உருகும் ஆர்டிக் பனிக்கட்டிகள்… உயரும் கடல் மட்டம்!

4/9/2019 4:46:46 PM

உருகும் ஆர்டிக் பனிக்கட்டிகள்… உயரும் கடல் மட்டம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உலகிலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் ஒன்றான ஆர்டிக் கடல்தான் ஆழம் குறைந்த மற்றும் சிறிய கடல். அதில் பனிப்பாறைகள் உறைந்திருப்பது தான் அக்கடலின் சிறப்பம்சம். ஆனால், 2030 வாக்கில் பனிப்பாறைகள் இல்லாத, முதல் கோடைக்காலத்தை ஆர்டிக் கடல் சந்திக்கவிருப்பதாக கூறுகிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் ஆர்டிக் பெருங்கடலுக்குமிடையில் உள்ள தீவுப் பகுதிதான் கிரீன்லாந்து. அங்கு பெரும் அளவிலான பனி இருப்பதால், அங்கு என்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அது உலகளவில் பருவநிலையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள், பெரும் அளவிலான உறைந்த நீர் இருக்கும் இடமாகும். இது கவனமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது. அங்கிருக்கும் அனைத்துப் பனிக்கட்டிகளும் உருகினால், கடல்நீர் மட்டம் 7 மீட்டர் அளவுக்கு உயரும். இதனால், உலகில் உள்ள கடலோர மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

நிலையான நேரங்களில், கோடைக்காலத்தில் உடைந்து உருகும் பனிக்கட்டிகளை, குளிர்காலத்தின் பனிப்பொழிவு சமன்படுத்தும். ஆனால், கடந்த சில பத்து ஆண்டுகளில் பெரும் அளவிலான பனிக்கட்டிகளை அப்பகுதி இழந்து வருவதாக கூறுகிறது ‘தி கிரையோஸ்பியர்’ என்ற இதழில் வெளியான  ஆய்வு முடிவுகள்.உருகும் பனிக்கட்டிகள் கடல் மட்ட உயர்வில் சிறு பங்கு மட்டுமே வகிக்கிறது என்றாலும், காலநிலை மாற்றத்தால் உருகும் நீரின் அளவு அதிகரிக்குமோ என்ற அச்சம் உள்ளது.

ஆர்டிக் பகுதிக்குச் செல்லும் மாசு கலந்த காற்றால், அங்கு பாசி உருவாகிறது. உலகின் மற்ற பகுதிகளை விட, ஆர்டிக் பகுதி இருமடங்கு அதிகமாக வெப்பமாகிவருகிறது. அதிகளவில் பாசி வளர்வதால், அங்கிருக்கும் பனி அடர்த்தியாகிறது. இதனால் கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிக்கட்டிகள் பல்வேறு அபாயங்களுக்கு மூல காரணமாக விளங்குகிறது. மேலும் இது ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளிலிருக்கும் காலநிலை அமைப்புகளை பெருமளவு மாற்றலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

X