கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு! குறைந்த செலவில் பயோனிக் ஆர்ம்

6/12/2019 4:14:45 PM

கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு! குறைந்த செலவில் பயோனிக் ஆர்ம்

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

* கண்டுபிடிப்பு

ஒருமனிதனின் முக்கியமான இயக்கத்துக்கு தேவையான உறுப்புகளில் பிரதானமானவை கைகள்தான். எதிர்பாராத விபத்தில் ஒருவர் கையை இழந்தால் அவர் படும் அவஸ்தைகள் சொல்லில் அடங்காதவை. அந்த வேதனை கையை இழந்தவருக்குதான் தெரியும். அப்படி கையை இழந்தவர்களுக்கு மீண்டும் கை கிடைத்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்.

கை இழந்தவர்களை கவனத்தில் கொண்டு வேலூர் பாகாயம் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் மூளையுடன் இணைந்து செயல்படக்கூடிய ‘பயோனிக் ஆர்ம்’ என்ற செயற்கை கைகளை உருவாக்கியிருக்கிறார்கள். கார்த்தி, பத்ருதீன் தவ்லவி, ஹரிபிரசாத், முரளி ஆகிய நான்கு பேரும், தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் நான்காம் ஆண்டு பயின்று வருகிறார்கள். அதைப்பற்றி மாணவர்கள் கூறும் தகவல்களைப் பார்ப்போம்.

‘‘தற்போது, நிறைவாண்டு ப்ராஜெக்ட்டுக்காக ‘பயோனிக் ஆர்ம்’ எனப்படும், நமது மூளையின் கட்டுப்பாட்டில் செயல்படும் செயற்கைக் கைளை உருவாக்கியிருக்கிறோம். நாம் உருவாக்கும் ப்ராஜெக்ட், சமூகத்துக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அதையே எங்கள் வழிகாட்டியும் வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் இந்த செயற்கைக் கையை உருவாக்கினோம்’’ என்றவர்கள் பயோனிக் ஆர்ம் உருவாக்கத்தையும் செயல்படும் விதத்தையும் விவரித்தனர்.

‘‘ஐந்து விரல்களுடன் கூடிய செயற்கை கை, விரல்களை அசைக்க உதவும் சிறிய ஸ்டெப்பர் மோட்டார்கள், ஆர்டினோ- யுனோ போர்டு, பேட்டரி, ஈ.எம்.ஜி. சென்சார் ஆகியவை இதில் பயன்படுத்தியுள்ளோம். கையின் ஒரு பகுதியை இழந்தவர்களுக்கு, மிஞ்சியுள்ள பகுதியுடன் இந்தச் செயற்கைக் கரத்தை இணைக்க வேண்டும். அவர்களின் உடம்பில், ஈ.எம்.ஜி. சென்சாரை பொருத்த வேண்டும். சாதாரணமாக கையை இயக்குவதற்கு மூளை மண்டலத்துடன் இணைந்த நரம்புகளில் சமிக்ஞைகள் தூண்டப்படும். எங்கள் கண்டுபிடிப்பில் அந்த சமிக்ஞைகள் தசைகள் வழியாக, உடம்பில் பொருத்தப்பட்டிருக்கும் ஈ.எம்.ஜி. சென்சார் மூலம் மின்சார சமிக்ஞைகளாக மாற்றப்படும்.

அது, ஆர்டினோ யுனோ போர்டில் உள்ள மைக்ரோ பிராசசர்கள் மூலம், மென்பொருள் உதவியால், அவுட்புட்டாக சேர்க்கப்பட்டுள்ள சிறு ஸ்டெப்பர் மோட்டார்களை இயக்குவதற்குத் தேவையான வோல்டேஜாக செலுத்தப்படும். அப்போது அந்த மோட்டார்கள் இயங்கி, விரல்கள் செயல்படும். முன்பிருந்த கரங்கள் போல செயல் திறன் தரும். விரல்கள் மோட்டார் உதவியால் தேவையான அளவுக்கு நகர்ந்த பின் ‘லாக்’ ஆகிக்கொள்ளும் என்பதால், இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும்.’’ என்கின்றனர்.

‘‘சென்சார் தவிர மற்ற பாகங்களை வேலூரிலேயே வாங்கிவிட்டோம். சென்சாரை மட்டும் சென்னையில் வாங்கி வந்தோம். பரிசோதனையில் இயங்கத் தொடங்கியது. மொத்தம் ரூ. 6 ஆயிரம் செலவானது. இதை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்றால், கூடுதல் செலவாகும். ஆரம்பத்தில் இதன் கட்டை விரல் இயங்காமல், மற்ற நான்கு விரல்களும் ஒன்றாக இயங்கும் வகையில் உருவாக்கியிருந்தோம். தற்போது, கட்டை விரல் தனியாகவும், மற்ற நான்கு விரல்களும் மொத்தமாக தனியாகவும் இயங்கும். இதை இன்னும் ஒவ்வொரு விரலும் தனித்தனியாக இயங்கும் வகையில் உருவாக்கலாம். அதற்கு, ஒவ்வொரு விரலுக்கும் தனித்தனியே மோட்டார் பொருத்த வேண்டும். இதுபோன்ற மேம்பாடுகள் இருக்கின்றன. இதுபோல செயல்திறன் வந்தால் இயல்புக்கு வந்துவிடும்.

லட்சத்தைத் தாண்டிய விலையில், இதுபோன்ற செயற்கை உறுப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. நாங்கள் உருவாக்கிய கை, மிகவும் விலை மலிவானது என்பதுதான் இதன் சிறப்பு. எனவே, இதை விபத்து போன்ற நிகழ்வுகளில் பாதி கையை இழந்தவர்களுக்கு, இந்தக் கையை எளிதில் பொருத்தமுடியும். காரணம், அவர்களின் மூளை, கைக்கு உத்தரவுகளை அனுப்பி பழகியிருக்கும். ஆனால், பிறவியிலேயே பகுதி அளவில் கையை இழந்தவர்களுக்கும் இதைப் பொருத்துவது சாத்தியம்தான்.

எங்கள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை இதுவரை பெறவில்லை. இனிமேல்தான் அதுகுறித்து யோசிக்க வேண்டும். சற்றுக் கூடுதலாக செலவு செய்தால், அனைத்துப் பகுதிகளும் உள்ளடங்கியதாக, வயர்கள் அதிகம் தெரியாமல் ‘மோல்டு’ செய்யப்பட்டதாக இதைத் தயாரித்துவிடலாம். அதன் பின் காப்புரிமைக்கு கொண்டுசெல்லலாம். எங்கள் வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் பிரவீன்ராஜ், இதில் நாங்கள் இறங்குவதற்கும், கை முழுமை பெறுவதற்கும் ஒரு முக்கியக் காரணம். எங்கள் கல்லூரி முதல்வர் குமார் எந்திரவியல் துறைத் தலைவர் முரளீதர், பேராசிரியை காந்தசோபா ஆகியோரும் உறுதுணையாக இருந்தனர்’’ என்று தெரிவித்தனர் கல்லூரி மாணவர்கள்.

- ஆர்.சந்திரசேகர்    
 
மரபு சார்ந்த மேலாண்மைக் கொள்கைகள்

Management Immemorial (Learning from Literature) இப்படி ஒரு புத்தகம் சந்தைக்கு வந்துள்ளது. சுய முன்னேற்ற கருத்துகளை உள்ளடக்கிய இப்புத்தகம், வெறும் திறன் மேம்பாட்டு வழிகாட்டி நூலாக மட்டுமில்லாமல் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் வகையில் அதற்கு அடுத்தபடிநிலையை சென்று அடைகிறது.   மகாபாரதம், ராமாயணம், திருக்குறள், பாரதியார் கவிதைகள், ரவீந்திரநாத் தாகூர் படைப்புகள் என இந்தியாவின் பழம்பெரும் இலக்கிய ஆக்கங்களில் உள்ள மேலாண்மை சார்ந்த கருத்துகளை மேற்கோள் காட்டி மரபுசார்ந்த   மேலாண்மைக் கொள்கைகளை விளக்குவது இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு.  

மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஐந்து ஐந்தாக மொத்தம் பதினைந்து மேலாண்மைக் கொள்கைகள் எளிய மொழியில் தெளிவான நடையில்  விளக்கப்படுகின்றன. இந்திய இளைஞர்களின் பேராற்றலை மனதில்கொண்டு எழுதப்பட்ட இப்புத்தகம் நிச்சயம் நல்ல எண்ணங்களையும், நேர்மறையான சிந்தனைகளையும், தன்னம்பிக்கையையும் வளர்க்க உதவும் என்பதை தன் எழுத்தில் உணர்த்துகிறார் இந்நூலின் ஆசிரியர் ஜெகந்நாதன்.

X