மகத்தான மனத்திருப்தியை தருவது எது?

12/6/2018 5:24:20 PM

மகத்தான மனத்திருப்தியை தருவது எது?

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உடல்... மனம்... ஈகோ!

Some little pieces of sand are so full of ego that they see themselves as a giant rock! But then the wind blows, the big ego flies in the air!  Mehmet Murat ildan
- ஈகோ மொழி

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஈகோ தன்னகங்காரம், தன்முனைப்பு, தான் என்ற எண்ணம் என்று சுயநல உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே இருந்து கொண்டிருக்கிறது.  இதன் காரணமாக தனி மனித கோப, ஆத்திர உணர்ச்சிகளின் கொந்தளிப்பான வெளிப்பாடுகளுக்கு ஈகோதான் காரணம் என்று ஒரு குற்றச்சாட்டாகவே முன்வைக்கப்படுகிறது.

அதே நேரம் ஈகோ இல்லாமலிருப்பது யாருக்கும் சாத்தியமானதில்லை என்றாலும், ‘நான்‘ என்பது தனது மேல்கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறும்போது ஈகோவும் தன்னை முழுமையாக விடுவித்துக்கொள்கிறது. அம்மாதிரியான சூழலில் ஈகோ எடுக்கும் அடுத்த நிலை… பரவலான ஈகோநிலை.

பரவலான ஈகோ நிலை (Diffused Ego State)  பரவலான ஈகோ நிலையானது பார்க்கும் சந்திக்கும் ஒவ்வொரு நபரின் ஈகோ நிலையுடனும் உடனடியாக பரவலாக இணைந்துவிடக்கூடியது. எதிர்ப்படும் நபர்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அவர்களது ஈகோ நிலைக்கு ஏற்றவாறு சிதறி, பல கூறுகளாகப் பிரிந்து, பலவாறாக உருமாறி அந்த நபரின் ஈகோ நிலைக்கு ஏற்றவாறு தன்னை முழுமையாக மாற்றி இணைந்துகொள்ளும். பரவலான ஈகோநிலையில் ஒரு நபரது தனித்தன்மை எந்த இடத்திலும் வெளிப்படாமலிருக்கும்.

இந்த நிலையிலான மனிதர்கள் தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் அனைவரையும் தனக்கு சமமானவராக பாவிப்பார்கள். மனிதர்களுக்கு இடையில் எந்தவிதமான பேதங்களும் இல்லை என்பதை உறுதியாக நம்பக்கூடியவர்களாக இருப்பார்கள். மனிதர்களை ஒருபோதும் பாகுபடுத்தி பார்க்கவே மாட்டார்கள். மனிதர்களுக்கு மத்தியில் நிலவும் சாதி, மத, இன, மொழி பேதங்கள் அனைத்தையும் உதறித்தள்ளி, அவற்றை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருப்பார்கள்.

இந்த பரவலான ஈகோநிலை கொண்டவர்களின் நடவடிக்கைக்ளும், வாழ்க்கை முறைகளும் எதிராளிக்கு மிகவும் பிடித்தமான முறையில் இருக்கும். அதனாலேயே ‘சே…அவருக்கு ஈகோ சுத்தமா இல்லப்பா‘ என்று குறிப்பிடக்கூடியவர்களாக இருப்பார்கள். உண்மையில் இந்த நிலை கொண்ட மனிதர்களின் ஈகோ எதிராளியின் ஈகோவுடன் பரவலாகக் கலந்த நிலையிலேயே இருப்பதுதான் மிக முக்கியக் காரணம். இன்னும் ஒருசிலர், இந்த பரவலான ஈகோநிலை கொண்ட மனிதர்களை கடவுள் ஸ்தானத்தில் கூட நிறுத்தி வைத்திருப்பார்கள்.

(எல்லாம் மனதிற்கு பிடித்துப்போனதுதான் காரணம்) உதாரணமாக, மகாத்மா காந்தி, அன்னை தெரசா, சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் என்று சொல்லலாம். (இப்படியானவர்களின் பெயர்களைக் கேட்டதுமே அவர்களின் தன்மை புரிகிறது இல்லையா?)
இந்த இடத்தில் ஈகோவின் தன்மை நிலைகளில் மிக முக்கியமான ஒரு வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். முந்தைய அத்தியாயங்களில் பார்த்த ‘அழுத்தப்பட்ட ஈகோ நிலைக்கும் (Compressed Ego State) இந்த பரவலான ஈகோ நிலைக்கும் (Diffused Ego State) அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருக்கிறது.

மேலோட்டமான பார்வைக்கு இவை இரண்டும் சமமானது போலவும், ஒரே தன்மைகொண்டவை போலவும் தோற்றமளிக்கும். காரணம், இந்த இரண்டு ஈகோ நிலைகளிலும் ஈகோவின் தட்டுப்பாடு எதிராளிக்கு வெளியில் தெரியவே தெரியாது. எதிராளியால் ஈகோவின் தன்மையையும் செயல்பாட்டையும் கண்டறியவே முடியாது. ஒன்றில் ஈகோ வலுக்கட்டாயமான முறையில் அழுத்தப்பட்ட நிலையில் இருக்கும்.

மற்றொன்றில் ஈகோ தானாகக் கரைந்த நிலையில் இருக்கும். ஈகோவின் இந்த இரண்டு நிலைகளும் முற்றிலும் வேறு வேறானவை. நிறையவே வித்தியாசமானவை.அழுத்தப்பட்ட ஈகோநிலையில் ஒரு மனிதன் இந்த உலகத்தின் தொடர்புகளினின்றும் தன்னை முழுமையாக துண்டித்துக் கொள்கிறான்.

அதுவே பரவலான ஈகோ நிலையில் ஒரு மனிதன் மிகவும் துடிப்பான, சந்தோஷமான மனநிலையோடு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறான். அழுத்தப்பட்ட ஈகோ நிலை ஒருவனுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அப்படியென்றால் மனிதனுக்கு நிம்மதியை மகத்தான மனதிருப்தியை தருவது எது? என்று கேட்கத் தோன்றும்.

பரவலான ஈகோநிலையே  மகத்தான மன திருப்தியை ஏற்படுத்தித் தருகிறது. அழுத்தப்பட்ட ஈகோ நிலையைக் கொண்டவர் எந்தச் சூழ்நிலையிலும்
எதற்கும் வித்தியாசமானவராக, உணர்ச்சியற்றவராக நடந்துகொள்வார். பரவலான ஈகோநிலை கொண்டவரோ வெளிப்பார்வைக்கு வித்தியாசமானவராக தெரிந்தாலும், எல்லாச் சூழ்நிலைக்கும் பொருந்திப்போகக்கூடியவராக இருப்பார். இப்படிப்பட்டவர்கள் நான், எனது என்று சிந்திக்கவே மாட்டார்கள். எல்லா இடத்திலும் நாம், நமது என்ற ரீதியிலேயே சிந்திப்பவர்களாக இருப்பார்கள்.

அழுத்தப்பட்ட ஈகோ நிலையிலானவர்கள் மோசமான உடல், மன, சமூக நலன் கொண்டவர்களாக இருப்பார்கள். அதுவே பரவலான ஈகோ நிலைகொண்டவர்கள் உற்சாகமான உடல், மன, சமூக நலம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து, அனுபவித்து வாழ்பவர்களாக இருப்பார்கள். பரவலான ஈகோ நிலையின் தன்மையை உணராமல், அப்படியான ஈகோ நிலையில் இருப்பதாக தவறாக எண்ணிக்கொண்டு, சிலர் போலியாக தங்களுக்குள் ஒரு கற்பனையை வளர்த்துக்கொள்வார்கள். அப்போது ஒரு சிறிய தவறையும் செய்வார்கள். அது என்ன தவறு..?


குரு சிஷ்யன் கதை

எறும்புகள் போதிக்கும் பாடம்!

ஆசிரமத்திற்கு வந்திருந்தவர்கள் மதிய உணவு அருந்தியபின் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர். குரு மட்டும் ஆசிரமத்தின் வெளியே திண்ணையின் ஓரத்தில் அமர்ந்து தரையைப் பார்த்தபடி இருந்தார். அவர் அருகில் வந்த சிஷ்யன், “என்ன குருவே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என்றான். சிஷ்யனைப் பார்த்த குரு, “பாடம் கற்றுக்கொண்டிருக்கிறேனப்பா’’ என்றார். “பாடமா? என்ன பாடம்? யாரிடமிருந்து பாடம் கற்கிறீர்கள்?’’ என்றான் சிஷ்யன். “இதோ இந்த எறும்பிடமிருந்து பாடம் கற்கிறேன். நீயும் பார்’’ என்றவர் தரையை நோக்கி  கையைக் காட்டினார்.

சிஷ்யன் பார்த்தான் அங்கே ஒரு எறும்பு ஊர்ந்துகொண்டிருந்தது. ஒரு சிறிய எறும்பு, அதனை விட பல மடங்கு பெரிதான ஒரு இலையை நகர்த்திக்கொண்டே ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. எறும்பு மெதுவாகவும் மிகவும் கவனமாகவும் சென்றது. சிஷ்யனுக்கு ஒரே ஆச்சர்யம். மேலும் தரையில் ஒரு பிளவைப் பார்த்தவுடன் அது சாமர்த்தியமாக இலையை அச்சிறு பிளவின் குறுக்காக வைத்து அதன் மீது ஏறிச் சென்று பின்னர் இலையை இழுத்துச்சென்றது.

மேலும் பல தடங்கல்கள் வந்தபோதும், அது தன் திசையைச் சற்றே மாற்றி வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டே சென்றது. சில மணிநேரம் விடாமுயற்சி செய்தவாறே பயணம் செய்தது.  குருவும் சிஷ்யனும் பார்த்துக்கொண்டே இருந்தனர். குரு வியந்துபோனவராக, “ஒரு சிறு எறும்பிடம் எந்த அளவு விடாமுயற்சியும், சாதுர்யமும், புத்திசாலித்தனமும் இருக்கிறது பார்த்தாயா? கடவுளின் படைப்பு எப்போதும் விந்தை நிறைந்தது இல்லையா?’’ என்று அதிசயித்தார்.

சிஷ்யன் பார்த்துக்கொண்டேயிருந்தான். எறும்பு இறுதியில் தனது இருப்பிட இலக்கான எறும்புப்புற்றை அடைந்தது. அது ஒரு சிறிய ஆழமான குழி. அருகே வந்ததும் எறும்பால் அந்த இலையை குழியினுள் எடுத்துச் செல்ல முடியவில்லை. அதனால் மட்டுமே உள்ளே புக முடிந்தது.சிஷ்யனைப் பார்த்து, “ஏதாவது புரிந்ததா?’’ என்று கேட்டார் குரு.

‘‘புரிகிறது குருவே’’ என்றான் சிஷ்யன்.வியப்போடு பார்த்த குரு, “என்ன புரிகிறது?’’ என்றார்.எறும்பையே அமைதியாக கவனித்தபடியிருந்த சிஷ்யன், “கடந்த ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு இழுத்துவந்த இலையை எறும்பு தன் குழியருகே விட்டு விட்டுப் போவது மனிதர்களின் செயலைப் போலவே இருக்கிறது’’ என்றான்.

“ம்ம்... பலே பலே. மேலே சொல்’’ என்றார் குரு.  “இந்த எறும்பைப் போலத்தானே ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைப் பயணத்தில் மிகவும் சிரமப்பட்டு முயற்சி செய்து பல வசதிகளை ஏற்படுத்திக்கொள்கிறான். வீடு, ஆடம்பரமான வாழ்க்கை என்று பல்வேறு சுமைகளை இழுத்துக்கொண்டு செல்கிறான். அவனது இறுதி யாத்திரையில் அவன் சேமித்த அனைத்தையும் இந்த இலையைப்போல் வீட்டு வாசலில் விட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும் என்பதை இந்தச் சிறிய எறும்பு பாடமாக கற்றுத்தருகின்றது.

பாவ புண்ணியங்களைத் தாண்டி எதுவும் உடன் வரப்போவதில்லை என்ற உண்மை புரியாமல் வீணாக சுமைகளைச் சேர்த்து கட்டி இழுக்கும் எதுவும் வீணான செயல். அவை ஒருநாளும் உடன் வரப்போவதில்லை என்ற மிகப்பெரிய உண்மையை இந்த எறும்பு சுட்டிக்காட்டுகிறது’’ என்றான் சிஷ்யன்.  குரு புன்னகைத்தபடி சிஷ்யனை தட்டிக்கொடுத்து, “மிகச் சரியாகச் சொன்னாய். இது நம் அறிவுக்குப் புரிந்தால் மதி, புரியாமல் போனால் விதி...’’ என்றார்.

-தொடரும்

ஸ்ரீநிவாஸ் பிரபு

X