கோபமும் ஆத்திரமும் நம் முன்னோர்களுக்கு சொந்தமானது!

5/14/2019 5:06:11 PM

கோபமும் ஆத்திரமும் நம் முன்னோர்களுக்கு சொந்தமானது!

நன்றி குங்குமம் கல்வி-வழிகாட்டி

* நடை உடை பாவனை 8

உடல்மொழி எப்போதும் வெளிப்படையான அளவீடுகளில் தெரியக்கூடியது. குறிப்பிட்ட நேரத்தில் ஒருவர் எந்த மாதிரியான உணர்ச்சியை உணர்கிறார் என்பதை அவருடைய அங்க அசைவுகள் காட்டிக்கொடுத்துவிடும். உதாரணமாக, ஒரு சூழலில் உள்ளுக்குள் பயப்படுபவர்களும், தங்களை தற்காத்துக்கொள்ள நினைப்பவர்களும் முதலில் தன்னிச்சையாக கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொள்வார்கள்.

மனிதர்களின் உடல்மொழியை கவனிக்கும்போதுதான், அவர்களின் உணர்ச்சி சார்ந்த நிலையை அறிந்துகொள்ளமுடியும். தினமும் பத்து நிமிடங்களாவது அடுத்தவர்களின் உடல் மொழியை கவனிக்க வேண்டும். அதேபோல் நம்முடைய உடல்மொழியைப் பற்றிய விழிப்புணர்வும் வேண்டும். அவற்றை சீர்தூக்கிப் பார்க்கும்போதுதான் உடல்மொழி பற்றிய புரிதல் கூடும்.

ஒரு பயிற்சியாக you tube-ல் ஒளிரும் ஏதேனும் ஒரு தொடர்கதையை எடுத்துக்கொண்டு கவனியுங்கள்.  சில விநாடிகளுக்கு ஒலி அளவை ஊமையாக்கிக் கொண்டு பாருங்கள். அந்தக் காட்சி என்ன சொல்கிறது என்பதை கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உடல்மொழி மூலம் புரிகிறதா என்று யூகித்துப் பாருங்கள். இப்போது அதே காட்சியை வசனம், இசை  ஒலியுடன் கேட்டுப்பாருங்கள். இரண்டு நிலைகளிலும் காட்சியின் புரிதல் இடைவெளி குறையக் குறைய உடல்மொழி மெல்ல மெல்ல புரியத் தொடங்கும்.

உலகெங்கும் மனிதர்களின் சில அடிப்படை சைகைகள் ஒன்றாக இருப்பது உணர்வு ரீதியான வெளிப்பாட்டை புரிந்துகொள்ள உதவியாகவே இருக்கும். அப்படி ஒரே மாதிரியாக இருக்கும் மனிதர்களின் அடிப்படை சைகைகளை ஆராய்ந்தபோது, மக்கள் சந்தோஷமாக இருக்கும்போது சிரிப்பவர்களாகவும், கோபமான நேரங்களில் முறைப்பவர்களாகவும்,பயம்,கவலை கொண்டவர்களாக இருக்கும்போது அழுபவர்களாகவும் இருப்பது தெரிந்தது.

 இதுவே உலகெங்கும் இருக்கும் பொதுவான வெளிப்பாடு. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் பார்த்திருக்கலாம். இடுப்பு, கழுத்து, தலை என்று மூன்று பாகங்களும் தனித்தனியே அசையும் பொம்மையைப் பார்க்கும்போது அது எதை எதையோ சொல்ல வருவதைப் போலவே இருக்கும். இப்படித்தான் மனிதர்களின் அங்க அசைவுகளும் எப்போதும் எதையேனும் அடுத்தவருக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் மனிதர்களின் அங்க அசைவுகளிலேயே மிகவும் சுவாரஸ்யமான அசைவு தலையசைப்புதான்.

உலகெங்கும் மனிதர்கள் ‘ஆமாம்’ என்று ஆமோதிப்பதற்கு தலையை மேலிருந்து கீழாக அசைப்பவர்களாகவும், இல்லை அல்லது வேண்டாம் என்று மறுக்கும்போது தலையை இடமிருந்து வலமாக அசைப்பவர்களாகவுமே இருக்கிறார்கள். இந்தத் தலையசைப்பு மனிதர்களுடன் கூடப்பிறந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆமாம்/இல்லை என்று தலையசைக்கும் சைகையைப் பிறவிக் குருடர்கள் கூட செய்வதைக் கவனிக்கலாம்.

உலகெங்கும் ஒருவர் தலையை இடவலமாக அசைத்தால் அது ‘இல்லை’ என்ற சைகையை வெளிப்படுத்துவதாகத்தான் அர்த்தம்.  பிறந்த குழந்தைகள் கூட, தேவையான அளவு பாலை அருந்தியபின், தலையை இடவலமாக ஆட்டி போதும்/வேண்டாம் என்பதை குறியீடாக தெரிவிக்கிறது. பசியின் அளவைக்கொண்டு தொடங்கும் இந்தத் தலையசைப்பு செயல், வாழ்க்கையில் கருத்துகளை மறுப்பதற்கும், முரண்படுவதற்கும் தலையை இடவலமாக அசைப்பதையே மேற்கொள்கின்றன.

மனிதர்களின் சில அடிப்படைச் சைகைகள் முன்னோர்களிடமிருந்து வழிவழியாக இருந்து வந்திருக்கிறது. அதில் முக்கியமானது கோபத்தின் வெளிப்பாடு. கோபங்களையும், ஆத்திரங்களையும் (அவை வாழ்க்கைக்கு தேவையற்ற உணர்ச்சி வெளிப்பாடு என்பது ஒருபுறம் இருந்தாலும்) வெளிப்படுத்தும்போது, மனிதர்களின் செயல்பாடு அவர்களின் தந்தை வழி வம்சத்தினரை பிரதிபலிப்பதாகவே இருக்கும். அதாவது, கோபமும் ஆத்திரமும் நம் முன்னோர்களுக்கு சொந்தமானது.

‘போட்டு உடைக்கிறதுல அப்பன் தாத்தனைப் போலவே இருக்கிறான்’ என்று சில பெண்கள் தங்கள் பிள்ளை குறித்து அலுத்துக்கொண்டு குறிப்பிடுவது இந்தச் செயல்பாட்டைத்தான் மனிதர்கள் கோபப்படும்போது முதலில் வாயைத் திறந்து பற்களை வெளிக்காட்டுகிறார்கள். இன்னும் உன்னிப்பாக கவனித்தால் முகத்தில் நாசித்துவாரத்தை விரிவடையச் செய்வதையும் கவனிக்கலாம். இந்தச் சைகை பரிணாம வளர்ச்சியாக முன்னோர்களிடமிருந்தே வந்திருக்கிறது. மரபியல் ரீதியாக இது மாமிசம் உண்ணும் விலங்குகளிலிருந்து வந்திருக்கிறது.

கோபம் வெளிப்படும் நேரங்களில் மிருகங்கள் வாயை முழுவதுமாகத் திறந்து பற்களைக் காட்டுவதோடு, நாசித் துவாரங்களையும் விரிவடைய வைத்துக் காட்டுகின்றன. அது சண்டைக்குத் தயார் என்பதை வெளிக்காட்டவே அவ்வாறு செய்கின்றன. தாக்குதலின் ஆரம்ப அடையாளத்தை வெளிப்படுத்தும் மிருகங்கள் கோபத்தில் உறுமல் சப்தங்களையும் எழுப்பும். மிருகங்களின் இந்தச் செயல்பாடு மரபியல் ரீதியாக இப்போதும் மனிதர்களிடம் இருந்துகொண்டே இருக்கிறது. அதனால்தான் மனிதர்களும் கோபத்தின் உச்சத்தில், எரிச்சலில், உறுமல் வகையிலான ‘ஏஏஏ…ஆஆஆ…ஊஊஊ…’ போன்ற சப்தங்களை எழுப்பி உணர்ச்சி பாவத்தை வெளிக்காட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

மனிதர்களின் அடிப்படைச் சைகைகளில் அடுத்த சுவாரஸ்யம்-தோள்களைக் குலுக்குவது. தெரியவில்லை/புரியவில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தும்போது மனிதர்கள் தோளைக் குலுக்கி உயர்த்தியபடியான பாவனையை செய்வார்கள். அதேபோல் உள்ளங்கைகளை விரித்துக்காட்டுவது (இல்லை பார்த்துக்கோ…) புருவங்களை உயர்த்திக்காட்டுவது, உதடுகளை சுழிப்பது போன்ற பாவனையை செய்வார்கள். இவை அனைத்தும் ஒரே கருத்தைத்தான் முன்மொழிகின்றன. இவை அனைத்தும் உலகெங்கும் ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றன.

கலாசாரத்திற்கு கலாசாரம் உடைகள் மாறுவதுபோல், பேச்சுமொழி வேறுபடுவதுபோல் உடல்மொழியும் வேறுபடும். ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தில் ஒரு பொதுவான சைகை தெளிவான அர்த்தத்தில் இருக்கும். அதே சைகை வேறு ஒரு கலாசாரத்தில் அர்த்தமற்ற சைகையாக இருக்கும். உடல்மொழி புதிராக மாறுமிடம்
இதுதான்.                               

- தொடரும்       

உடை வழி - சட்டை

மனிதர்கள் கண்டுபிடித்த உடைகளிலேயே மிகவும் அழகான உடை என்றால் அது மேல்சட்டைதான். உடலில் கழுத்து முதல் இடுப்பு வரையிலான பகுதியை மறைத்திருப்பது போல் கண்டறியப்பட்ட உடை சட்டை. மனிதர்களில் ஆண்கள்தான் முதன் முதலில் தங்கள் உடலின் மேல் பாகத்தை உடையால் மறைத்துக்கொண்டார்கள். பிற்பாடுதான் பெண்கள் மறைத்துக்கொண்டார்கள் என்கிறார்கள் மானுடவியல் ஆய்வாளர்கள். அந்த வகையில் வரலாற்றில் முதன்முதலில் சட்டையானது லினன் துணியால் கி.மு 3000- ல் எகிப்தில் முதலாம் டார்கன் சாம்ராஜ்யத்தில் Flinders Pertie என்பவரால் கண்டறியப்பட்டதாக சொல்லப்படுகிறது. தோள் பகுதி, கைப் பகுதி, உடல் பகுதி மூன்றும் மூன்று பகுதிகளாக வடிவமைக்கப்பட்டு அணியப்பட்டதாக நம்பப்படுகிறது.

மத்திய காலத்தில் சட்டை Plain வகை துணியாக எவ்வித சாயப்பூச்சுகளும் இல்லாததாகவே இருந்தது. அது மெல்ல மெல்ல ஆடு மேய்ப்பவர்கள், கைதிகள், பாவமன்னிப்பு கோருபவர்களின் உடையாக மாறிப்போனது. ஆரம்ப காலங்களில் சுரங்கங்களில் பணியாற்றிய அமெரிக்கர்கள் இயற்கையின் இடர்பாடுகளிலிருந்து உடலைக் காக்க கழுத்து முதல் கால்கள் வரை ஒரே உடையாக வடிவமைத்து Shirt என்று பெயரிட்டுக் கொண்டார்கள். (இன்றளவும் அவ்வாறான உடையை அமெரிக்கர்கள் அணிவதைப் பார்க்கலாம்). Shirt ஐரோப்பாவிற்குள் சென்றபோது, பிரிட்டானியர்கள் அதை சற்று மாற்றி வடிவமைத்தார்கள்.

அவர்களுக்கு சட்டை என்பது முன்புறம் பட்டன் திறப்பு கொண்ட, காலர் வைத்த, முழுக்கையையும் மறைக்கும் இடுப்பு வரையிலான ஆடைதான். இந்தியர்களுக்கு சட்டையை பிரிட்டிஷ்காரர்களே அறிமுகப்படுத்தினார்கள். Shirt தான் பின்பு  சட்டையானது. அதனாலேயே இன்றுவரை சட்டையின் வடிவமைப்பும் அப்படியே இருக்கிறது. 17ம் நூற்றாண்டுகளிலிருந்துதான் சட்டை அனைத்துத் தரப்பு ஆண்களின் கவர்ச்சி உடையாக மாறியது.

18ம் நூற்றாண்டில் சட்டையின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் எழுந்தன. நீளமான, கை வேலைப்பாடுகள் (எம்பிராய்டரி) செய்யப்பட்ட சட்டைகள் வரத்தொடங்கின. அதே காலகட்டத்தில் ஆடை ஆய்வாளராக இருந்த Joseph Strutt ஆண்கள் சட்டை அணியாமலிருப்பது அநாகரிகம் என்று குறிப்பிட்டார். 19ம் நூற்றாண்டில் வண்ணங்களிலான சட்டைகள் அறிமுகமாகியது. இதை அன்றைய காலகட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்களில் காணலாம்.

வண்ணங்களிலான சட்டைகளின் அறிமுகத்திற்குப் பிறகு 1860ல் பிரான்சின் கரிபால்டியின் சிவப்புநிற சட்டை உலகப்பிரசித்தி பெற்றது. ஜெர்மனியின் நாஜி படையினர் பிரவுன் நிற சட்டையை அணிந்தார்கள். எதிர்ப்பை  தெரிவிக்க இத்தாலி பாசிஸ்டுகள் கறுப்புநிற சட்டையை அணிந்தார்கள். இன்றளவும் கடவுள் மறுப்பு/எதிர்ப்பு/துக்கம் போன்றவற்றை வெளிப்படுத்த மக்கள் கறுப்பு நிற சட்டையைத்தான் அணிகிறார்கள்.

அறிமுகமானதிலிருந்து சட்டையை (Shirt) ஆண்கள் மட்டுமே அணிந்து வந்தனர். ஆனால், தற்போது பெண்களும் சட்டையை அணிந்துகொள்கிறார்கள். ஆண்கள் அணியும் சட்டையும், பெண்கள் அணியும் சட்டையும் தையல் முறையிலேயே வித்தியாசப்படுகின்றன. ஆண்களின் சட்டையில் பட்டன்கள் வலது புறமாக தைக்கப்பட்டிருக்கும், அதுவே பெண்களின் சட்டைக்கு இடதுபுறம் தைக்கப்பட்டிருக்கும்.  சட்டை ஆண்களைப் பொறுத்தவரை அணிய சுலபமான உடை மாத்திரமல்ல ஒருவித கவர்ச்சியையும் தரக்கூடிய உடை.

- ஸ்ரீநிவாஸ் பிரபு

X