சிலம்பாட்டத்தில் பள்ளி மாணவி கின்னஸ் சாதனை முயற்சி!

4/12/2019 11:54:29 AM

சிலம்பாட்டத்தில் பள்ளி மாணவி கின்னஸ் சாதனை முயற்சி!

நன்றி குங்குமம் கல்வி- வழிக்காட்டி

* சாதனை

வெற்றியும் தோல்வியும் வீரருக்கு அழகு என்பது பொன்மொழி. அம்மொழியை வேதவாக்காக எடுத்துக்கொண்டு தயக்கமின்றி களத்தில் இறங்கி சிலம்ப விளையாட்டில் சாதித்து வருகிறார் சென்னை திருவொற்றியூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி ரூபிகா. அப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரூபிகா சிலம்பம் மட்டுமில்லாமல் பரதநாட்டியம், கர்நாடக இசை, ஓவியம் என்று சகலகலாவல்லியாகவும் திகழ்ந்துவருகிறார்.


மின்னல் வேகத்தில் இவர் சிலம்பம் சுற்றுவதைப் பார்ப்பதே தனி அழகாக உள்ளது. பள்ளி மாணவி ரூபிகாவுக்கு பயிற்சி அளித்துவரும் கோவில்பட்டி சுவாமி விவேகானந்தா யோகா அண்ட் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சுரேஷ்குமார் கூறுகையில், ‘‘நம் தமிழ்ப் பாரம்பரியத் தற்காப்புக் கலையான சிலம்பத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பயிற்சி எடுத்துவருகிறார் ரூபிகா. அவரிடம் நான் கண்டுகொண்டது, ஒரு முறை தோல்வியடைந்தால் அடுத்த முறை வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வேகத்துடன் பயிற்சியில் ஈடுபடுவார்.

சென்னை மாவட்ட அளவில் 15 வயதுக்குட்பட்டோருக்கான சிலம்பப் போட்டி கடந்த 2017ஆம் ஆண்டு நடந்தபோது தோல்வியடைந்தார். ஆனால், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை தட்டிச்சென்றார். அதேபோல் இந்திய அரசின் நேரு யுவகேந்திரா நடத்திய மாநில அளவிலான 15 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 2018ஆம் ஆண்டு தோல்வி அடைந்தார். ஆனால், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை தட்டிச்சென்றார்’’ என்று சொல்லி சிலம்ப பயிற்சியாளர் சுரேஷ்குமார் தன் மாணவி மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.  

மேலும் தொடர்ந்த அவர், ‘‘சிலம்பக்கலையில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றிகளை குவித்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி கன்ஸ்யூமர் அண்ட் பீப்புள் ரைட்ஸ் புரொடக்‌ஷன் சென்டர் ஸ்டேட் பிரசிடென்ட் ராஜ்குமார், உலக சாதனை படைப்புகளைக் கண்காணிக்கும் நடுவராக உள்ள ரவி, பாலமுருகன் ஆகியோர் முன்பு 1 மணி நேரம் இடைவிடாது ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு சுற்றி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதுமட்டுமில்லாமல், கண்ணைக் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி 4 பானைகளை அசாத்தியமாக உடைத்து சாதனை படைத்தார். கடந்த ஓர் ஆண்டாக சிலம்பம் கற்று வரும் ரூபிகா தேசியப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதே தனது லட்சியமாகக் கொண்டுள்ளார்.

இந்த சாதனைச் சிறுமியின் தாய் புவனேஸ்வரி திருவொற்றியூரில் ‘ரூபிஸ் அழகு நிலையம்’ நடத்திவருகிறார். தந்தை சரவணன் அதே பகுதியில் நாட்டு மருந்துக்கடை நடத்திவருகிறார். இவரது ஒரே அண்ணன் ஹோமியோபதி பயின்று வருகிறார்’’ என்றார். சாதனை மாணவி ரூபிகாவின் முயற்சிக்கு சிலம்பப் பயிற்சி ஆசிரியர் சுரேஷ்குமார், பெற்றோர், பள்ளி முதல்வர், தாளாளர், ஹர்ஷினி ராஜ்ராம், ஆசிரியர் மற்றும் சக மாணவ மாணவிகள் வாழ்த்தி ஊக்கப்படுத்தும்படியே மேலும் பல வெற்றிகளை குவிக்க நாமும் மனதார வாழ்த்துவோம்!

   -தோ.திருத்துவராஜ்

X