சாக்பீஸ்களில் 1330 திருக்குறள் எழுதி சாதனை!

6/17/2019 5:43:23 PM

சாக்பீஸ்களில் 1330 திருக்குறள் எழுதி சாதனை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அரசுப் பள்ளி மாணவனின் அசத்தல் முயற்சி!

உலகம் முழுவதும் படைக்கப்படும் சாதனைகள் பலவிதமானவை. ஒவ்வொரு சாதனையாளரும் குறிக்கோள், திட்டமிடல், கடுமையான பயிற்சிகளோடு சாதனைகளைப் படைக்கின்றனர். அந்தவகையில் சிவகங்ககை மாவட்டம் கல்லல் அருகே உள்ள செம்மனூர் மெய்யம்மை காசி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ்குமார் 1463 சாக்பீஸ்களைப் பயன்படுத்தி 1330 திருக்குறள்களை எழுதி சாதனை படைத்துள்ளார்.

எப்போதுமே மற்ற மாணவர்களைவிடவும் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடும் சந்தோஷ்குமாரின் முயற்சியை கல்வியாளர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். சாக்பீஸில் திருக்குறள் எழுதும் எண்ணம் தோன்றியதையும் அதை சாத்தியப்படுத்திய விதம் பற்றியும் சந்தோஷ்குமார் நம்மிடம் பகிர்ந்துகொண்டவற்றைப் பார்ப்போம்.
‘‘நான் 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஃப்ரீ ஹவரில் கிளாஸில் நண்பர்களுடன் விளையாடுவது வழக்கம். அவ்வாறுதான் சாக்பீஸில் பெயர் எழுதி விளையாடிக் கொண்டிருந்தோம். சாக்பீஸில் உருவங்கள் வடிவமைப்பது, சிலைகள் மற்றும் பொம்மைகள் செய்வது போன்ற கலை வேலைப்பாடுகளுக்கு  சாக் ஆர்ட் என்று பெயர்.

அப்படி விளையாடும்போது, சாக்பீஸில் ஏதாவது வித்தியாசமாக பண்ணினால் என்ன? என்று தோன்றியது. திருக்குறளின் மகத்துவத்தைப் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழ்மொழியின் மீதுள்ள ஈடுபாட்டாலும் 1330 திருக்குறளையும் எழுதலாம் என முடிவெடுத்தேன். +1 தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் அதற்கான ஆயத்த வேலை
களில் இறங்கினேன்.

மொத்தம் இரண்டாயிரம் சாக்பீஸ்கள் வாங்கி, ஒவ்வொன்றாக இழைத்தேன். சாக்பீஸ்கள் உருளையாக இருப்பதால் எழுத்துகள் அழிய வாய்ப்புகள் உள்ளது. எனவே, அவற்றை நீட்டமாக இழைத்தேன். ஒரு திருக்குறள் ஒண்ணேமுக்கால் அடி. முதல் அடியின் நான்கு சீர்களை சாக்பீஸின் முன் பகுதியிலும் , இரண்டாவது அடியின் மூன்று சீர்களை சாக்பீஸ்களின் பின்பகுதியிலும் எழுதினேன். இழைத்தல், எழுத்துப் பணி என தொடர்ந்து எட்டு நாட்களில் தூங்கும் நேரம் ஐந்து மணிநேரம் போக மீதி நேரமெல்லாம் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டேன்.  

இவ்வாறாக 1330 திருக்குறள்களை எழுதினேன். மீத சாக்பீஸ்கள் இழைத்தலின்போது  வீணாகிப்போய்விட்டன. 133 அதிகாரங்களின் தலைப்புகளை கலர் சாக்பீஸில் எழுதி என்னுடைய பள்ளிக்கு கொண்டுசென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன் வைத்தேன். பின்னர் முகநூலிலும் பதிவிட்டேன். முகநூல் பதிவைப் பார்த்துவிட்டு சோழன் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு எனும் அமைப்பு எனக்கு சாதனை விருது அளித்தது. எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் உட்பட பல்வேறு ஆசிரியர்களும், மக்களும், மாணவர்களும் எனது முயற்சிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்’’ எனக் கூறும் சந்தோஷ்குமார், பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஐந்து மீட்டர் அளவில் இயங்கக் கூடிய ரேடியோ ஸ்டேஷனை வடிவமைத்து செயல்படுத்தி பார்த்திருக்கிறார்.

‘‘அப்பா சிங்கப்பூரிலிருந்து வாக்கிடாக்கி (Wireless) வாங்கி வந்திருந்தார். அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் வீட்டில் வாக்கிடாக்கி வைத்து நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டிலிருந்த எஃப்.எம் இயங்கிக்கொண்டிருந்தது. எஃப்.எம்மில் auto tune கொடுத்தபோது 99.2 என்ற அலைவரிசையில் சிக்னல் கிடைத்தது. ஆனால், எந்த சத்தமும் கேட்கவில்லை. வாக்கி டாக்கியை ஆன் செய்யும்போதும் ஆஃப் செய்யும்போதும் எஃப்.எம்மில் இரைச்சல் கேட்டது.

எஃப்.எம். ரிசீவரை எடுத்து வாக்கி டாக்கியில் கனெக்ட் செய்தவுடன் வாக்கி டாக்கியில் நாம் பேசுவது, பாடுவது எல்லாம் எஃப்.எம்மில் கேட்டது. இவ்வாறு தான் ஐந்து மீட்டரில் இயங்கக்கூடிய எஃப்.எம். தயாரானது. வாக்கிடாக்கி பேட்டரியில் இயங்குவதாலும், பெரிய ஆன்டனா இல்லாததாலும் இந்த 99.2 எஃப்.எம். ஐந்து மீட்டர் ரேடியஸில் தான் இயங்கும். என்னுடைய இந்த  முயற்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக மதுரை ரேடியோ சிட்டி எஃப்.எம். நிறுவனம் எனக்கு லைசன்ஸ் வாங்கி தந்து ஸ்பான்சர்ஷிப் செய்து காரைக்குடியில் ரேடியோ ஸ்டேஷனை வைத்து இயக்குவதற்கான வாய்ப்பை தருகிறேன் என்றார்கள். ஆனால், நான் மேலும் படிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டேன்’’ எனும் சந்தோஷ்குமார் தனது சாதனைகளுக்கான உந்துதல் கிடைத்த விதத்தையும் கூறினார்.

‘‘முதல் முறை சாதனை நிகழ்த்தும்போது நண்பர்கள், ஆசிரியர்கள், பெற்றோரிடம் கிடைத்த ஆதரவும், ஊக்கமும் தான் அடுத்தடுத்து சிறப்பான விஷயங்களை செய்ய வேண்டும் என்ற உந்துதலை கொடுக்கிறது. சிறுவயதிலிருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டேயிருந்தது. அப்படி ஆரம்பித்து எஃப்.எம். மற்றும் சாக்பீஸில் திருக்குறள் என தொடங்கியிருக்கும் என் முயற்சிகள் தொடரும். மக்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது ஒன்றை உருவாக்கி சாதிக்க வேண்டும் என்பதே என் வருங்கால கனவு’’ என்கிறார் சந்தோஷ்குமார். மக்களின் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு புதிய கண்டுபிடிப்பை படைக்க வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் எண்ணம் ஈடேற நாமும் வாழ்த்துவோம்!

- வெங்கட்
படங்கள்: குழந்தைசாமி

X