59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன் பெற அனுமதி! மத்திய அரசின் புதிய திட்டம்!

12/5/2018 2:58:51 PM

 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன் பெற அனுமதி! மத்திய அரசின் புதிய திட்டம்!

நன்றி குங்குமம் சிமிழ் - கல்வி வழிகாட்டி

நீங்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உரிமையாளரா? நீங்கள் GST எண் பெற்று தொழில் செய்பவரா? நீங்கள் வருமான வரி செலுத்துபவரா? வங்கியில் வாங்கிய கடனை தவறாது திருப்பி செலுத்தியவரா? உங்கள் தொழிலை விரிவாக்கம் அல்லது மேம்பாடு செய்ய பணம் தேவையா? அப்படியானால் நீங்கள் எந்த வங்கிக்கும் நேரடியாக செல்லாமல்...

நீங்கள் எந்தவிதமான சொத்து பிணையமும் கொடுக்காமலே ரூ.1 கோடி கடனுக்கான அனுமதி 59 நிமிடத்தில் கிடைக்கும். அது எப்படி 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன் கிடைக்கும் என்று ஆச்சர்யப்படாதீர்கள். இது மத்திய அரசின் புதிய அறிவிப்பு. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் அளித்து ஊக்குவிக்க மத்திய அரசு சமீபத்தில் www.psbloansin59minutes.com என்ற இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு முன்பு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடனுக்கு விண்ணப்பித்தால் அதற்கான அனுமதியைப் பெற 20 முதல் 30 நாட்கள் வரை தேவைப்படும். அந்த நிலை மாறி 59 நிமிடத்தில் கடன் பெற அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த வங்கிகளிலெல்லாம் இந்த 59 நிமிட கடனுக்கு அனுமதி கிடைக்கும்?

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI), பாரத ஸ்டேட் வங்கி (SBI), பாங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, விஜயா வங்கி மற்றும் இந்தியன் வங்கி என 6 வங்கிகளில் இந்த கடனுக்கு அனுமதி கிடைக்கும். மேலும் கடன் விநியோகிக்கப்படும் வரை மனிதத் தலையீடு என்பதே இருக்காது.

இத்திட்டத்துக்கான இணையதளத்தில் உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தளத்தில் விண்ணப்பிக்க முதலில் பொதுவான விவரங்களை அளிக்க வேண்டும். உங்களுடைய கைபேசி எண், மின்னஞ்சல் கொடுக்க வேண்டும். உங்களுக்கு ஒரு OTP எண் வரும் அந்த எண்ணைக்கொண்டு நீங்கள் இணையதளத்தின் உள்ளே செல்லலாம். முதலில் வங்கியைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நீங்கள் பதிவு செய்ய வேண்டிய ஆவணங்கள்

1)  ஜிஎஸ்டி பதிவு கடவுச்சொல் விவரம்
2)  3 வருட வருமானவரி பதிவு கடவுச்சொல் விவரம்
3)  6 மாத வங்கி கணக்கின் விவரம் PDF-ல் அப்லோடு செய்யவேண்டும்
4)  உரிமையாளர்கள் இயக்குநர்/பங்கு தாரர்/உரிமையாளர் விவரங்கள் அளிக்கவேண்டும்
5)  இப்போது கடன் ஏதாவது இருந்தால் அதன் விவரம் அளிக்கவேண்டும்
6)  கே.ஒய்.சி. ஆதாரம் அளிக்கவேண்டும்
7)  புதிய கடன் பெறுவதற்கான தேவை விவரம் அளிக்கவேண்டும்

இதற்காக வருமானவரி, ஜிஎஸ்டி, வங்கி அறிக்கை போன்றவற்றைச் சரிபார்க்கச் சிறப்பு மென்பொருள் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் 2 கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது ஜிஎஸ்டி எண், ஜிஎஸ்டி பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை அளிக்கவேண்டும்.

வருமான வரி நிறுவனத்தின் பேரில் செலுத்தப்பட்ட கடந்த 3 வருடத்திற்கான வருமான வரி விவரங்கள், நிறுவனம் தொடங்கப்பட்டதற்கான ஆவணங்கள், வருமான வரி செலுத்துவதற்கான கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களையும் அளிக்கவேண்டும். வங்கி விவரங்கள் நடப்பு வங்கிக் கணக்கின் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல், 6 மாத வங்கி அறிக்கை உள்ளிட்ட விவரங்களையும் PDF கோப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

உரிமையாளர்கள் இயக்குநர்/பங்குதாரர் /உரிமையாளர் விவரங்கள்: அடிப்படை, தனிப்பட்ட, KYC, கல்வி விவரங்கள் மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்ற விவரங்களையும் அளிக்க வேண்டும். நீங்கள் எல்லா பதிவுகளையும் பதிந்த பின் உங்களுக்கு கடன் உத்தரவாதம் அல்லது கடன் நிராகரிப்பு செய்தி வரும். அந்தச் செய்தி Hyperlink reference valid என்றோ Error! Hyperlink reference not valid. என்றோ உங்கள் மின்னஞ்சலுக்கு தகவல் வரும். இது உங்களுக்கு வங்கி கொடுக்கும் முதன்மை அனுமதி. பின் 15 தினங்களில் வங்கியை அணுகி கடன் பெறலாம். உங்களுக்கு எந்த விதமான சொத்துப் பிணையம் இல்லாமல் கடன் பெறலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிய www.psbloansin59minutes.com என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.

- திருவரசு

X