கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் பயிற்சி

6/25/2019 3:58:30 PM

கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் பயிற்சி

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

கடந்த நாற்பத்து ஐந்து வருடங்களில் இல்லாத அளவு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவருகிறது. படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்யும் நிலைக்கு இந்திய இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் வேலைக்கு பஞ்சமில்லை. ஆனால், வேலைக்கு தேவையான தொழில்நுட்பத் திறன், கிராமங்கள் மற்றும் சிறு ஊர்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இல்லாததே வேலைவாய்ப்பின்மைக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த திறன் இல்லை என்பது முக்கிய பிரச்னை மட்டும் அல்ல உடனடியாக தீர்க்கப்பட வேண்டியதும் கூட. இப்பிரச்னையைப் பூர்த்தி செய்யும் விதமாகவே கிராமப்புறங்களில் இயங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு பயிற்சிகளை இலவசமாக வழங்கிவருகிறது சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யூகோட் ஸ்டார்ட் அப் நிறுவனம். இந்நிறுவனத்தின் AI4KIDS மற்றும் CODING4KIDS போன்ற திட்டங்களின் மூலம் கல்வி அறிவில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருங்கால தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. யூகோட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனரான சூரிய பிரபா பகிர்ந்து கொண்ட தகவல்களை இனி பார்ப்போம்.

‘‘எதிர்கால நவீன உலகை கட்டமைப்பதில் தொழில்நுட்பங்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது. சர்வதேச அளவில்  ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற வருங்காலத் தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அரசே தங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு இயந்திரவியல், ரோபோட்டிக்ஸ், ப்ரோகிராம் கோடிங் போன்ற பாடங்களுக்கு செயலாக்கப் பயிற்சிகளை வழங்கிவருகிறது. அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற பெரு நிறுவனங்கள் அமெரிக்க பள்ளிக் குழந்தைகளுக்கு ஓராண்டு கோடிங் பயிற்சி வழங்க தீர்மானித்து செயலாற்றிவருகிறது.

ரோபோ, செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வி, இந்தியாவின் பெருநகரங்களுக்கு வந்தடைந்தாலும் ஏனோ அவை கிராமத்தை நோக்கிச் செல்லவில்லை. வருங்காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சி அடையும் என தொழில்நுட்ப வல்லுநர்களால் கணிக்கப் படுகிறது. இதற்கு இந்திய மாணவர்களைத் தயார்படுத்தும் நிர்பந்தத்தில் அரசு உள்ளது. ஆனால், அரசோ, அதற்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.   சிபிஎஸ்இ பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடத்திட்டங்களை சேர்க்கும் ஆயத்த முயற்சிகள் தற்போது நடந்துவருகின்றன.

பணக்கார மற்றும் மேல்தட்டு மாணவர்கள் படிக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் நவீன தொழிநுட்பப் பாடங்கள் கொண்டு வருகின்றனர். ஆனால், கிராமத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அமைவதில்லை. Ola, Swiggy, Uber, Amazon, Bigbasket, Paytm போன்ற New Age Tech Startup நிறுவனங்கள் எல்லாம் நகரக் கட்டமைப்பையே சார்ந்து இயங்குகின்றன. கிராமங்களை அவை பொருட்படுத்துவதில்லை. ஆகவே, எங்கள் முயற்சி கிராமத்தை நோக்கியதாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். கிராமம் மற்றும் நகரம் இரண்டுக்கும் இடையிலான திறன் சார்ந்த இடைவெளியை சமன் செய்யும் பொருட்டு யூகோட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினோம்.

எனது கணவர் மென்பொருள் துறை வல்லுநர் என்பதால் , டெக்னாலஜி  சார்ந்த விஷயங்களில் மிகவும் உதவியாக இருந்தார்’’ எனும் சூர்ய பிரபா, தங்கள் செயல்பாடுகள் குறித்து விளக்கலானார்.  ‘‘நிதி ஆயோக் பரிந்துரைகளின்படி விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக கருதப்படுகின்றன. இவற்றோடு மதுரையையும் சேர்த்து மூன்று மாவட்டங்களிலும் செயலாற்ற தொடங்கினோம். ‘டீம் எனது’ என்ற பெயரில் ஆறு தொழில்நுட்பப் பட்டதாரிகளைக் கொண்ட குழுவை அமைத்தோம். முதன்முதலில் விருதுகர் மாவட்டம் சத்திர ரெட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் விழிப்புணர்வு பயிற்சி வழங்கினோம். இலவசமாக பயிற்சி வழங்கு கிறோம் என்றவுடன் ஏமாற்று வித்தையாக இருக்குமோ என தயங்கிவாறுதான் அனுமதி கொடுத்தார்கள். எங்கள் செயல் விளக்க முறைகள் மாணவர்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கற்கும்படியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.   

இந்நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்துவதற்காக, வெளிநாடுகளில் விற்பனையாகின்ற ரோபோக்களை ஆன்லைனில் விலைகொடுத்து வாங்கினோம். பள்ளிச் சிறுவர் சிறுமிகளிடம் அந்த ரோபோக்களைக் காட்சிப்படுத்துவதற்கு ஏற்றவாறு அதனை வடிவமைத்து காட்சிப்படுத்தினோம். நிகழ்ச்சியைப் பார்த்த அத்தனை பள்ளி மாணவர்களும் மிகுந்த ஆர்வத்தோடு எங்களிடம் பேசினர். தொழில்நுட்ப விவரங்களைக் கேட்டு விளங்கிக்கொள்ள முற்பட்டனர். `நானும் இதைச் செய்யணும், இன்னும் நிறைய கத்துக்கொடுக்க முடியுமா?’ என்றெல்லாம் ஆசையாய் வேண்டுகோள் விடுத்தனர். தங்கள் வீட்டில் உள்ளவர்களின் தொடர்பு விவரங்களையெல்லாம் குறித்துக்கொடுத்து தொடர்பிலிருந்து தங்களை வழிநடத்தக் கோரினார்கள்.

வெறும் பொழுதுபோக்கானதாக இல்லாமல், இதை நாமும் உருவாக்கலாம், நம் விருப்பப்படி செயலாற்ற வைக்கலாம் எனும்போது மாணவர்களுக்கு ஆர்வம் இரட்டிப்பாகிறது. நாங்கள் இதை ஆரம்பித்திருக்கும் நோக்கமும் இதுதானே! நாம் நினைப்பதை விட கிராமப்புற மாணவர்களுக்கு புதிய விஷயங்களை கற்பதில் அதிக ஆர்வம் உள்ளது என்பதை அங்கு சென்றபோதுதான் தெரிந்தது. தொடர்ந்து மதுரை மாவட்டம் கப்பலூரில் சமுதாயக்கூடத்தில் மாணவர்கள், பெற்றோர்களுக்கு நவீன தொழிநுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். மக்களிடம் கிடைத்த வரவேற்பை பார்த்து மற்ற பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அழைத்தனர். எங்கள் கிளை நிறுவனத்தை தொடங்குவதற்காக, மதுரை பிடிஆர் பொறியியல் கல்லூரி நிர்வாகம் தங்கள் கல்லூரி வளாகத்தில் இடம் ஒதுக்கித் தந்திருக்கிறது.’’ எனும் சூர்ய பிரபா ஒரு நுண்ணுயிரியல் பட்டதாரி ஆவார்.   

‘‘சொந்த ஊர் தேனி மாவட்டத்திலுள்ள கம்பம். தேனி கலைக்கல்லூரியிலும் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்திலும் நுண்ணுயிரியல் பிரிவில் பயின்று பட்டம் பெற்றேன். திருமணம் நடந்தது. சென்னையில் செட்டில் ஆனேன். சமூகத்திற்கு பயன் தரும் வகையில் ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். கணவர் கார்த்திக் மென்பொருளாக்கத் துறை வல்லுநர் என்பதால் அவ்வப்போது அட்வான்ஸ்டு டெக்னாலஜி குறித்து என்னிடம் பகிர்ந்துகொள்வார். அண்டை நாடுகள் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்க, வருங்கால தொழில்நுட்பங்கள் குறித்த இந்தியாவின் பார்வை என்னை அச்சம் கொள்ள செய்தது. ஆகவே, கிராமங்களை மையமாக வைத்து ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தேன்.

தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முனைவோர் மற்றும் Venture Capitals எனப்படும் முதலீட்டாளர்கள் IIT, IIM-ல் படித்திருப்பார்கள். IIT,  IIM-ல் படித்தவர்களுக்கே இந்த TECHNOLOGY  STARTUP ECOSYSTEM முக்கியத்துவம் கொடுக்கும் . ஆனால், கிராமத்திலிருந்து வந்த என்னாலும், IIT, IIM-ல் படித்திருப்பவர்களுக்கு நிகராகத் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப்பை உருவாக்க முடியும். அதை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல முடியும். அதனால் கிராமப்புற மாணவர்கள் பயன் பெறவும் முடியும்  என்ற நம்பிக்கை இருந்தது. தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். இதுவரை சுமார் 8ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் இத்திட்டத்தால் பயனடைந்து உள்ளனர்.’’ என்று சேவையை நோக்கி மனம் திரும்பிய விதத்தை கூறினார் சூரிய பிரபா.

``எந்தவிதமான லாபநோக்கமும் இன்றி, சேவை மணப்பான்மையுடன் கூடிய குழுவுடன்  நல்ல எண்ணத்துடன் இணைந்திருக்கிறோம். ரோபோ வாங்கும் செலவுகள், உடனிருந்து பணி செய்யும் இந்த டீமின் பட்டதாரிகளுக்கு ஊதியம் என எல்லாமே என் செலவுதான். சில தொண்டு நிறுவனத்தார்களும், நல்ல மனம் படைத்தோர்களும் உடனிருந்து பொருளுதவி புரிகின்றனர். நாங்கள் எங்கள் பணத்தைத் தான் முதலீடு செய்துள்ளோம். எங்களுக்கு எங்கள் ஐடியா மீது நம்பிக்கை உள்ளது. நாங்கள் இந்த AI4KIDS யை இந்தியா முழுவதும் கொண்டு செல்வோம். வளமான தமிழகம், வலிமையான பாரதத்தை உருவாக்குவோம். நமது இந்தியாவின் முதுகெலும்பான கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்துக்காக நாங்கள் மிகக் கடுமையாக உழைப்போம்.’’ என தீர்க்கமாக ஒலிக்கிறது சூர்ய பிரபாவின் குரல்.

-வெங்கட் குருசாமி.

X