தேசிய தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்!

5/16/2019 5:03:36 PM

தேசிய தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் கல்வி நிறுவனங்களிடையே போட்டியை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நடைமுறையை மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு முதல் பின்பற்றி வருகிறது. அதன்படி 2019-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். அதில் ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் இரண்டாம் இடத்தையும், தில்லி ஐஐடி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

கடந்த ஆண்டு பத்தாம் இடத்திலிருந்த அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு 14-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 21-வது இடத்தையும், திருச்சி என்ஐடி 24-வது இடத்தையும், வேலூர் விஐடி 32-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த முறை 29-ஆம் இடத்திலிருந்த சென்னைப் பல்கலைக்
கழகம் இந்த ஆண்டு 33-ஆம் இடம் பிடித்து பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் பட்டியலிலும் அண்ணா பல்கலைக்கழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த முறை 4-ஆம் இடத்திலிருந்த அண்ணா பல்கலைக்கழகம், இம்முறை 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல கடந்த முறை 18-வது இடத்திலிருந்த சென்னைப் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு 20-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. முதல் 100 பட்டியலில் 21 தமிழகப் பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.

X