மூடுவிழா காணும் பொறியியல் கல்லூரிகள்!

6/3/2019 3:19:46 PM

மூடுவிழா காணும் பொறியியல் கல்லூரிகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

* சர்ச்சை

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. இவற்றில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 22 தனியார் பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த 22 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை புதுப்பிக்கவில்லை. இந்தக் கல்லூரிகளில் இந்தாண்டு மாணவர் சேர்க்கை இருக்காது என்று அண்ணா பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்வியாளரும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருமான முனைவர் முருகையன் பக்கிரிசாமியின் கருத்துகளைப் பார்ப்போம்…

பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமுதாயத்தால் மருத்துவப் படிப்பிற்கு அடுத்த நிலையில் விருப்பத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்பு பொறியியல் படிப்பாகும். தொழில் படிப்புகளில் இவை இரண்டுக்கும் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது. தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் 4 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே தரமான பொறியாளர்களை உருவாக்கி, தமிழ்நாடு தந்த பரிசாக உலகம் முழுவதும் பயனுறும் வகையில் பொறியாளர்களை தந்துகொண்டிருந்தது. ஆனால், இன்று அரசு பொறியியல் கல்லூரிகள் மூன்று, அரசு உதவி பெறும் கல்லூரிகள் 10, அண்ணா பல்கலையில் உறுப்புக் கல்லூரிகள் 17 மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 584 என பரிணமித்து காட்சியளிக்கின்றன.

மாணவன் விரும்பக்கூடிய படிப்பைப் படிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். அரசால் மட்டும் இவ்வாய்ப்பை வழங்க இயலாது. அதற்குண்டான நிதி ஆதாரம் அரசிடம் இல்லை என்பதுபோன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி 1983ல் தமிழ்நாடு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் சுயநிதிக் கல்லூரிகளை ஏற்படுத்திக்கொள்ள தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. போதிய கட்டமைப்பு வசதிகளோடு அனைத்திந்திய தொழில்நுட்பக் கழகம் வரையறுத்துள்ள விதிகளுக்குட்பட்டு தமிழ்நாடு தொழில் நுட்பக் கழகத்தின் அங்கீகாரத்தோடு இக்கல்லூரிகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பெரும்பாலான அரசியல் பிரமுகர்கள் பெருவணிகர்கள் நிலவிற்பனை ஊக்குநர்கள் (ரியல் எஸ்டேட் பிரமோட்டர்) சுயநிதிக் கல்லூரிகளை சேவை நோக்கத்திலிருந்து விலகி வணிக நோக்கில் ஆரம்பித்தனர்.

புற்றீசல் கல்லூரிகள் பழங்காலத்தில் வடிவமைக்கப்பட்ட ஒவ்வொரு ஊருக்குச் செல்வதற்கு முன் ஊர் வரப்போகிறது என்பதை அறிவிக்கும் வகையில் அவ்வூரின் காவல் தெய்வம் அய்யனார் கோயில் குதிரைச் சிலையோடு நம்மை வரவேற்கும். இன்று அதற்குப் பதிலாக சுயநிதி பொறியியல் கல்லூரிகள் நம்மை வரவேற்கின்றன. ஊரின் புறப்பகுதியில் பெரிய நிலப்பரப்பை குறைந்த முதலீட்டில் வாங்கி கட்டடம் மட்டும் கட்டி எப்படியோ அனுமதியும் பெற்று நடத்தப்படும் இக்கல்லூரிகள் புற்றீசல்களாக பெருகி இன்று சுமார் 584க்கும் மேற்பட்ட அளவில் உள்ளன.

வணிக நோக்கம்

வணிக நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம், நன்கொடை, வரவு  செலவு கட்டணம் (கேப்பிடேஷன் பீஸ்), ஆய்வகக் கட்டணம் என பல்வேறு கட்டணங்களை வசூலித்ததே தவிர பொறியியல் கல்வியின் தரத்தில் கவனம் செலுத்தவில்லை. மாறிவரும் சூழ்நிலை, தேவையைக் கருத்தில்கொண்டு ஆய்வக வசதிகளை மேம்படுத்தவில்லை. உட்கட்டமைப்பு வசதிகளைப் பற்றி நிர்வாகம் அக்கறை செலுத்தவில்லை.

பேராசிரியர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காமல் மிச்சப்படுத்த நிர்வாகம் முனைந்தது. உரிய கல்வித் தகுதியும், அனுபவமும் இல்லாத அந்த ஆண்டில் பொறியியல் படிப்பை முடித்த பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் கூட பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். போதிய வசதிகள் இல்லாமலேயே புதுப்புதுப் படிப்பு பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. தொழில் நிறுவனங்களின் அவ்வப்போதைய தேவையை அறிந்து அதை பூர்த்தி செய்யும் வகையில் புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவில்லை.

மொத்தத்தில் வருடத்திற்கு இரண்டு மில்லியன் பொறியியல் பட்டப்படிப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறதே தவிர, தகுதியான பொறியாளர்களை உருவாக்கத் தவறியது இவ்வணிக நோக்குக் கல்லூரிகள்.

முறையான கண்காணிப்பு இல்லை

இக்கல்லூரிகள் தரமான பொறியியல் கல்வியை தருகிறதா என்பதை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு மேல்நடவடிக்கை எடுக்கவேண்டிய இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகமும், பல்கலைக்கழகங்களும் (மானிட்டரிங் அத்தாரிட்டி) தரத்தை உறுதிப்படுத்துவதைவிடவும் புதிய புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதிலும், பாடப்பிரிவுகளைத் தொடங்குவதிலும் மட்டுமே ஆர்வம் காட்டத் தொடங்கின.

பொறியியல் கல்லூரிகள் 2003ல் 250 இருந்தன. 2018ல் இரண்டு மடங்காகி 584 கல்லூரிகள் ஆகின. 78,000-த்திலிருந்து 1.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. வேலை தரக்கூடிய நிறுவனங்கள் எதிர்பார்க்கக்கூடிய திறன் இல்லாத பொறியியல் பட்டதாரிகள் உருவாக்கப்பட்டனரே தவிர பொறியாளர்கள் உருவாக்கப்படவில்லை. கணினி பொறியாளர்களுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. அவர்களும் தரமான பொறியாளர்களாக உருவாக்கப்படாததால் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) படித்தவர்களையும் கலை  அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களையும் இந்நிறுவனங்கள் வேலைக்கு எடுத்து அவர்களுக்குரிய பயிற்சியும் தந்து வேலையும் கொடுத்தன. பொறியியல் பட்டதாரிகள் இந்த வகையிலும் வேலைவாய்ப்பை இழந்தனர்.

மாணவர் சேர்க்கையில் வீழ்ச்சி

2018 - 19ல் 23 பொறியில் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லையாம். கட்டடக்கலை (ஆர்க்கிடெக்சர்) என்ற 5 ஆண்டு படிப்பான பிரபலமான பிரிவில் கூட மாணவர் சேரவில்லையாம். 2016 - 17ல் 1.27 லட்சம் இடத்தில் 50 விழுக்காடு கூட நிரப்பப்படவில்லை. 14 கல்லூரிகளில் மட்டுமே முழுமையாக மாணவர் சேர்ந்தனர். 50 விழுக்காடு கல்லூரிகளில் 10 விழுக்காடு மாணவர்கள்கூட சேரவில்லையாம். 250 கல்லூரிகளில் 50 விழுக்காட்டுக்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்ந்தனர் என்பது வேதனை அளிக்கும் செய்தியாகும்.

மூடுவிழா

தமிழகம் முழுவதும் உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்ட அண்ணா பல்கலைக்கழகம் இளநிலை, முதுநிலை என 3,523 படிப்புகளையும் ஆய்வு செய்தது. இதில் முதற்கட்டமாக உட்கட்டமைப்பு வசதிகளை உரிய முறையில் பூர்த்தி செய்த 287 கல்லூரிகளில் 2,678 படிப்புகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. 250 கல்லூரிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்த 158 கல்லூரிகளில் 421 படிப்புகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

எஞ்சிய 92 கல்லூரிகள் விதிகளை பூர்த்தி செய்யாததால் சேர்க்கையை 50 விழுக்காடாக குறைத்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 22 கல்லூரிகளின் சேர்க்கையை ரத்து செய்து இவ்வாண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஆணையிட்டுள்ளது. மேலும், 92 கல்லூரிகளில் ஆய்வக வசதியின்மை, தகுதியான பேராசிரியர்கள் இன்மை என்பன போன்ற காரணங்களால் 300 பாடப்பிரிவுகளுக்கு மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொறியியல் கல்லூரிகளில் 9 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை இடங்கள் இவ்வாண்டு குறைக்கப்படலாம் என கருதப்படுகிறது.

கவனம் தேவை

பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் தான் சேர இருக்கும் பொறியியல் கல்லூரிகள் சார்ந்த அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த பிறகே முடிவெடுத்து சேர வேண்டும். கட்டமைப்பு வசதி, ஆய்வகம், தகுதியான பேராசிரியர்கள், வேலைவாய்ப்புக்கான வளாக நேர்முகத் தேர்வு, தேர்ச்சி விகிதம் ஆகியவற்றை விசாரித்து அறிதல் நல்லது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க அண்ணா பல்கலைக்கழகம் 2014 முதல் 2018 வரையிலுமான அனைத்து கல்லூரிகளின் தேர்ச்சி விகிதங்களை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- தோ.திருத்துவராஜ்

X