அதிக நேர படிப்பு மனஅழுத்தம் தருமா?

12/5/2018 3:00:53 PM

அதிக நேர படிப்பு மனஅழுத்தம் தருமா?

நன்றி குங்குமம் சிமிழ் - கல்வி வழிகாட்டி

ஒரு சிறுவன், தாத்தா பாட்டி, சொந்த ஊர், சேற்றில் விளையாட்டு என தன் குழந்தைப் பருவத்தை இன்பமாக கழித்து வருகிறான். படிப்பிலும் பையன் படு கெட்டி. எப்போதும் பள்ளியில் டாப். ஒருநாள் பள்ளி ஆண்டுவிழாவில் வரிசையாக பரிசுகள் வாங்குகிறான். சிறுவனின் வெற்றிக்குக் காரணம் அவனது தந்தைதான் எனப் பள்ளி நிர்வாகம் மேடையில் கூப்பிட்டு கௌரவிக்கிறது.

குற்ற உணர்வால் தவிக்கும் தந்தை, ‘என் குழந்தைக்கு நான் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால், என்னைக் கூப்பிட்டு பாராட்டுகிறார்களே!’ என மனைவியிடம் புலம்புகிறார். மேலும் இன்றிலிருந்து என் பையனை என்னால் முடிந்தவரை படிப்பில் பெரிய அளவில் கொண்டுவருவேன் என முடிவெடுத்து பையனை படிப்பு மட்டுமே மந்திரமாக மாற்றுகிறார். படிப்பு மட்டுமே முக்கியம் என அதாவது தாத்தா, பாட்டி, விளையாட்டு போன்ற அனைத்தும் மூட்டைகட்டிவைக்கப்பட்டு காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை படிப்பு மட்டுமே.

பிறகென்ன படிப்பில் பெரிய அளவில் சாதிக்கிறான் சிறுவன். வளர்ந்து பெரிய கம்பெனியில் வேலை, வீடு, கார், என முப்பது வயதுக்குள் செட்டிலாகியும்விட்டான். ஆனால், அவ்வப்போது தனக்குத்தானே பேசிக்கொள்வது, கட்டுப்பாடின்றி அலறுவது, கோபமடைவது என மாற, மனநல ஆலோசகரிடம் சென்றால் உங்க பையனுக்கு ‘சிஸோப்ரேனியா’ (Schizophrenia) என்னும் மனஅழுத்த நோய் இருக்கிறது என்கிறார். இந்த மனஅழுத்தப் பிரச்னையிலிருந்து விடுபட்டாரா அந்தப் பையன் என்பதே சமீபத்தில் வந்த ‘ஜீனியஸ்‘ படத்தின் கதை.

‘ஜீனியஸ்’ மட்டுமல்ல ஆங்கிலத்தில் வந்த ‘A Beautiful Mind’ தொடங்கி பல மனஅழுத்த நோய் சார்ந்த படங்களுக்கும் கரு இந்த சிஸோப்ரேனியாதான். அதிகமாக படிப்பதால் இப்படி ஒரு பிரச்னை வருமா? என அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஆட்கொள்ள மனநல ஆலோசகர் வந்தனாவிடம்(Clinical Psychologist) பேசினோம். ‘‘சிஸோப்ரேனியா வர இது ஒரு காரணம்தான், ஆனால் இதுபோல் பல காரணங்கள் இருக்கு. சுகர், கேன்சர் போலவே இதுவும் ஒரு மரபணுப் பிரச்னை. குடும்பத்துல யாருக்கோ இருந்திருக்கலாம்.

அப்படியே இவங்களுக்கும் வந்திருக்கலாம். அடுத்து இன்னைக்கு இருக்கிற டெக்னாலஜி, குழந்தை வளர்ப்பு எல்லாமே ஒரு காரணம். ‘என் குழந்தை மொபைலை எடுத்தா நமக்கே பாடம் நடத்துவான் அந்த அளவுக்கு புத்திசாலி’ இப்படி பெருமையா சொல்கிற பெற்றோர் களைப் பார்க்கலாம். மொபைலை ஒரு காரணமா வெச்சு சின்ன வயதிலேயே அந்தக் குழந்தை வெளி உலகத்துல இருந்து தன்னை தனிமைப்படுத்திக்கிறான்கறதை புரிஞ்சிக்கணும்.

சில குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியவே போகமாட்டாங்க. தனக்குத்தானே ஒரு கேரக்டரை உருவாக்கி பேசிக்கிட்டே இருப்பாங்க. இதெல்லாம் வருங்காலத்துல சிசோப்ரேனியா வர்றதுக்கான அறிகுறிகள். இந்த ஆரம்ப நிலைய ‘புரோட்ரோம்’னு (Prodrome) சொல்வோம். யார்கிட்டேயும் பேச மாட்டாங்க, தனிமைய விரும்புவாங்க, சில குழந்தைகள் அதிகமா சாப்பிடுவாங்க, கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு அடம்பிடிக்கிறது, கவனமின்மை, நல்லா படிச்சிட்டு இருந்த குழந்தை திடீர்னு ஃபெயில் ஆகுற அளவுக்கு போறது இப்படி நிறைய அறி குறிகள் இருக்கு.

இதை ‘ஸ்பிலிட் ஆஃப் தி மைண்ட்‘னு சொல்வோம். அவங்களுடைய சிந்திக்கிற தன்மைல பிரச்னை இருக்கும். யாரோ ஒருத்தர் காதுல பேசிட்டு இருக்கற மாதிரி இருக்கும். சிலருக்கு ஒரு சில கேரக்டர்களே தன் கூட பேசுகிற மாதிரி தோணும். சிலருக்கு தலைக்குள்ள குரல்கள் கேட்கும். இன்னும் சிலருக்கு அதீத சந்தேகம், வேலை செய்யற இடத்துல, வீட்ல யாரோ தனக்கு துரோகம் செய்யறதா, இல்லை தன்னை கொலை செய்யவே பார்க்குற அளவுக்குக் கூட யோசிப்பாங்க.

சிஸோப்ரேனியா 15 வயசுலருந்து 30 வயசுக்குள்ள இருக்கவங்களுக்கு வரலாம். அதிலும் ஆண்களுக்கு அதிகமா வருகிற பெரிய மனநோய் இது. முதல் காரணம் ஜெனிடிக்கினால் (பரம்பரையாக) வரலாம். அடுத்து அதீத மன அழுத்தம், சின்ன வயசுல நடந்த ஏமாற்றம், வெளியுலக பழக்கமே இல்லாம கட்டுப் படுத்தி வைக்கிறது, அதிகமான மொபைல் பயன்பாடு சக குழந்தைகள் கூட பேசிச் பழகாம தனியாவே இருக்கறது இப்படி நிறைய காரணங்கள் இருக்கு.

அந்தவகையில் ஒன்றுதான் எப்போதுமே படிப்பு படிப்புனு இருக்கறதும்’’ என்று சிஸோப்ரேனியா பாதிப்புக்கான காரணங்களைப் பட்டியலிட்ட மனநல ஆலோசகர் வந்தனா குணப்படுத்து வதற்கான வழிகளையும் விவரித்தார்.‘‘நம்ம மூளையில இருக்கற சில சுரப்பிகளில் நிகழும் மாற்றம்தான் சிஸோப்ரேனியா உருவாக காரணம். இதுல பாஸிட்டிவ் அறிகுறிகளும் வரும், நெகட்டிவ் அறிகுறிகளும் இருக்கும்.

பாஸிட்டிவ் அறிகுறி: சந்தேகம், கோபம், குரல் கேட்குறது, தூங்காம இருக்கறது, அதீத டென்ஷன் இதெல்லாம் இயல்புநிலைல இருந்து கொஞ்சம் அதிகமா இருக்கும். நெகட்டிவ் அறிகுறி: தனிமைப்படுத்துறது, தன்னை யாரோ என்னவோ செய்திருக்காங்கனு நினைக்கிறது, வேலைக்குப் போகாம இருக்கறது, சிலரெல்லாம் குளிக்கக்கூட மாட்டாங்க, கொலை செய் அல்லது உன்னைக் கொன்னுடுவேங்கற மாதிரியான குரல்கள் கேட்கும்.

அப்படி இருந்தால் அது தீவிரமான நிலை. இப்படியெல்லாம் இருந்தா யோசிக்காம மனநல மருத்துவர் கிட்ட போயிடணும். அதேபோல் சிஸோப்ரேனியா இருக்கற நபருடைய குடும்பத்தாருக்கும் ஆலோசனைக் கொடுப்பாங்க. காரணம், மருத்துவர் மட்டுமில்லாம வீட்டுச்சூழலும் பாதிக்கப்பட்ட நபருக்கு ஏத்த மாதிரி பக்குவமா மாறணும். கவனமா பாத்துக்கணும்.
குணமானதுக்கு அப்பறம் ‘எக்ஸ்பிரஸ் எமோஷன்ணு’ ஒரு சிகிச்சை இருக்கு.

அதாவது, இப்படி பாதிக்கப்பட்ட நபர்கள் சரியாகி வரும்போதுதான் இன்னும் ஜாக்கிரதையாக பாத்துக்கணும். பாதிக்கப்பட்டவங்கனு அவங்களைத் தனிமைப்படுத்தக்கூடாது. வேலைல திரும்ப சேர்த்துக்காம இருக்கறது, பாதிக்கப்பட்டு சரியான நபரை பார்த்து பயப்படுறது, இதெல்லாம் செய்யவே கூடாது. போன பிரச்னை அப்படியே திரும்பிடும். சரியான முறையில சிகிச்சையும், மருந்துகளும், முக்கியமா கவுன்சிலிங் எடுத்துக்கிட்டாலே கொஞ்சம் கொஞ்சமாவே குரல்கள் கேட்குறது குறையும். சிந்தனைகள்ல தெளிவு கிடைக்கும், சக மனிதர்கள் மாதிரியே மாறிடுவாங்க’’ என்கிறார்.
 
- ஷாலினி நியூட்டன் 

X