தையலகம் தொடங்கி கைநிறைய சம்பாதிக்கலாம்!

6/25/2018 2:41:03 PM

தையலகம் தொடங்கி கைநிறைய சம்பாதிக்கலாம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சுயதொழில்

மாதம் ரூ.1,30,000 வருமானம் ஈட்டலாம்!

மனிதர்களின் அடிப்படை தேவைகளில் முக்கியமான ஒன்றாக ஆடை அங்கம் வகிக்கின்றது. ஆடை அணிவது தேவை மட்டுமின்றி ஒருவரின் தோற்றத்தை உயர்த்தி காட்டுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால்தான், ஆள்பாதி ஆடைபாதி என்று சொல்கின்றார்கள்.

உடையைப் பொறுத்தவரை காலத்திற்கேற்ப ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆடைகள் வடிவமைப்பில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன. ரெடிமேட் ஆடைகள் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் இன்றும் கடைகளில் தைத்து ஆடை உடுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் விதவிதமாக ஆடைகளை வடிவமைத்து உடுத்துகிறார்கள்.

திருவிழாக்காலங்கள், திருமண விழாக்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி காலங்களில் மட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு வழங்குவது, தள்ளுபடி காலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்களில் சீருடைத் தேவை போன்ற காரணங்களால் ஆடைகளின் தேவையும் விற்பனையும் அதிகரித்தே காணப்படுகிறது. எனவே, ஆடைகளின் தேவையை வைத்து அதுசார்ந்த தொழிலான தையல் தொழிலை முறையாகத் திட்டமிட்டு நடத்தினால் நிரந்தரமான நல்லதொரு வருவாயை ஈட்ட வாய்ப்புள்ளது.

தையல் தொழில் என்றதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் தையல்கடை வைப்பது என்பது வேறு. அதற்கு மாறாக வர்த்தக ரீதியாக தையல் தொழிலை மேற்கொள்வது எப்படி என்பதுதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதாவது, பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு தேவையான சீருடைகளை மொத்தமாக ஆர்டர் எடுத்து தைக்கும்  வகையில் தொடங்க வேண்டும். தையல் தொழிலைத் தொடங்குவதற்கு பெரிய அளவிலான முதலீடு தேவையில்லை. ஆனால், இத்தொழிலை முறையாக கற்றுக்கொண்டு சிறிய அளவில் தொடங்கி படிப்படியாக வளர்ச்சி பெற முடியும்.

சிறப்பம்சங்கள்

* ஆண்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான  ஆடை வகைகளை நேர்த்தியாகத் தைத்துக் கொடுக்கும் அனுபவத்தை வளர்த்துக்கொண்டால் போதும்.

* நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் தையல் தரமாக இருக்கும்.

* விருப்பத்திற்கேற்ப தேவையான டிசைனில் சிறந்த முறையில் சரியான அளவில் தயாரித்து கொடுக்கலாம். நல்ல லாபம் தரும் தொழில்.

* ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் ஆடை தைத்துத் தர அதிக அனுபவம் தேவை. அதனால் ஆண்களின் ஆடைகளை தைக்கும் டெய்லர், பெண்களின் ஆடைகளைத் தைக்கும் டெய்லர், குழந்தைகளின் ஆடைகளைத் தைக்கும் டெய்லர் போன்றவர்களை இணைத்து தையல் தொழிலைச் செய்யலாம்.

* தையல் தொழிலை முக்கியப் பகுதியில் வாடகைக்கு இடம் பிடித்துத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆரம்பகாலத்தில் வீட்டின் ஒரு சிறு அறையை இதற்கென ஒதுக்கியும் செய்யலாம். தனியாகவோ, பணியாட்களுடனோ தையல் இயந்திரங்களை வாங்கி வைத்தும் செய்யலாம்.

* ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டாலும், அது அனைவருக்குமே பொருந்திவிடுவதில்லை. துணியாக எடுத்துத் தைப்பவர்களின் எண்ணிக்கை எப்போதும் போலவே உள்ளது. எனவே, டெய்லரிங் தொழிலுக்கு எப்போதும் வாய்ப்பு உண்டு.

* இந்தத் தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்றும் தொடங்கலாம்.

திட்ட மதிப்பீடு: ரூ.3 லட்சம்அரசு மானியம்: 25% UYEGP திட்டம் மற்றும் 25/ 35% PMEGP திட்டம்தயாரிப்பு முறை: வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான அளவில் தாங்கள் விரும்பிய வடிவமைப்பில் ஆடையைத் தைப்பதற்கு தையலகத்தை அணுகி தையல்காரரிடம் தங்களிடம் உள்ள துணியைக் கொடுப்பார்கள்.

கொடுக்கப்பட்ட துணியை, தையல்காரர் அல்லது தையல் நிபுணர் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப வாடிக்கையாளரின் உடல் அமைப்பிற்கேற்ப அளவு எடுத்து தேவைப்படும் பரிமாணங்களில் துணியை வெட்டி தையல் இயந்திரம் மற்றும் ஓவர்லாக் (Over lock) இயந்திரம் மூலம் தைத்த பின்னர் பொத்தான்கள் வைத்து தேவையான எம்பிராய்டரிங் (Embroidering) செய்து வாடிக்கையாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படுகிறது. இதுதான் காலம் காலமாக நடக்கும் நடைமுறை. இதுவே பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளுக்கான சீருடைகளாக இருந்தால் மூன்று அல்லது நான்கு அளவுகளை சொல்லி(லார்ஜ், மீடியம், எக்ஸ்ட்ரா லார்ஜ்) தைக்கச் சொல்வார்கள்.

அப்படி தைக்கும்போது நம்மிடம் வேலை செய்யும் தையல்காரர்களில் ஒருவர் காலர் தைப்பார், ஒருவர் கையை இணைப்பார், ஒருவர் பொத்தான்களை தைப்பார். இதற்கெல்லாம் நவீன இயந்திரங்களும் வந்துவிட்டன.சாதகம்: பள்ளிகள், செக்யூரிட்டி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சீருடைகள் அவசியம் என்பதால் அவர்களுக்கு சீருடை தைத்துத்தரும் வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற நிறுவனங்களுக்குச் சென்று மொத்தமாக ஆர்டர்கள் கேட்கலாம். ஜவுளிக்கடைகள் அதிகம் உள்ள பகுதிகளில் கடைகள் அமைத்து தைத்துக் கொடுக்கும் பணிகளில் ஈடுபடலாம்.

பாதகம்: அதிகளவு ஆர்டர்களின்போது போதிய டெய்லரிங் ஆட்கள் கைவசம் இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் தைத்துக் கொடுப்
பதில் காலதாமதம் ஏற்பட்டு ஆர்டர்கள் கைநழுவிச் செல்லும் வாய்ப்பு உண்டு. சீருடைகள் தைத்துத்தரும் ஆர்டர்கள் கிடைக்கும் நிலையில், அதற்கான துணிகளை மொத்தமாக வாங்கினால்தான் குறைந்த விலைக்கு தைத்துத்தர முடியும். தையல் கூலியை அதிகம் வைத்து தைத்தால், குறைந்த கூலி கேட்கும் வேறொருவருக்கு ஆர்டர் போய்விடும். இதனால், கணிசமான அளவிற்கு வருவாய் குறையும்.

தேவையான இயந்திரங்கள்

துணி வெட்டும் மேசை 2 - ரூ.36,000
தையல் இயந்திரம் 8 - ரூ. 1,20,000
(மின்சாரத்தால் இயக்கப்படுவது)
ஓவர்லாக் இயந்திரம் 2 - ரூ. 50,000
கத்திரிக்கோல், அளவுகோல், தேய்ப்பு பெட்டி(அயனிங்), ஹேங்கர் 1 செட் -   ரூ.15,000
முதலீடு (ரூ. லட்சத்தில்)நிலம் / கட்டடம் வாடகை - ரூ.15,000
இயந்திரங்கள் - ரூ.2.21 லட்சம்
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியம் மற்றும் வங்கிக் கடன் ரூ.1.61 லட்சம் கிடைக்கும்.
நமது பங்கு (5%)     - ரூ.  11,500
மானியம் (25%)     - ரூ. 57,500
வங்கிக் கடன்(70%)     - ரூ.1,61,000
மொத்தம்     - ரூ.2,30,000
உற்பத்தித் திறன்: 8 பணியாளர்களைக் கொண்டு ஒருநாளில் சராசரியாக 12,000 ரூபாய்க்கு வருமானம் பார்க்கலாம். ஒரு மாதத்திற்கு 25 வேலைநாட்கள் என எடுத்துக்கொண்டால் 12,000 X 25 = 3,00,000
மூலப்பொருள் செலவு    - ரூ. 9000
(பொத்தான்கள், எம்பிராய்டரிங் தையல் நூல்கண்டு, ஊக்குகள், ஜிப்புகள் மற்றும் பல)
தேவையான பணியாளர்கள் (ரூ.)
மேற்பார்வையாளர் 2 நபர்    -  ரூ.24,000
பணியாளர்கள் 8 X 12,500    - ரூ.1,00,000
மொத்தம்    - ரூ.1,24,000
நிர்வாகச் செலவுகள்
வாடகை     - ரூ. 15,000
மின்சாரம்     - ரூ. 10,000
அலுவலக நிர்வாகம்     - ரூ. 3,000
இயந்திரப் பராமரிப்பு     - ரூ. 5,000
மேலாண்மை செலவு    - ரூ.3,000
மொத்தம்    - ரூ.36,000
நடைமுறை மூலதனச் செலவுகள்
மூலப்பொருட்கள்     - ரூ.9,000
சம்பளம்     - ரூ.1,24,000
நிர்வாகச் செலவுகள்     - ரூ. 36,000
மொத்த செலவுகள்     - ரூ.1,69,000
தொழில்முறையிலான வரவு - ரூ.3,00,000
கழிவு மூலம் வரவு     - ரூ.  3,000
மொத்த வரவு     - ரூ.3,03,000
கடன் திருப்பம் மற்றும் வட்டி
மூலதனக் கடன் திருப்பம்
(60 மாதங்கள்)     - ரூ.1,54,700
மூலதனக் கடன் வட்டி (12.5%) - ரூ.58,012
மொத்தம்     - ரூ.2,12,712
லாப விவரம்
மொத்த வரவு     - ரூ.3,03,000
மொத்த செலவு     - ரூ.1,69,000
கடன் திருப்பம்
மற்றும் வட்டி    - ரூ.  3,600
லாபம்     - ரூ.1,34,600

காலத்திற்கேற்ப மாறிவரும் ஆடை வடிவமைப்புகளை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப தைத்துத் தரமுடியும். இன்றைக்கு தையல் பயிற்சிகள் பல்வேறு இடங்களில் வழங்கப்படுகிறது. அங்கு சென்று தையல் கலையைக் கற்று தையல் தொழிலைத் தொடங்கலாம். பயிற்சியும் முயற்சியும் இருந்தால் இத்தொழிலை திறம்படச் செய்து நிரந்தர வருமானம் ஈட்டலாம். ஆர்வமுள்ளவர்கள் முயற்சிக்கலாமே..!

- தோ.திருத்துவராஜ்

திட்ட அறிக்கை: கூடுதல் இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி, சென்னை - 600 012.

X