மாணவர்கள் மனங்களை சிதைக்கின்றனவா கல்விக்கூடங்கள்?

12/19/2017 10:48:23 AM

மாணவர்கள் மனங்களை சிதைக்கின்றனவா கல்விக்கூடங்கள்?

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

அனைத்து ஊடகங்களிலும் தொடர்ச்சியாக ஒரு அசம்பாவித செய்தி வந்தவண்ணம் உள்ளது. அது பள்ளிக் குழந்தைகள் தற்கொலை செய்துகொள்வது. இந்தச் செய்தி உண்மையிலேயே எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே பனப்பாக்கத்தைச் சேர்ந்த ரேவதி (16), சங்கரி (16), தீபா (16), மனீஷா (16) ஆகிய 4 பேர் அங்குள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +1 படித்து வந்த மாணவிகள் 4 பேரும் சரியாகப் படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதாகவும், இதனால் மனமுடைந்த 4 மாணவிகளும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கோட்டூர் என்ற  ஊரை சேர்ந்த 7-ம் வகுப்பில் படிக்கும் 12 வயது சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டு வகுப்பறை பெஞ்சில் ரத்தம் கசிந்து விட்டது. இதைப் பார்த்த ஆசிரியர் அந்தச் சிறுமியை வகுப்பைவிட்டு வெளியே போகச் சொல்லி தண்டித்திருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி இரவு பக்கத்து வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கோவை சோமனூரில் ஆசிரியர் திட்டியதால் +2 மாணவர் தற்கொலை... திருவாரூரில் மாணவரின் தலைமுடியை வெட்டிய ஆசிரியை கைது... கோவிந்தவாடி அகரத்தில் எட்டாம் வகுப்பு மாணவர் தீக்குளிப்பு...என தமிழகத்தில் அடுத்தடுத்த சோக நிகழ்வுகள் பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சூழலில் ஆசிரியர்கள் கண்டிப்பு மற்றும் எடுக்கும் நடவடிக்கைதான் காரணம் என்று  ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமுதாயத்தையும் அதிரவைத்துள்ளது. குழந்தைகளை அடிக்கக் கூடாது, திட்டக்கூடாது என ஆசிரியர்களின் கைகள் எல்லா நிலையிலும் கட்டப்பட்டால் நூறு சதவீதம் தேர்ச்சியைக் கல்வித்துறை எதிர்பார்ப்பது சரியா என்று ஆசிரியர்கள் நியாயம் கேட்டு வருகின்றனர். அப்படியென்றால் இந்தப் பிரச்னைக்கு தீர்வுதான் என்ன என கல்வியாளர்கள் மற்றும் மனநல ஆலோசகர்களின் கருத்துகளைப் பார்ப்போம்.

*சு.மூர்த்தி, அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்.“கொலைகளைக் காட்டிலும் தற்கொலைகளால்தான் மனித நாகரிகம் சாகிறது - என்று இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் அர்னால்டு ஜெ. டைன்பீ (ARNOLD J.TOYNBEE) கூறியிருக்கிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களின் தற்கொலைகள் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் மிகுந்த கவலை அளிக்கும் நிகழ்வாக உள்ளன.

பொதுத் தேர்வு மற்றும் நுழைவுத்தேர்வு தோல்விகள் மாணவர்களின் தற்கொலைக்கு முதன்மைக் காரணங்களாக உள்ளன. அதேபோல் பல்வேறு சமூக, சாதிய, கல்விச் சூழல்கள் ஏற்படுத்தும் நெருக்கடிகளால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிக்கடி பாதிப்புக்கு ஆளாகிறார்கள். தற்கொலை ஒன்றே நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்கான ஒரேவழி என்று முடிவெடுத்துத் தன்னை மாய்த்துக்கொள்கின்றனர்.

தற்கொலைகளை முட்டாள்தனமான முடிவு என்று எளிமையாகவே பொதுச் சமூகம் பார்க்கிறது. மாணவ சமூகத்திற்கு வழிகாட்டியாக ஆசிரியர் சமூகம் இருக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட மாணவர்களையே குற்றவாளிகள் என்று ஈவு இரக்கமின்றி கூறிவிட்டுத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் தன்னலப் போக்குகளையே ஆசிரியர் சமூகத்தினர் பிரதிபலிக்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும். தற்கொலைகளுக்கான சமூக, உளவியல் காரணங்களைக் கண்டறிந்து அவற்றை சரி செய்யவேண்டும். ஆனால், நிரந்தரமான தீர்வு என்பது தனிமனித வாழ்க்கை நலன்களைப் பாதுகாக்கும் கொள்கை நோக்கிலான அரசியல், பொருளாதார மாற்றங்கள் மூலமே சாத்தியமாகும்.’’

முனைவர் பி.இரத்தினசபாபதி,
முன்னாள் கல்வியியல் பேராசிரியர்.

“சமீப நாட்களில் மாணவர்களின் தற்கொலை நிகழ்வுகள் மிகுந்து வருகின்றன.‘ஆசிரியர் திட்டினார்’, ‘பெற்றோரை அழைத்துவரச் சொன்னார்கள்’என்பன போன்ற காரணங்கள் அத்தகைய தற்கொலை முடிவுக்குரியதாக இருந்தாலும் ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ என்றாற்போல பலமுனைகளிலிருந்தும் ஆசிரியர்மீது தாக்கு தல்கள் வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் ஆசிரியை மாணவர் ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டார்.

அப்போதும், ஆசிரியருக்கு உளவியல் அணுகுமுறை தெரியவில்லை என்றுதான் பேசப்பட்டது. ஆசிரியர் மட்டுமே பள்ளிக்கூடத்தின் முழு இயக்குதலுக்குப் பொறுப்பாக முடியாது. எந்த ஆசிரியரும் மாணவர்களைச் சாகடிக்க வேண்டும் என்று விரும்புபவர் அல்லர். ‘மாணவர்கள் கற்க வேண்டும்’என்ற தன்னார்வ அழுத்தம், ‘தேர்வில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சியுறச் செய்ய வேண்டும்’என்ற மேலாண்மை அழுத்தம். ‘ஒழுங்குப் பிறழ்ச்சியோடு செயல்படும் பதின்ம வயதினை எதிர்கொள்ளும்’அழுத்தம் இவற்றிற்கிடையேதான் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பிருந்ததுபோல் இப்போது மாணவர்கள் இல்லை.

அவர்களுடைய பெற்றோர்களால் அளவுக்கு மீறிய செல்லம் கொடுக்கப்படுகிறது. எந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை விட்டுக்கொடுப்பதில்லை. ஆசிரியர்கள் குறை கூறினாலும் பெற்றோர்கள் தம் பிள்ளையின்பால் ஒருதலைச் சார்பான முடிவினையே எடுக்கின்றனர். இந்தப் போக்கால் மாணவர்கள், ‘நாம் பெற்றோர்களால் பெரிதும் மதிக்கப்படுகிறோம்’ எனக் கருதுகின்றனர். எந்த ஒரு குற்றத்தையும் பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை… மாறாக இன்முகத்தோடு பொறுத்துக்கொள்கின்றனர்.

இதனால் மாணவர்களின் உள்ளம் மென்மையாகிறது. மேலும், இன்றைய மாணவர்கள் சமுதாயப் பின்னணியால் பக்குவப்படாத மென்மை உள்ளத்தவர்களாக இருக்கின்றனர். அதற்குக் காரணம் பள்ளிக்கூடத்தில் படிப்பு, முடிந்தால் தனிப்படிப்பு அது முடிந்தவுடன் தங்களைத் தங்கத் தாம்பாலத்தில் தாங்கும் பெற்றோரிடமிருத்தல். இதனால் மாணவர்கள் தங்களைப் பிறர் கடிந்துகொள்வதையோ… தங்களின் தவறான செயல்களைப் பெற்றோருக்குத் தெரிவிப்பதையோ விரும்பாத மென்மை உள்ளம் கொண்டவர்களாக ஆகின்றனர். ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’என்பது இவர்களைப் பொறுத்தவரை இயலாதவொன்று. எனவே, தங்களை மாய்த்துக்கொள்கின்றனர்.

சமுதாயத்தில் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் பக்குவத்தில் வளர்க்கபட்டிருந்தால் இந்த துயர முடிவை அவர்கள் எடுக்கமாட்டார்கள். ஆசிரியரைத் தண்டிப்பதும் பணிநீக்கம் செய்வதும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கான தீர்வாகாது.’’

*ஷ்யாம் சுந்தர், இயக்குநர், குழந்தைநேயப் பள்ளி.“பள்ளிக் குழந்தைகள் தற்கொலை செய்துவருகின்ற செய்தி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காரணங்கள் எதுவாக இருந்தாலும் தொடர்ந்து நடைபெற்றுவரும் சம்பவங்கள் எதைக் காட்டுகின்றன. பள்ளியில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து வீட்டில் அல்லது பள்ளியில் இருக்கும்போது குழந்தைகளுக்கு பள்ளியும் ஆசிரியர்களும்தான் பொறுப்பு. காரணம் பள்ளிக்கூடம் வெறும் பாடம் கற்பிக்கின்ற இடம் மட்டுமன்று.

குழந்தைகளுக்கு அனைத்துவிதமான பாதுகாப்பையும் அளிக்கின்ற இடமாக இருக்கவேண்டும். அது சட்டபூர்வமான குழந்தைகளுக்கு பாதுகாப்பை அளிக்கக்கூடிய ஓர் இடமாகும். அந்தவகையில் மேற்கண்ட சம்பவங்கள் பள்ளியும் ஆசிரியர்களும் தங்கள் பொறுப்பிலிருந்து தவறியிருக்கின்றனர் என்றே கூறலாம்.

நான்கு மாணவிகள் பிரச்னை தொடர்பாக ஆசிரியர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். அது சரிதான். ஏனென்றால் வேறெந்த பள்ளியில் நடந்திருந்தாலும் பெரும்பாலானவர்களுடைய அணுகுமுறை அதுவாகத்தான் இருந்திருக்கும். ஆக நம்மிடம் உள்ளவரை குழந்தைகளுடைய பாதுக்காப்புக்கு நாம்தான் பொறுப்பு என்ற மனநிலை யாருக்கும் இல்லை என்பதையே காட்டுகிறது.

குழந்தைகள் என்பதாலேயே எந்தமாதிரி யான பிரச்னைக்கும் காரணம் வேறு ஒரு இடத்திலிருந்து தொடங்குகிறது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் குழந்தைகளை நாம் நம்பவேண்டும். அப்போதுதான் குழந்தைகள் நம்மை நம்புவார்கள். தற்கொலை செய்துகொண்ட நான்கு மாணவிகளும்  +1 படித்து வந்தாலும் அவர்கள் குழந்தைகள் என்ற அடிபடையிலேதான் இந்தக் கருத்தை பதிவு செய்கிறேன்.

அவர்களின் பிரச்னைகள், தேவைகள், சந்தேகங்கள் அனைத்தையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய நம்பிக்கைக்குரியவர்களாக ஆசிரியர்களோ பெற்றோர்களோ இருந்திருந்தால் இப்படியொரு சம்பவம் நடைபெற வாய்ப்பிருந்திருக்காது. குறிப்பாக கல்வி உளவியல், குழந்தை உளவியல் படித்துவிட்டு வருகின்ற ஆசிரியர்கள் அப்படி அணுகுவதில்லை என்பது வியப்பாக உள்ளது.

குழந்தைகளுடைய வயது சார்ந்த நடத்தைகளைப் புரிந்துகொள்ளவும் இயல்பிலிருந்து மாறுபட்ட நடத்தையை உணரும்போது அவர்களுக்கு வழிகாட்டவும் ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்’’

ஸ்ரீவந்தனா, மனநல நிபுணர்.
“தனிமனிதச் சிக்கல்களே தற்கொலை

களுக்குக் காரணம் என்ற கருத்தே பெரும்பாலும் எல்லோருடைய பொதுப்புத்தியிலும் பதிவாகியிருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல. சமூகத்தில் நிலவும் பல்வேறு சிக்கல்களால் மக்கள் அன்றாடம் பல இன்னல் களுக்கு ஆளாகிறார்கள். நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்கான வழிகாட்டுதலோ, உதவியோ தான் வாழும் சமூகத்திடமிருந்து பெற முடியாத நிலையில் பாதிப்புக்கு ஆளாகும் சிலர்  தற்கொலை முடிவுக்குச் செல்கிறார்கள். அதே சமயம், தற்கொலை செய்துகொள்பவர்கள் அனைவரும் இறக்க விரும்புவதில்லை, இறந்துவிடுவதற்கு விரும்பும் அனைத்து நபர்களும் தற்கொலை செய்துகொள்வதில்லை.

தற்கொலை செய்துகொள்வதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது மனநல பிரச்னைகள் மற்றும் உடல்ரீதியான பிரச்னைகள்.  இன்றைய மாணவர்களே, நாட்டின் நாளைய எதிர்காலம். நாட்டை நிர்வகிக்கும் சிற்பிகளைச் செதுக்கும் ஒப்பற்ற பணியை, பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.

ஆனால், போட்டி நிறைந்த இன்றைய உலகில், பாடங்களில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பது மட்டுமே பெற்றோர் பலரின் எண்ணமாக உள்ளது; ஏனெனில் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்வை கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒருசில சூழ்நிலைகளில் கடினமாக நடந்துகொள்கின்றனர். தற்கொலை செய்து கொள்வது என்பது குழந்தைகளிடம் புரிதல் இல்லாததுதானே தவிர பெற்றோர்கள் காரணம் இல்லை.

தேர்வில் தோல்வி அடைந்தால் தற்கொலை செய்துகொள்பவர்கள் 30% பேர். ஆனால், இன்று வளர்ந்து குழுவாக தற்கொலை செய்துகொள்ளும் நிலையை ஆரம்பித்துள்ளனர். பொதுவாக இந்த மனநிலையில் உள்ளவர்கள் இரண்டு கண்ணோட்டத்தில் செயல்படுகின்றனர். ஒன்று இறந்து போகவேண்டும் என்பதற்காகவும் மற்றொன்று தங்கள் சூழ்நிலை மாறவேண்டும் என்ற ஏக்கத்துடனும் செயல்படுகின்றனர்.

இவற்றில் இருந்து விடுபட அதிகப்படியான விழிப்புணர்வு தேவைப்படுகிறது. சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் வெற்றி தோல்விகளை சமமாகப் பாவிக்கும் முறைகளைக் கற்றுக் கொடுக்கும்போது எந்த ஒரு பிரச்னைகளிலும் பொறுமையாகவும் தைரியமாகவும் செயல்படுவார்கள். இதற்கு பொற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என மூவருக்கும் உளவியல் அறிவு தேவைப்படுகிறது.”

நல்ல நண்பர்களின் தொடர்பு, பெற்றோரின் முறையான அரவணைப்பு மற்றும் ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதல் போன்றவற்றால் மாணவர்களைப் பண்பட்டவர்களாக்கிட வேண்டும். எளிதில் மனமுடையும் மனிதர்களாக இருக்கும் நிலையில் இருந்து மாணவர்களை மாற்ற வேண்டும். இத்தனை உயிர் போன பின்னும் அதற்கான திட்டங்கள் தீட்டப்படாவிட்டால் மேலும் பல இழப்புகளை நாம் காணவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடும்.

- தோ.திருத்துவராஜ்

X