பாராளுமன்ற தேர்தலால் TNPSC தேர்வுகளின் தேதிகள் மாற்றம்!

5/16/2019 5:07:18 PM

பாராளுமன்ற தேர்தலால் TNPSC தேர்வுகளின் தேதிகள் மாற்றம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏப்ரல் 20-ம் தேதியும், வேதியியலர், இளநிலை வேதியியலர் பணி, உதவி புவியியலர், புவிவேதியியலர், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 21-ம் தேதியும் தேர்வு நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தத் தேர்வுகள் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் வெளியிட்ட அறிக்கையில் ‘இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது.

இதனை கருத்தில்கொண்டு நிர்வாக காரணங்களுக்காக ஏப்ரல் 20 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெற இருந்த முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர்/இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் எழுத்துத் தேர்வு மே 11-ம் தேதி (காலை மற்றும் மதியம்), வேதியியலர்/ இளநிலை வேதியியலர் எழுத்துத் தேர்வு மே 5-ம் தேதி(காலை மற்றும் மதியம்), உதவி புவியியலர்/ புவி வேதியியலர் எழுத்துத் தேர்வு  மே 5-ம் தேதி(காலை மற்றும் மதியம்), அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் எழுத்துத் தேர்வு மே 5-ம் தேதி (காலை மற்றும் மதியம்) என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறும்.

அதேபோல ஏற்கனவே அறிவித்தபடியே, கணக்கு அலுவலர்கள் (பிரிவு-3) பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மே 5-ம் தேதியும், அரசு குற்றவியல் உதவி வழக்கறிஞர்கள் (நிலை-2) முதன்மை எழுத்துத் தேர்வு மே 11 மற்றும் 12-ம் தேதியும் நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.

X