மதிப்பெண் பெறுவதுதான் கல்வியின் நோக்கமா?

5/14/2019 5:07:40 PM

மதிப்பெண் பெறுவதுதான் கல்வியின் நோக்கமா?

நன்றி குங்குமம் கல்வி-வழிகாட்டி

விழிப்புணர்வு

ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரும்போதெல்லாம் கூடவே ஒரு செய்தியும் வெளிவருகிறது. மதிப்பெண் குறைந்ததனால் மாணவி தற்கொலை என்னும் செய்திதான் அது. குறிப்பாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் இந்த அவலநிலைக்கு ஆளாகின்றனர். இது சமீபகாலத்தில்தான் அதிகரித்துவிட்டது.

நம் இளைஞர்களுக்கு இத்தகைய நெருக்கடிகள் ஏற்படக் காரணம் என்ன என்பதை திறந்த மனத்துடன் விவாதிக்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளை அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து சிறந்த மருத்துவராக பேரும், புகழும் அளவற்ற செல்வமும் பெற்று வாழ்க்கையை செழிப்பாக நடத்த வேண்டும் என்ற ஆசை ஒரு புறம். இவர்களின் இந்த ஆசை குழந்தைகள் மீது சிறு வயதிலேயே திணிக்கப்படும் அவலநிலை ஒரு புறம்.

பொருள் ஈட்டுவதே வாழ்வின் முதன்மையான நோக்கம் என்று கருதுகிற சமூகத்தின் பேராசைக்கு இன்னும் எத்தனை குழந்தைகளைப் பறிகொடுக்கப் போகிறோமோ!அதிக மதிப்பெண் பெறும் குழந்தைகளோடு தம் குழந்தையை ஒப்பிட்டு அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி அதன்மூலம் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது.

தன்னம்பிக்கை தருகிறோம் என்ற பெயரில் முதலாவதாக வருபவனைத்தான் இந்தஉலகம் நினைவில் வைத்திருக்கும் என்று நிலவில் முதலில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் கதையை கூறி அவர்களை உசுப்பேற்றி விடுவது. இப்படி ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தி அவர்களை தற்கொலைக்கு தள்ளிவிடுவதே இந்த சுற்றுச்சூழல்தான். இது நம் மக்களிடமும் மாணவர்களிடமும் கல்வி குறித்த தெளிவான புரிதல் இல்லாமையையே காட்டுகிறது.

வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கு உடல், உள்ளம், ஆன்மா இவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வது கல்வியின் தலையாய நோக்கமாக இருந்தால் இத்தகைய தற்கொலைகள் தவிர்க்கப்படலாம். கல்வியை பொருளீட்டு வதற்கான நுழைவாயிலாகப் பார்க்கும் மனப்பான்மையை பெற்றோர்களிடம் ஏற்படுத்தியதில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

கல்விக்கு செலவழிக்கும் தொகையை முதலீடாகக் கருதுவதனால் அதிலிருந்து என்ன லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு சமூகத்தில் புரையோடிப் போயுள்ளது. லாப நட்ட கணக்குப் பார்க்க கல்வி என்பது வியாபாரமல்ல என்ற எண்ணம் நம் மக்களிடம் ஏற்படாத வரை இவற்றுக்கு விடிவுகாலம் பிறக்காது.

ஒருவர் சம்பாதிக்கும் தொகையில் கணிசமான அளவு தம் குழந்தைகளின் கல்விக்காக செலவிடுகிறார் குறைந்த அளவு கட்டணம் செலுத்தும் பள்ளியாக இருந்தாலும் ஒரு குழந்தைக்கு ஓர் ஆண்டுக்கு 50,000 ரூபாய் என்று கணக்கிட்டாலும் 14 ஆண்டுகளுக்கு (கே.ஜி. வகுப்புகளையும் சேர்த்து) 7 லட்சம் ரூபாய் இரண்டு குழந்தைகள் எனில் இது இரு மடங்கு ஆகும்.

இவ்வளவு தொகையை நம் பெற்றோர் செலவழித்து நாம் இவ்வளவு குறைவான மதிப்பெண்ணை பெற்றுள்ளோமே என்னும் குற்ற உணர்வு ஏற்படுவது இயற்கைதான். இது கல்வியை பணமாகப் பார்ப்பதன் விளைவு. இதற்கும் தனியார் கல்வி நிறுவனங்கள்தான் காரணமாக அமைகின்றன.

பாடம், தேர்வு, மதிப்பெண் என்று கல்வியின் நோக்கத்தை சுருக்கிவிட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு மதிப்புக் கல்வி, நன்னெறிக் கல்வி, விளையாட்டு, ஓவியம், இசை என எதையும் கற்பிக்காமல் தேர்வு மட்டுமே அவர்களின் ஒற்றை இலக்காகிப் போனதன் விளைவுதான் இந்தத் தற்கொலை நிகழ்வுகள் பெருகுவதற்கு காரணமாக அமைந்தது.

சக மனிதர்களுக்கு உதவுதல் பொது நலத்திற்கு பாடுபடுதல் சமூக அவலங்களை எதிர்த்து போராடுதல் போன்ற நற்குணங்களை நம் கல்வி முறை வளர்க்கத் தவறியதன் விளைவுகளை இப்போது நாம் அறுவடை செய்துகொண்டிருக்கிறோம்.உயர்ந்த மதிப்பெண் பெறுவது மட்டும்தான் கல்வியின் நோக்கமா? சராசரி மதிப்பெண் பெற்றவர்களும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்களும் வாழ்வில் எதையுமே சாதிக்க முடியாதா? என்னும் வினாக்களுக்கு சரியான விடையை நம் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய தேவை இப்போது ஏற்பட்டுள்ளது.

படிக்காத மேதை காமராசரை நம் மாணவர்கள் படிக்க வேண்டும். சமூகத்திற்கு பயனுள்ள செயல்களைச் செய்தவர்களில் பெரும்பாலானோர் அதிகம் படிக்காதவர்களே என்பதை நம் மாணவர்கள் உணரும் வகையில் அவர்களுக்கு எடுத்துக் கூறி மதிப்பெண் குறித்த அவர்களின் தவறான புரிதலைக் களைய வேண்டும்.

கல்வியின் நோக்கத்தை நம் குழந்தைகளுக்கு அவர்கள் உணரும் வகையில் விளக்குவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் தலையாய கடமையாகும்.தன்னம்பிக்கையை விதைத்து மாணவர் மனங்களில் நற்சிந்தனைகளை அறுவடை செய்வோம்.

குறைவாக மதிப்பெண் பெற்றாலும் பல வகையான உயர்கல்வி வாய்ப்புகளைப் பல்வேறு நிறுவனங்கள் வழங்குகின்றன. நம்மிடம் உள்ள திறமையை வளர்த்துக்கொண்டு அதிலிருந்து நாம் நமக்கான பாதையை வகுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆசிரியர்கள் தெளிவுபடுத்தி மாணவர்கள் உள்ளங்களில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

இப்படி எல்லா வகையான நம்பிக்கை வாசல்களைத் திறந்து வைத்து மாணவர்களுக்கு வழிகாட்டுவோம். தன்னம்பிக்கை கொண்ட சமுதாயத்தைஉருவாக்குவோம்!

இரத்தின புகழேந்தி

X