மருத்துவம் படிக்க விண்ணப்பிக்கலாம்..!

6/11/2019 3:03:14 PM

மருத்துவம் படிக்க விண்ணப்பிக்கலாம்..!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், தற்போது பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டுவந்த மருத்துவக் கல்லூரியும் நிகழாண்டு முதல் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், கரூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி ஒன்று இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

கடந்த ஆண்டு நிலவரப்படி பெருந்துறை கல்லூரியுடன் சேர்த்து 3,000 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்தன. அவற்றில் 15 சதவிகிதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டது. இதனிடையே கரூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.

இதேபோல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்களும் கிடைத்துள்ளன. மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 95 இடங்களுக்கும் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான 2019 - 20-ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜூன் 6-ஆம் தேதி முதல் www.tn.health.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் மூலம் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X