அன்று கணினிக் கல்விப் பயிற்சியாளர்… ஃபிரான்சைஸி கன்சல்டன்சி நிறுவனர்!

4/12/2019 11:53:34 AM

அன்று கணினிக் கல்விப் பயிற்சியாளர்… ஃபிரான்சைஸி கன்சல்டன்சி நிறுவனர்!

நன்றி குங்குமம் கல்வி- வழிக்காட்டி

* வெற்றிக்கதை

‘‘உன்னுடைய கனவுகளை நீ நனவாக்க முயற்சிக்கவில்லை என்றால், அடுத்தவர் உன்னை வேலைக்கு அமர்த்தி, அவரது கனவுகளை உன்மூலம் நிறைவேற்றிக் கொள்வார்’’- என்கிறார் மேலைநாட்டு அறிஞர் ஃபிரான் கிரே. அதுபோலப் பிறருக்காக உழைத்து உழைத்து களைத்துப் போய்விட்டீர்களா? உங்களுக்காகப் புதியதோர் தொழில் உலகம் காத்துக்கொண்டிருக்கிறது என்பது நம்பிக்கை மொழி. சாதாரண கணினி பயிற்சி நிறுவனத்தில் கணினிக் கல்விப் பயிற்றுநராக வேலைக்குச் சேர்ந்து இன்று 3 நிறுவனங்களை (Strategizer, Brand Xpert, Franchise Landmark) சுயமாக உருவாக்கி உயர்ந்து நிற்கும் ஸ்ட்ராட்டஜைஸர் ஃபிரான்சைஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனர் (strategizer franchise consulting services) ஐயப்பன் ராஜேந்திரன் தனது வெற்றிக்கதையை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘திருவாரூர் மாவட்டம் குவளைக்கால் என்ற சிறிய ஊரில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அப்பா ராஜேந்திரன், அம்மா மங்கையர்க்கரசி ஆகியோர் என்னை ஒரு நல்ல நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும் என்ற குறிக்கோளோடு படிக்க வைத்தனர். எனது சொந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தேன். அதன்பின்னர், டிப்ளமோ கோர்ஸான DECE (Diploma in Electronics & Communication Engineering) முடித்துவிட்டு கணினிக் கல்வி குறித்து கற்றுக்கொள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன். அந்த நிறுவனப் பெயரின் கீழே ஃபிரான்சைஸ் எனக் குறிப்பிட்டிருந்தது ஏனோ என் கண்ணில் பட்டு அது என்னவென்று தெரிந்துகொள்ள மனதுக்குள் ஆர்வம் உண்டானது.

கணினி கல்வியில் சில மென்பொருள் குறித்துப் படித்து முடித்தேன். அப்போது நான் படித்த நிறுவனத்தின் மற்றொரு கிளை நாகப்பட்டினத்தில் திறக்கப்பட்டது. அதற்கு நல்லதொரு பயிற்சியாளர் வேண்டும் என தேடிக்கொண்டிருந்தபோது அவ்விடத்தில் என்னை வேலையில் சேர்த்தனர். ஒரு சில ஆண்டுகள் கணினிப் பயிற்றுநராக வேலை செய்தேன். ஆனால், உள்மனம் ஏதோ உனக்கான வேலை வேறு என்பது போலவே சொல்லிக்கொண்டிருந்தது. அது மார்க்கெட்டிங், சேல்ஸ் என்பதாக உணர்ந்தேன். எனவே, அதை நோக்கியே கவனத்தைச் செலுத்தினேன்’’ என்று தன் தொடர் தேடலை விவரித்தார் ஐயப்பன் ராஜேந்திரன்.

மேலும் பேசத்தொடங்கியவர், ‘‘கணினிப் பயிற்றுநர் வேலையை விட்டுவிட்டு சென்னையில் CAD/CAM  பயிற்சியளிக்கும் தனியார் நிறுவனத்தில் சேர்ந்து அந்த கம்பெனியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குப் பெருமளவில் மார்க்கெட்டிங், பிராண்டிங், சேல்ஸ் மற்றும் ஃபிரான்சைஸிங் என அனைத்துத் துறைகளிலும் உழைத்தபோது மேலும் கற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் மீண்டும் சில கார்ப்பரேட் நிறுவனங்களில் சேர்ந்து ஃபிரான்சைஸ் தொழில்சார்ந்த ஏராளமான நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டேன். ஃபிரான்சைஸி என்பது ஒரு தனி நபருக்கு நம்முடைய பிராண்டின் மூலம் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, இதனால் நாமும் பயனடைவதோடு தனிநபர்களும் தொழில் செய்து பயனடையலாம்.

இந்த நிலையில் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலைக்கு அமர்ந்து தென் இந்தியா முழுவதும் அதனுடைய கிளைகளைத் திறப்பதற்காக மாதத்திற்கு 15 நாட்களுக்கு மேலாக வெளியூர்களுக்கு பயணம் செல்ல நேரிட்டது. இந்தப் பணியில் முழுவதுமாக ஈடுபட்டு  நான் வெளியூர்களுக்குப் பயணித்துக்கொண்டிருந்தேன். அப்போது உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சைக்காகச் சென்னை வந்திருந்த என் தாயாரைக் கவனித்து சிகிச்சை அளிக்க முடியாமல் போனதால் அவர் உயிரிழந்தார். அன்றுதான், பிறரின் கட்டளைக்கு உடன்பட்டு  உழைக்கும் வேலையின் மீது வெறுப்பு வந்தது. அந்தக் கணமே வேலையிலிருந்து விலகிவிட்டேன்’’ என்று வேதனையோடு தெரிவித்தார்.

‘‘வேலை செய்ய விருப்பமில்லாமல் இருந்தேன். வறுமை வாட்டியது, என் உழைப்பைப் பற்றி தெரிந்துகொண்ட இந்தியா முழுவதும் கிளைகளைக்கொண்ட மிகப் பெரிய ஃபிரான்சைஸ் கன்சல்டிங் அண்ட் மார்க்கெட்டிங் நிறுவனம் என்னை அழைத்து அந்நிறுவனத்தில் தென்இந்திய துணை பொது மேலாளராக பணியில் அமர்த்தியது. அங்குதான் ஃபிரான்சைஸ் தொழிலில் உள்ள ஒட்டுமொத்த தொழில்முனைவு நுட்பங்களையும் தெரிந்துகொண்டேன். அதேநேரத்தில் ஃபிரான்சைஸ் தொழில் குறித்த உலகளாவிய விவரங்களை கூகுளில் தேட ஆரம்பித்தேன்.

வெளிநாடுகளில் அத்தொழில் எவ்வாறெல்லாம் நடைபெறுகிறது என்பதை தெரிந்துகொண்டேன்.  வேலையை விட்டுவிட்டு தொழில்தொடங்க முடிவெடுத்தேன். முதல் முயற்சியாக விசிட்டிங் கார்டு அடித்து வீட்டி லிருந்தே தொழில் செய்ய   முடிவெடுத்தேன். இதனை தெரிந்துகொண்ட எனது வீட்டின் உரிமையாளர் வீட்டை அன்றே காலிசெய்ய சொல்லிவிட்டார். அனுபவமே சிறந்த ஆசான் என்பதுபோல் அப்போது மூளை மட்டுமே எனது மூலதனமாக இருந்தது.

கையில் காசு இல்லை. எனவே, வேலை பார்த்தபோது சேமித்து வாங்கிப்போட்டிருந்த இடங்களில் ஒன்றை விற்றேன். கடன்களை அடைத்ததுபோக 80,000 ரூபாய் மட்டுமே மீதமிருந்தது. அதனைக்கொண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் 10x10 சதுர அடியில் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து அலுவலகம் அமைத்தேன். அலுவலகத்திற்கு அட்வான்ஸ் 50,000 ரூபாய், இதர பொருட்கள் 23,000 போக 7,000 மட்டுமே கையிருப்பாக இருந்தது.

முதன் முதலாக ஒரு காபிகடை நிறுவனத்தை அணுகியபோது மாதம் ரூ.15,000 நிர்ணயித்து காபிகடையை விரிவுபடுத்த ஒப்பந்தம் செய்துகொண்டேன். மாதம் 15,000 மட்டுமே வருமானம், ஆனால் எனது தேவையோ 75,000. எனது மனைவி சத்யா தனியார் பள்ளி ஆசிரியை என்பதால் அவர் மூலம் ஒரு 10,000 கிடைக்கும், மற்றபடி கொடுக்கல் வாங்கலில் சமாளித்தேன். இந்த நிலையில் எங்கள் மகள் தனிஸ்காவைப் பள்ளியில் சேர்க்கும் நிலை. எல்லாவற்றையும் மனதில் வைத்து உழைத்தேன், உழைத்தேன், எனது கடின உழைப்பால் ஓரளவு வருமானமும் அதிகரிக்க ஆரம்பித்தது.

ஒரு வாடிக்கையாளரில் ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைச் சம்பாதித்தேன். இந்த நிலையில் எனது அலுவலகத்திற்கு வந்த பெரியதொரு நிறுவனம் ‘‘இவ்வளவு சிறியதாக அலுவலகம் வைத்து நடத்துகிறீர்கள், உங்களை நம்பி மிகப் பெரிய ஆர்டரை எப்படித் தருவது’’ என திரும்பிச் சென்றுவிட்டது. இதில் இவ்வளவு பெரிய சிக்கல் இருக்கிறதா என்று உணர்ந்த நான் 750 சதுர அடியில் சென்னையின் முக்கியப் பகுதியான தேனாம்பேட்டை சேமியர்ஸ் சாலையில் மிகுந்த சிரமங்களுக்கிடையே ஒரு அலுவலகம் அமைத்தேன்.

அதன்பிறகு கிடைத்த தொழில்வாய்ப்புகளின் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு Franchisee Consulting, Franchisee Marketing and Recruitment, Franchisee Resale, Franchisee Marketing, Franchisee Property, Franchisee Design, Franchisee Legal, Business Brokerage, Trade Mark ஆகிய சேவைகளை வழங்கி வருவதோடு, தொழில்முனைவோருக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களைச் செய்துவருகிறேன். அரபு நாடான (UAE) அபுதாபியில் ஃபிரான்சைஸ் லேண்ட்மார்க் என்ற மற்றொரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறேன். உலக நாடுகளிலிருந்தும் பல்வேறு நிறுவனங்கள் இன்றைக்கு அணுகுகின்றன’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் ஐயப்பன் ராஜேந்திரன்.

‘‘ மூன்றாவது நிறுவனமான பிராண்ட் எக்ஸ்பர்ட் மூலம் ஒரு நிறுவனத்திற்கு லோகோ முதல் அதனை ஒரு பிராண்ட் நிறுவனமாக உருவாக்குவது வரை உள்ள தொழில்முனைவு வேலைகள் அனைத்தையும் செய்து கொடுக்கிறோம். இன்றைக்குப் பல லட்சங்களில் வரவு - செலவு செய்துகொண்டிருக்கிறோம். அடுத்தகட்டமாகச் சிங்கப்பூர், மலேசியா, லங்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கிளை நிறுவனங்களை விரைவில் தொடங்க உள்ளோம்.

இன்றைய நிலையில் இந்தியாவில் சுயமாக, சுலபமாக ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு இந்த ஃபிரான்சைஸ் தொழில் மிக நேர்த்தியாக உள்ளது. இதன் மூலம் இளம் தொழில் முனைவோர்கள், பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய வாய்ப்பாக இந்தியாவில் 4,500க்கும் மேற்பட்ட பிராண்ட்கள் தங்களை ஃபிரான்சைஸி வாயிலாக விரிவுபடுத்திக்கொள்கின்றன. இதுவே ஒரு வாய்ப்பாக அமைகிறது இன்றைய தொழில்முனைவோருக்கு’’ என்று தன்னம்பிக்கையூட்டும் விதமாகத் தன் நிலை உயர்ந்ததைச் சொல்லி முடித்தார்.

  - தோ.திருத்துவராஜ்

X