அன்று சைக்கிளில் டீ விற்கும் வியாபாரி இன்று பிரைடல் மேக்கப் ஸ்டூடியோ உரிமையாளர்

5/14/2019 5:02:06 PM

அன்று சைக்கிளில் டீ விற்கும் வியாபாரி இன்று பிரைடல் மேக்கப் ஸ்டூடியோ உரிமையாளர்

நன்றி குங்குமம் கல்வி-வழிகாட்டி

வெற்றிக் கதை

முடிந்தால் முயற்சி செய்... முடியாவிட்டால் பயிற்சி செய்  அது உன்னை ஒரு நாள் உயர்ந்த நிலைக்கு கொண்டுவந்துவிடும் என்பார்கள். முயற்சி, பயிற்சி என விடாமுயற்சியால் இன்றைக்கு பிரபல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்டாக இருப்பதோடு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பிரைடல் ஸ்டூடியோ நூர் என இரண்டு ஸ்டூடியோக்களை வைத்துள்ளார்.

ஸ்டூடியோக்கள் மூலம் தொழில்முறையாக பிரபலங்களின் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள், விளம்பர நடிகர்களுக்கு மேக்கப் என கலக்கிக் கொண்டிருக்கும் சினிமா நட்சத்திர மேக்கப் ஆர்ட்டிஸ்ட் நூர் முஹம்மது தனது வெற்றிக்கதையை நம்மோடு பகிர்ந்துகொண்டார்...

‘‘பெரிய துணிக்கடையின் வாசலில் தன் துணிகளை விற்க நம்பிக்கையுடன் நிற்கும் பெரியவரைவிட தன்னம்பிக்கை மிக்கோர் உலகில் எவரும் இல்லை. அதுபோலத்தான் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு சென்னைக்கு ஓடிவந்தேன். நினைத்த வாழ்க்கை அமையவில்லை என்பதற்காக வருத்தப்படாமல் கிடைத்த வாய்ப்பை வசப்படுத்திக்கொண்டேன்.

இன்றைக்கு சினிமா பிரபலங்களுக்கும், விளம்பர கலைஞர்களுக்கும், திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் மேக்கப்மேனாக வலம் வந்துகொண்டிருக்கிறேன்’’ என்றவர் தன் சிறுவயது நிகழ்வுகளைக் கூற ஆரம் பித்தார்.‘‘புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிதான் என்னுடைய ஊர். அப்பா ஷேக் முஹம்மது, அம்மா பஹர்நிஷா பேகம். எங்கள் பெற்றோருக்கு என்னோடு சேர்த்து ஆறு குழந்தைகள்.

நாங்கள்தான் அவர்களின் சொத்து. நான் ஐந்தாவது. எங்கள் ஊர் தொடக்கப்பள்ளியில் படிக்கும்போது ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் நாடகம், நடிப்பு, நடனம், பேச்சு என கலந்துகொள்வதில் அதிக ஆர்வம். பள்ளி விழா நாடகத்தில் என்னுடன் சேர்ந்த மாணவர்கள் ரயில்போல் ஒருவர் பின்னால் ஒருவர் கோத்துக்கொண்டு செல்வார்கள். ரயில் நிலையத்தில் நான் போண்டா டீ விற்க வேண்டும். இதுதான் காட்சி. அப்போது, போண்டா டீ என்பதற்கு பதிலாக பொண்டாட்டி பொண்டாட்டி என கூறியிருக்கிறேன். இதைக் கேட்டு அரங்கமே விழுந்துவிழுந்து சிரித்ததாம்.

நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் எங்கள் பகுதியில் நடக்கும் மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடிக்கும் நாடகக்குழுவினரிடம் நடிக்க வாய்ப்பு கேட்பேன். ஆனால், யாரும் தரவில்லை. இவன் நன்றாக நடிக்கிறானே இவனை சினிமாவில் சேர்த்துவிட்டால் என்ன என விளையாட்டாக ஊரில் உள்ளவர்கள் பேசியது, எனக்கு சினிமாவில் ஒரு நடிகனாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதியவைத்துவிட்டது.

சினிமா மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்திவிட்டது. படித்துக்கொண்டிருக்கும்போதே 1994ஆம் ஆண்டில் ரயிலில் ஏறி சென்னைக்கு வந்து விட்டேன். நடிகர்களின் வீட்டு முகவரியோ மற்ற விவரமோ எதுவும் தெரியாது. அன்றைய பேப்பரில் பாடகர் மனோ வீட்டு நிகழ்வு விளம்பரம் ஒன்றில் அவர் வீட்டு முகவரி கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றேன்.

அவரது மகனின் வயதிலிருந்ததால் வீட்டில் சேர்த்துக்கொண்டார். நடிக்க வந்திருப்பதாக கூறினேன். எனது பெற்றோரின் முகவரி கேட்டு, அவர்களை வரவழைத்து புத்திமதி கூறி என்னை ஊருக்கு திருப்பி அனுப்பிவைத்து விட்டார்’’ என்று திரைத்துறை மீதான நாட்டத்திற்கு காரணத்தை கூறினார்.

தன் மனதில் பதிந்த லட்சியத்துக்கான இரண்டாவது முயற்சி மற்றும் திசை மாறி கிடைத்த வெற்றி குறித்து கூறும்போது,‘‘சினிமாவில் சேர வேண்டும் என்பதற்காக மீண்டும் சென்னைக்கு ஓடிவந்தேன். அந்தக் காலகட்டத்தில் சைதாப்பேட்டையில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்துக்கொண்டே ஒவ்வொரு சினிமா ஸ்டூடியோவாக ஏறி இறங்கினேன். முதன் முதலாக நான் நுழைந்தது வாஹினி ஸ்டூடியோதான். அங்கே ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. சான்ஸ் கேட்டுப் பார்த்தேன், கிடைக்கவில்லை.

சினிமாவில் ஏதாவது ஒரு வேலை செய்வோமே என டான்ஸ் மாஸ்டர் அந்தோணி மூலம் நடிகை அல்போன்சாவிடம் டச்சப் பாய் வேலைக்கு அசிஸ்டென்டாக சேர்ந்தேன். அதன்பிறகு ஓட்டல் வேலையை விட்டுவிட்டு மேக்கப் டச்சப் வேலையைத் தொடங்கினேன். வீட்டு வாடகை, சாப்பாடு செலவு பார்க்க வேண்டும் என்பதற்காக சைக்கிளில் டீ கேனைக் கட்டிக்கொண்டு இரவு நேரங்களில் கோயம்பேடு பகுதிகளில் டீ விற்பேன்.   

இதற்கிடையில் ஓட்டலில் வேலை செய்துகொண்டிருக்கும்போது ஒரு நாள் எக்மோரில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகம் சென்று நடிகர்களின் முகவரியைக் கேட்டேன். முதலில் என்னை போலீசில் ஒப்படைக்கலாம் என நினைத்தவர்கள், பாக்யராஜும் இப்படித்தான் வந்து கேட்டார் என பேசிக்கொண்டே சுமார் பத்துக்கும் மேற்பட்ட முகவரிகளைத் தந்தார்கள்.

அதனை வைத்துக்கொண்டு ஒவ்வொருவர் வீடாக அலைந்தேன். ஒருநாள் பாலுமகேந்திரா சார் ஆபீஸுக்கு போனேன், அங்கே ஒரு குழந்தையை வைத்து போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டிருந்தார்கள். என்னையும் வைத்து போட்டோ ஷூட் செய்தார். ஆனாலும் சான்ஸ் கிடைக்கவில்லை’’ என்றார்.

‘‘கிடைத்த டச்சப் பாய் வேலையில் மந்ரா, ரவளி என பலபேரிடம் அசிஸ்டென்டாக வேலை பார்த்தேன். அதையடுத்து 2003ல் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியில் நியூஸ் ரீடருக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்டாக வேலைக்கு சேர்ந்தேன். அதுதான் என் மேக்கப்மேன் கேரியரில் முக்கியமான காலகட்டம். அங்கே மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தபோது மாடல் மற்றும் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியாளர்களின் தொடர்புகள் மூலம் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தது.

2009ஆம் ஆண்டு சினிமா மேக்கப் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் உறுப்பினரானேன். அடுத்து ஹாலிவுட் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக வேண்டும் என முயற்சி எடுத்தேன். அதற்காக வெப்சைட் கிரியேட் செய்து இணையதளம் (makeupnoor.com) மூலம் முயற்சித்தேன். வாய்ப்புகள் ஏராளம் வர ஆரம்பித்தன.

முதன்முதலில் தனித்து மேக்கப் ஆர்ட்டிஸ்டாக நவ்யா நாயருக்கு மாயக்கண்ணாடி என்ற படத்தில் வேலை செய்தேன். அதையடுத்து சில மலையாளப்படங்கள்.

பின்னர் இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு யுத்தம் செய் படம் முழுவதுமே மேக்கப் ஆர்ட்டிஸ்டாக வேலை செய்தேன். அமலாபால், ஸ்ரேயா, நமீதா, குஷ்பு, ஸ்ருதிஹாசன், சமந்தா, சரத்குமார் உள்ளிட்ட நடிகர், நடிகைகளுக்கு பெர்சனல் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக வேலை செய்யும் வாய்ப்பு அமைந்தது. கமலஹாசனுக்கு ஒரு படத்தில் மேக்கப்மேனாக முழுவதும் வேலை செய்தேன்.

இன்றைக்கு தமிழகத்தில் பிரபல ஜவுளிக்கடையாக பேசப்படும் விளம்பரத்தில் கடை முதலாளியின் பேரனே நடிகராக வருவார். அவருக்கும் நான்தான் மேக்கப் ஆர்ட்டிஸ்ட். நம் தொழிலை ஒரு நிறுவனமாக ஆக்க வேண்டும் என ‘பிரைடல் ஸ்டூடியோ நூர்’ என ஆரம்பித்து ஏராளமான பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்டாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் விளம்பர ஆர்ட்டிஸ்ட்களுக்கும் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக வேலை செய்கிறேன்.

சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பிரைடல் ஸ்டூடியோ நூர் என ( Bridal Studio Noor) இரண்டு ஸ்டுடியோக்களை நிறுவியதால் இன்றைக்கு எந்நேரமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி என விமானத்திலும், ரயிலிலும், பஸ்சிலும் பயணப்பட்டுக்கொண்டேயிருக்கிறேன். நாம் ஓடி உழைத்துக் கொண்டிருக்கும்போது பலர் வந்து நம்மிடம் பணம் முக்கியம் இல்லை, உலகைவிட்டு போகும்போது நாம் ஒண்ணும் அதை எடுத்துப் போகப்போவதில்லை என்பார்கள்.

 அவர்களிடம் உதவி தேவைப்படும்போது கேட்டுப் பார்த்தால் ஓடிவிடுவார்கள். எனவே, நமக்கான வாழ்க்கையை நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும். வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதை மனதில் கொண்டு ஓடிக்கொண்டே யிருக்க வேண்டும், கண்டிப்பாக ஒருநாள் அது நடந்துவிடும்’’ என்று தன்னம்பிக்கையூட்டும் விதமாக பேசி முடித்தார்.

தத்துவங்களை சொல்ல ஆயிரம் பேர் வருவார்கள் உதவிடத்தான் ஒருவரும் வரமாட்டார்கள் என்று நூர் முஹம்மது சொல்வது உண்மைதான். நம் பசிக்கு நாம்தான் உணவு உட்கொள்ள வேண்டும். நம் லட்சியத்தை அடைய நாம்தான் உழைத்தாக வேண்டும். மன உறுதியும் கடின உழைப்பும் இருந்தால் வானம் நம் வசப்படும்.

- தோ.திருத்துவராஜ்

X