தொடக்கக் கல்வியில் தமிழக அரசின் இருவேறு ஆணைகள் சொல்வது என்ன? ஓர் அலசல்

6/25/2018 2:39:56 PM

தொடக்கக் கல்வியில் தமிழக அரசின் இருவேறு ஆணைகள் சொல்வது என்ன? ஓர் அலசல்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சர்ச்சை

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்ட விதிமுறைகளின்படி, தனியார் சுயநிதி சிறுபான்மையற்ற பள்ளிகளில் அறிமுக வகுப்பில் சேர்க்கை செய்யப்படும் மாணவர்களில் 25 சதவீதம் நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினரை சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித் துறை 1.4.2013 அன்று அரசு ஆணை வெளியிட்டது. அப்போதிருந்து ஒரு குழப்பம் தொடர்கதையாகிவிட்டது.

தனியார் பள்ளிகளில் உள்ள வசதி வாய்ப்புகளை சமூகத்தில் நலிவுற்ற ஏழை எளிய குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமாம், அதனால் அரசுப் பள்ளிக்கு வரவேண்டியவர்களை தனியார் பள்ளியில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதுதான் அது.

அதேநேரத்தில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் ஓர் ஆணையிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால், புதிய மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றால் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதற்கான காரணத்தைக் கூற வேண்டும் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஆணைகளையும் அரசேதான் பிறப்பிக்கிறது. தனியார் பள்ளிகள் சிறந்த பள்ளிகள் என்பதற்கான அளவுகோல் எது? 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சியா.. அரசுப் பள்ளிகளைப்போல் தனியார் பள்ளிகளில் அடைவுத்திறன் மதிப்பீட்டு தேர்வுகள் உண்டா? வாசித்தல் திறன் ஆய்வு உண்டா? அரசுப் பள்ளிகளில் பராமரிக்கும் பதிவேடுகள் அங்குண்டா? இங்கிருக்கும் நடைமுறைகள் அங்கு எதுவும் இல்லாதபோது அரசுப் பள்ளியையும் தனியார் பள்ளியையும் ஒப்பிடுவது எவ்வாறு என்பதே பெரும்பாலானவர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்டச் செயலாளர் பாலசண்முகம் நம்மிடம் பகிர்ந்துகொண்ட கருத்துகளைப் பார்ப்போம்…    ‘‘தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்கினாலும் தனியார் பள்ளிகளின் மீதுள்ள  மோகத்தால் பணமுள்ளவர்கள் தனியார் பள்ளி களை நாடிச்செல்கின்றனர்.

தனியார் பள்ளிகளில் பணம் செலுத்த முடியாத ஏழை எளியவர்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர். அவ்வாறு வருபவர்களையும் தடுக்கின்ற வகையில் தனியார் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளை சேர்த்துவிடுங்கள். உங்களிடம் பணமில்லை என்றாலும் பரவாயில்லை அரசே தனியார் பள்ளிகளுக்குப் பணத்தைச் செலுத்தும் என்று கூறுகிறது. தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை உறுதிசெய்ய வேண்டும்  என்கிறது அரசு.

காமராசர் எண்ணிலடங்கா அரசுப் பள்ளிகளைத் திறந்தார். அரங்கநாயகம் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அனுமதி இலகுவாக்கப்பட்டது. தற்போது அரசுப் பள்ளிகள் மறைமுகமாக நசுக்கப்படுகிறது என்பதுதான் வருத்தமான செய்தி. 10க்கு குறைவாக மாணவர்கள் எண்ணிக்கையுள்ள அரசுப் பள்ளிகள் வரும் செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

800க்கும் அதிகமான தொடக்கப் பள்ளிகள் மாநிலம் முழுவதும் மூடப்படவுள்ளதாக கணக்கெடுப்பு சொல்கிறது. அரசின் கொள்கை முடிவில் யாரும் குறை சொல்லக்கூடாது. இந்த அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடு சரியில்லாததால்தான் என அவதூறு பரப்பப்படுகிறது. ஆதாரத்துடன் இதை நிரூபிக்க முடியுமா என்றால் அது கேள்விக்குறிதான்’’ என்று தீர்க்கமாக சொல்கிறார் பாலசண்முகம்.

இந்த அரசாணையில் தவறு நிகழும் இடம் எது என்பதை பாலசண்முகம் விளக்குகையில், ‘‘ஒரு சிறிய கணக்கை நடுநிலையாளர்கள் உற்றுநோக்கினால் எங்கே தவறு நிகழ்ந்துள்ளது என்பது தெளிவாகப் புரியும். கல்வி உரிமைச்சட்டத்தின்படி ஒவ்வொரு தனியார் பள்ளியும் தனது சேர்க்கையில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசாணை சொல்கிறது. இவர்களுக்காக அந்தத் தனியார் பள்ளி நிர்ணயித்துள்ள கட்டணத்தை அரசே செலுத்துகிறது.

ஒப்பீட்டு அளவில் குறைவான தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்ள நாகை மாவட்டத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இந்தக் கல்வியாண்டில் நாகை மாவட்டத்தில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சேர்த்து இலவச ஒதுக்கீட்டுக்காக கணக்கிடப்பட்ட இடங்கள் 2540 ஆகும். இந்த ஏழை மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வைத்தது அரசின் வெற்றியாக இருக்கலாம்.

அரசு விளம்பரம் செய்து ஆணை பிறப்பித்து இந்த 2540 மாணவர்களையும் குலுக்கல் மூலமாக தேர்ந்தெடுத்து தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்திருப்பதன் உள்நோக்கம் என்ன? நாகை மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு இதற்காக அரசு செலுத்திய தொகை சுமார் 2 கோடியாகும். தனியார் பள்ளிகளில் பயிலும் மற்ற மாணவர்களாவது கட்டணம் செலுத்துவதில் சுணக்கம் காட்டுவார்கள். ஆனால், அரசு சற்று தாமதமாக வழங்கினாலும் பெருந்தொகையாக வழங்குவதால் தனியார் பள்ளி முதலாளிகள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.’’ என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘சரி முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்த 2540 மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் இந்த அரசாணை இல்லையென்றால் எந்தப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருப்பார்கள்? சந்தேகமின்றி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தான் சேர்ந்திருப்பார்கள். இந்த மாணவர்கள் பிரிந்து சென்று சுமார் 200 பள்ளிகளில் சேர்ந்து 200 அரசுப் பள்ளிகளை வாழவைத்திருப்பார்கள். நேரடியாக சொல்லவேண்டுமானால் 200 பள்ளிகளில் சேர வேண்டிய மாணவர்களை அரசே அக்கறையெடுத்து தனியார் பள்ளிகளில் சேர்த்து அந்த முதலாளிகளை வாழவைக்கிறது, இது நாகை மாவட்ட கணக்கு மட்டும்.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் கணக்கிட்டால் வாழ்ந்துகொண்டிருக்கும் தனியார்பள்ளிகளின் எண்ணிக்கையும் வீழ்ந்துகொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையும் மலைக்க வைக்கும்’’ என்கிறார். ‘‘ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இலவசமாக படிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலரின் வயிற்றெரிச்சல் குமுறல் என இது திசைத்திருப்பப்படலாம்.

ஆனால், இத்திட்டத்தில் தங்கள் குழந்தைகளைப் பெருமைக்காக சேர்த்துவிட்டு மௌனமாக அழுதுகொண்டிருக்கும் பெற்றோர்களிடம் உரையாடினால் உண்மை நிலைமை புரியும். இலவசம் என நினைத்து ஆசைப்பட்டு தனது ஒரு குழந்தையையாவது தனியார் பள்ளியில் சேர்த்து செலவைக் குறைக்கலாம் என நினைக்கும் பெற்றோர்களிடம் மறைமுகமாக கொள்ளையடிக்கப்படுகிறது. கல்விக்கட்டணத்தை மட்டும் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளும் தனியார் பள்ளிகள் சீருடை, புத்தகம், நோட்டு, கராத்தே கிளாஸ், யோகா பயிற்சி, ஹிந்தி வகுப்பு என பெருந்தொகையை பிள்ளைகள் வழியாகவே ஏழைப் பெற்றோர்களிடமிருந்து கொள்ளையடிக்கின்றன.

இலவச ஒதுக்கீட்டில் ஓரு குழந்தையைச் சேர்த்த ஏழை பெற்றோர் சேர்ந்து சென்றுவருவதற்கு வசதியாக அக்குழந்தையின் சகோதரனையோ சகோதரியையோ கஷ்டப்பட்டு கட்டணம் செலுத்தி படிக்கவைக்கும் கொடுமையும் நடைபெறுகிறது. மேலும் அரசே கட்டணம் செலுத்தி 25 சதவீதம் மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பதால் அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளே சிறந்தது என்ற கருத்து பொதுமக்கள் மனதில் மீண்டும் மீண்டும் பதியவைக்கப்படுகிறது.

இது ஆசிரியர்கள் மத்தியில் தற்போது பகிரப்படும் வேதனையான விஷயம். இந்த ஆண்டு கோடை விடுமுறையில் கொளுத்தும் வெயிலில் மாணவர் சேர்க்கைக்காக குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்ற ஆசிரியர்களுக்கு பெரும்பாலான இடங்களில் கிடைத்த பதில் “எங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்ப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்திருக்கிறோம்.

அங்கு இடம் கிடைக்காவிட்டால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கிறோம்” என்பதுதான். சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் பிற்படுத்தப்பட்ட குழந்தைகளின் அறிவை சாதிமத பேதமின்றி தூண்டிவிடும் ஒரே போக்கிடம் அரசுப் பள்ளிகள் மட்டுமே. அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு யார் காரணம் என்பதை ஆழ்ந்து யோசித்தால் தெரியும்’’ என்றார் ஆழ்ந்த வருத்தத்துடன்.

- தோ.திருத்துவராஜ்

X