்ள சிபிஎஸ்சி வாரியம் இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் (Assistant Professor) மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) பணிகளில் சேர்க்கை பெறுவதற்கான தேசியத் தகுதித் தேர்வு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.

* பாடப்பிரிவுகள்
இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகள் குறித்த பாடங்கள், கலை மற்றும் பண்பாட்டுப் பாடங்கள், நூலகத் தகவலியல், சமயம், உடற்கல்வியியல், இதழியல், புவியியல், சமூக மருத்துவம், தடயவியல், மின்னணு அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், மனித உரிமை மற்றும் செயல்பாடுகள், நாடகம் மற்றும் அரங்கம், காட்சிக்கலை, நாட்டுப்புற இலக்கியம் என்று மொத்தம் 84 பாடங்களுக்குத் தேசியத் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.  

* கல்வித்தகுதி
முதுநிலைப் படிப்பில் பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் 55% மதிப்பெண்களோடு தேர்ச்சியும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) போன்ற பிரிவினர் 50% மதிப்பெண்கள் தேவை. சில பாடப்பிரிவுகளுக்குத் தொடர்புடைய முதுநிலைப் பட்டப்படிப்பு தவிர்த்த இணையான பிற பாடப்பிரிவுகளில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேற்காணும் பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அது தற்காலிகமானதாகவே கருதப்படும்.

அவர்களுடைய முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்வு முடிவுகளுக்குப் பின்பே அது தகுதியுடையதாகக் கொள்ளப்படும். மேலும் முதுநிலைப் பட்டப்படிப்புத் தேர்வு முடிவுகளில் மேற்காணும் தகுதி மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்தத் தேர்வு மாணவர்களுக்கு தற்போது ஆதார் எண், விவரத்தினைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.  

* வயது வரம்பு
இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) தகுதிக்கு (JRF-NET) விண்ணப்பிப்பவர்கள் 1-11-2017 அன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 5 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு. உதவிப் பேராசிரியர் தகுதிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பில்லை.

* விண்ணப்பப் படிவம்
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://cbsenet.nic.in/cms/public/home.aspx எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் ரூ.1000/- இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500/- எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் ரூ.250 என்று விண்ணப்பக் கட்டணத்தை சிண்டிகேட் / கனரா / ஐசிஐசிஐ / எச்டிஎப்சி வங்கிக் கிளைகளில் செலுத்துவதற்கான வசதியினை விண்ணப்பிக்கும் போது செலக்ட் செய்துகொண்டு, அதற்கான இணைய சலானைத் தரவிறக்கி மேற்காணும் தேர்வு செய்த வங்கிக் கிளைகளில் பணத்தைச் செலுத்தலாம்.

இணையத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 11-9-2017. விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 12-9-2016. அதன் பின்னர், விண்ணப்பத்தில் திருத்தங்கள் ஏதும் செய்துகொள்ள வேண்டியிருப்பின் 19-9-2017 முதல் 25-9-2017 வரை இணையதளத்தில் திருத்தங்களைச் செய்துகொள்ளலாம். இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (CBSE) அச்சிட்டு எடுத்து அனுப்ப வேண்டியதில்லை.

* தேசியத் தகுதித் தேர்வு
இந்தியா முழுவதும் 91 மையங்களில் நடைபெறவிருக்கிறது. இத்தேர்வு எழுதுபவர்களுக்கான அனுமதிச்சீட்டு மேற்காணும் இணையதளத்தில் அக்டோபர் மூன்றாவது வாரத்தில் பதிவேற்றப்
படும். மேற்காணும் இணையதளத்திலிருந்து அனுமதிச்சீட்டினைத் தரவிறக்கிக்கொள்ளலாம்.

* தேர்வுகள்
மூன்று தாள்களைக்கொண்ட இத்தேர்வு 5-11-2017 அன்று நடைபெறவிருக்கிறது. இந்நாளில் முதல் தாள் காலை 9.30 முதல் 10.45 மணி வரையிலான முதல் அமர்விலும், இரண்டாம் தாள் காலை 11.15 முதல் மதியம் 12.30 மணி வரையிலான இரண்டாம் அமர்விலும், மூன்றாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.30 வரையிலான மூன்றாவது அமர்விலும் நடைபெறும். இத்தேர்வில் தகுதியுடையவர்களாகத் தேர்ச்சி பெறப் பொதுப்பிரிவினர் மூன்று தேர்வுகளிலும் சேர்த்துக் குறைந்தது 40% மதிப்பெண்களும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35% மதிப்பெண்களும் பெற்றிருப்பது அவசியம். தேர்வு முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும்.

* கூடுதல் தகவல்கள்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் தேசியத் தகுதித் தேர்வுப் பிரிவிற்கான 7042399520, 7042399521, 7042399525, 7042399526 எனும் அலைபேசி எண்களிலோ net@cbse.gov.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.

முத்துக்கமலம்