அசுர வேகத்தில் கணக்குப்போட அபாகஸ் பயிற்சி!

5/14/2019 5:04:37 PM

அசுர வேகத்தில் கணக்குப்போட அபாகஸ் பயிற்சி!

நன்றி குங்குமம் கல்வி-வழிகாட்டி

* பயிற்சி

எண்சட்டம் அல்லது அபாகஸ் (Abacus) என்பது, முக்கியமாக ஒருசில ஆசிய நாடுகளில் எண்கணித செயல்பாடுகளில், பயன்படுத்தப்பட்ட ஒரு கணிப்பீட்டுக் கருவியாகும். தற்காலத்தில் இந்த எண்சட்ட கருவியானது செவ்வக வடிவ மரச் சட்டத்தில், குறுக்காக உள்ள இணைப்புகளில் மணிகளைக் கோத்து மணிச்சட்டம் உருவாக்கப்படுகிறது. அபாகஸ் கல்வி மூலம் கடினமான கணக்குகளையும் நொடிப்பொழுதில் எளிமையாக முடித்திட முடியும். இதன் மூலம் கணிதம் பிடிக்காதவர்கள் கூட கணிதத்தில் சாதிக்கலாம். சீனர்கள் பெரும்பாலும் கால்குலேட்டர் பயன்படுத்துவதில்லை.

மாறாக அபாகஸ் மனக் கணிதத்தின் மூலமாகத்தான் கணக்குகளை செய்கின்றனர். ஆனால், நம்முடைய வாழ்க்கை முறை இயந்திரத்தை சார்ந்ததாக மாறிவிட்டது. குழந்தைகளுடைய மூளை செல்கள் சிறப்பாக செயல்பட இந்த அபாகஸ் பயிற்சி தேவைப்படுகிறது. அலோஹா அபாகஸ் கல்வி நிறுவனத்தை 2002ல் தொடங்கி இந்தியாவின் முதன்ைமக் கல்வி நிறுவனமாக்கிய கே. குமரன் அபாகஸ் கல்வி முறை குறித்து பல்வேறு கருத்துகளை நம்முன் எடுத்துவைத்தார்.

மணிச்சட்டம் (Abacus) என்றால் என்ன?

உங்களின் சிறிய வயதில் மணிச்சட்டம் என்ற கருவியை வைத்துக்கொண்டு விளையாடியது ஞாபகமிருக்கிறதா? அதுதான் அபாகஸ். சலாமியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கருவிக்கு அபாகஸ் என பெயரிட்டது மெசபடோமியர்கள். இதை கணிதத்திற்கான உபகரணமாக மேம்படுத்தியவர் கிரேக்க அறிஞரான டெட்ராமாகஸ். சீனாவில் கடந்த 2000 வருடங்களுக்கும் மேலாக கணக்குப்போடும் கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது அபாகஸ். அபாகஸை இன்றைய நவீன கம்ப்யூட்டர்களின் தந்தையென்று கூட குறிப்பிடலாம்.

மனக்கணக்கு பற்றி…

கணிதம் என்றாலே தூரம் ஓடுகிறதா உங்கள் குழந்தை? கவலையே படவேண்டாம். மனக் கணக்கு (Mental Arithmetic) என்பது ஒரு பயிற்சி. அந்தப் பயிற்சியை அளிப்பதன் மூலம் உங்களின் குழந்தை கணிதத்தோடு மிகவும் சிநேகிதமாகிவிடும். கால்குலேட்டர், அபாகஸ் போன்ற எந்த கருவிகளின் அவசியமும் இன்றி, குழந்தை தனது அறிவாற்றலை பயன்படுத்தியே துல்லியமாகவும், வேகமாகவும், கணக்குகளை முடிக்கும் அளவுக்கு தயார்படுத்துகிறது இந்தப் பயிற்சி.

இந்தப் பயிற்சியிலுள்ள மற்றொரு சிறப்பம்சம், எவ்வளவு கடினமான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்காக இருந்தாலும் கால்குலேட்டரை விடவும் வேகமாக உங்கள் குழந்தை போட்டு முடித்துவிடும் என்பதுதான்.

அபாகஸ் பயிற்சியில் அலோஹாவின் பங்கு…

மலேசியாவிலுள்ள Aloha Curriculum Development Department தான் அலோஹா பயிற்சித் திட்டதை வடிவமைத்துதிருக்கிறது. பயிற்சி, பாடம் என்றாலே அலுப்பும், களைப்பும் தருவதாக இருக்கும் என்ற கருத்து அலோஹாவால் தகர்க்கப்பட்டிருக்கிறது. அலோஹா இந்தியா அபாகஸ் பயிற்சியில் ISO 9001 -2000 சான்றிதழ் பெற்ற முதல் நிறுவனம். இன்று அலோஹா உலகெங்கிலும் 39 நாடுகளில் 5,500க்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டுள்ளது.

கணித்ததில் குழந்தைகளின் தொழில்நுட்பத்திறனை மேம்படுத்துவதுதான் அலோஹாவின் அடிப்படை நோக்கம். குறிப்பாகச் சொல்வதெனில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளை, உங்கள் குழந்தை வேகமாக, மிகச் சுலபமாக , விளையாட்டுப் போக்கில் புரிந்துகொண்டு போடக்கூடிய திறனை வளர்க்கிறது அலோஹா.பயிற்சியின் ஆரம்பத்தில், கணக்குகள் மிக சுலபமான முறையில், விளையாட்டாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. பத்து விரல்களையும், அபாகஸையும் பயன்படுத்திமுதலில் கூட்டல், கழித்தல் போன்ற கணக்குகளை சிறிய எண்களைக் கொண்டு போட ஆரம்பிக்கின்றன. குழந்தைகள். பிறகு படிப்படியாக தனது மன ஆற்றலின் மூலம் பெரிய எண்களையும், சிக்கலான எண்களையும் கணக்கு போடபழக்கப்படுத்திக் கொள்கின்றன.

அபாகஸைப் பயன்படுத்திப் பழக்கப்பட்டுவிடுவதால், குழந்தையின் மனதிற்குள்ளாகவே ஒரு கற்பனையான அபாகஸின் பிம்பம் பதிவாகிவிடுகிறது. எல்லா குழந்தைகளுக்கும் மூளைத்திறன் 3 வயதிலிருந்து 12 வயது வரை வளர்ச்சியடைகிறது. மணிச்சட்ட முறைக் கல்வி, வலப்பக்க மூளையையும் இடப்பக்க மூளையையும் சமமாக பயன்படுத்தி, குழந்தைகளின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சியைத் தூண்டுகிறது. அதனால் குழந்தையின் முழுமையான சிந்தனைத்திறன் மிகச் சிறப்பானதாக உருவாகிறது. பள்ளி, கல்லூரி, வேலை, ஏன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், வாழ்நாள் முழுமைக்கும் பயன்படக்கூடிய ஆற்றல்களை வளர்ப்பது அலோஹாவின் சிறப்பு அம்சங்களுள் ஒன்று.

மனக்கணக்குப் பயிற்சியில் உங்கள் குழந்தை எதையெல்லாம் சாதிக்கும்?

மனக்கணக்கு அதிக தன்னம்பிக்கை, கற்பனை திறன் மேம்பாடு, கவனமும் ஒருமுகப்படுத்தும் திறனும் அதிகரித்தல், கேட்கிற, ஆராய்ந்து உணர்கிற ஆற்றல்கள், ஞாபகசக்தி மற்றும் கணித ஆற்றல், கூர்ந்து கவனிக்கும் ஆற்றல், கணிதத்தின் மீதான, எண்களின் மீதான பயத்தை போக்கி, கணிதத்தின் மீதான ஈடுபாடு, படிக்கும், எழுதும் ஆற்றலை மேம்படுத்தும். அசுர வேகத்தில் கணக்கிடும் திறமையை மேம்படுத்தும்.

பயிற்சிமுறையின் காலம் எவ்வளவு?

இந்த பயிற்சியில் மொத்தம் எட்டு நிலைகள் உண்டு. ஒவ்வொரு நிலைக்கும் மூன்று மாதங்கள். அதாவது, ஒவ்வொரு நிலைக்கும் குறைந்தபட்சம் 12 வகுப்புகள் உண்டு.கணிதத்தின் மீது மட்டுமில்லாமல் பிள்ளைகளின் அனைத்துத் திறன்களையும் மேம்படுத்த அபாகஸ் பயிற்சி அவசியமானதாக உள்ளது.

- திருவரசு

X