அன்று ஐ.டி. கம்பெனி ஊழியர் இன்று நான்கு நிறுவனங்களின் தலைவர்

6/26/2019 3:03:12 PM

அன்று ஐ.டி. கம்பெனி ஊழியர் இன்று நான்கு நிறுவனங்களின் தலைவர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உன் பாதை மிக சுகமாக பூந்தோட்டமும் மலர்ப்பாதையாகவும் இருந்து ஆனால் அடையுமிடம் எதுவென்று தெரியவில்லை என்றால் நிச்சயமாக அது வேண்டாம். இலக்கு நல்லது என்று தெரிந்தால் பாதை கல்லும் முள்ளுமாக கரடுமுரடாக இருந்தாலும் தொடர்ந்து பயணி என்பது அறிஞர் வாக்கு. அதுபோல் தன் லட்சியத்தில் குறியாக இருந்து இன்றைக்கு கோவை மாநகரில், மைண்ட்விஸ் (Mindwiz) என்னும் நிறுவனத்தையும், ஈவண்ட் ஸ்பேஸ் (Event Space) என்னும் ஸ்டார்ட்-அப்பையும் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் திருப்பூரைச் சேர்ந்த நவீன் கிருஷ்ணா தன் வெற்றிக்கதையை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘திருப்பூரில் பிறந்து, ஊட்டியில் பள்ளிப்படிப்பை முடித்தேன். பட்டப்படிப்பு படித்தது பொள்ளாச்சியில். தொழில் தொடங்குவதற்கான ஆர்வமும், ஊக்கமும் இளம்வயதிலேயே இருந்ததன் காரணத்தினால் தான், கல்லூரி இளநிலைப் படிப்பின் இறுதி ஆண்டிலேயே மென்திறன் (சாஃப்ட்வேர்) பயிற்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். அப்படித் தொடங்கிய ‘மைண்ட் மேக்கர்ஸ்’ பயிற்சி நிறுவனத்தை சிறப்பாகவே நடத்திக் கொண்டிருந்தேன்.

கல்லூரி இறுதியாண்டிலேயே பல வேலைவாய்ப்புகள் தேடிவந்தன.  ஆனால், அவை எதையும் தேர்வு செய்யவில்லை. எம்.பி.ஏ. படிக்கத் தொடங்கினேன். எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கும்போது, ஹோட்டல் துறையில் மனிதவளப் பயிற்சிகள் என்னும் தலைப்பிலான என்னுடைய புராஜெக்ட் கல்லூரிகளுக்கிடையேயான போட்டியில் ரன்னர்-அப்பாக தேர்வானது.

பொள்ளாச்சியிலிருந்து புராஜெக்டுகள் எதுவும் பெரிய அளவில் போட்டிகளில் தேர்வே ஆகாத சமயத்தில், என்னுடைய புராஜெக்ட் தேர்வானது. எம்.பி.ஏ படித்த பிறகு இன்ஃபோசிஸில் வேலை கிடைக்க, ‘மைண்ட் மேக்கர்ஸ்’ நிறுவனத்தை மூட வேண்டியதானது. ஆனால், இன்ஃபோசிஸ் வேலையைத் தொடரவில்லை. எனக்கு தொடக்கத்திலிருந்தே தனியாக தொழில் தொடங்குவது மட்டுமே விருப்பமாக இருந்தது.

மேலும், இன்ஃபோசிஸில் என் உழைப்பைக் கொண்டு, ஒரு மணி நேரத்தில் எண்பதாயிரம் வரை சம்பாதித்தார்கள், ஆனால், எனக்கு மாதச் சம்பளமே ஒரு லட்சம் ரூபாயாகத்தான் இருந்தது” என அந்த வேலையைத் துறந்ததற்கான காரணத்தை சொன்னார்.‘‘வேலையை விட்டுவிட்டு வெளியேறியபோது, என்னிடம் எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. வங்கியில் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பு மட்டுமே இருந்தது.

நினைத்திருந்தால், ஒரு வழக்கமான பணியைத் தேடிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அந்த பாதையில் தொடர்வதாக இல்லை. தினமும், பொள்ளாச்சியிலிருந்து கோவை வந்து சிறு ஆய்வு ஒன்று செய்தேன். கோவையின் சந்தை நிலவரங்களை புரிந்துகொள்ள அது உதவியாக இருந்தது. முதலில், பொள்ளாச்சியிலிருந்து காரில் கோவை வருவேன். நாட்கள் செல்ல செல்ல, பணச்செலவை குறைக்க பஸ்ஸில் பயணிக்கத் தொடங்கினேன்.

இப்படி இருக்கும்போது, இரண்டு நாட்கள், வீட்டிற்கு போகாமல் என்ன செய்வதென்று யோசித்து யோசித்தே உக்கடம் பஸ் ஸ்டாண்டிலேயே இருந்துவிட்டேன். மனதில் சிறு அமைதி ஏற்பட்ட பின்னர் பொள்ளாச்சிக்கு திரும்பினேன். இண்டர்நெட் பரவலாக உபயோகப்பட தொடங்கியிருந்த அந்நேரத்தில், வீட்டிலிருந்தே இணையத்தில் எஸ்.ஏ.பி தொடர்பான சில கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தேன். அப்போது, நொய்டாவிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. எஸ்.ஏ.பி வேலை ஒன்றிற்கான அழைப்பு அது. அந்த வேலையை நான் நாற்பது நிமிடங்களில் செய்து முடித்தேன்.

அதற்கான சம்பளமாக எனக்கு முப்பதாயிரம் கொடுத்தார்கள்” என மைண்ட் விஸ் - டெக்னோ சொல்யூஷன்ஸ் பிறந்த கதையை சொன்னார் நவீன். ‘‘வேறு முதலீட்டாளர்கள் யாரும் இல்லாமல், இன்ஃபோஸிசில் வேலை செய்து சேர்த்து வைத்திருந்த ஆறு லட்ச ரூபாய் கொண்டு ‘மைண்ட் விஸ் டெக்னோ’ சொல்யூஷன்ஸை தொடங்கினேன். இன்று, SAP ஆலோசனைகள் மற்றும் பயிற்சி, மனிதவள ஆலோசனைகள் மற்றும் பயிற்சி, சட்ட ஆலோசனைகள் ஆகிய துறைகளில் இயங்குகிறது இந்நிறுவனம்.

இது மட்டுமில்லாமல், ஜியான்நெக்ஸ்ட் என்னும் நிறுவனத்திற்கு துணை நிறுவனராகவும் இருந்திருக்கிறேன். பின்னர், அங்கிருந்து விலக நேரிட்டது. அப்போது, ஒரு கணிசமான தொகை நஷ்டமும் ஏற்பட்டது. அதன் காரணமாக, மைண்ட் விஸ்ஸில் ஆட்குறைப்பு செய்யவேண்டியதானது. ஆனால், அதையெல்லாம் கடந்து தற்போது மீண்டும் குழுவை கட்டமைத்துக்கொண்டிருக்கிறேன். மேலும், ஈவண்ட் ஸ்பேஸ் என்னும் ஸ்டார்ட்-அப்பையும் வெற்றிகரமாக நடத்திவருகிறேன்.

அது தொடங்குவதற்கு காரணமாக இருந்த நிகழ்வாய் அவர் சொல்வது, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை. அந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என நினைத்த பலராலும் கலந்துகொள்ள முடியாமல் போனது.  இதற்கு தீர்வு காணும் விதமாக, தாம் இருக்கும் இடத்திலிருந்தே ஓர் நிகழ்வில் பங்குகொள்வதற்கு மெய்நிகர் முறைகள் மூலம் ஒரு வழியைக் கண்டுபிடித்தேன். இதன்படி, வீடியோ கேம்களில் எல்லாம் வருவது போல, பயனரை சித்தரிக்கும் கதாபாத்திரம் ஒன்று கணினித்திரையில் தோன்றும்.

அது ஒரு ட்ரேட் ஃபேர் நிகழ்வாக இருப்பின், நாம் கணினியில் ஒவ்வொரு ஸ்டாலாக சென்று பார்க்க முடியும். சந்தேகங்கள் வந்தால், சாட் செய்து அங்கிருப்பவர்களிடம் கேள்விகள் கேட்கலாம். அல்லது வீடியோ கான்ஃபரன்சிங் வழியாக அவர்களிடம் நேரடியாக பேசவும் முடியும்.’’ என்கிறார்.

“வழக்கமாக, இதில் இருக்கும் குறையாக மக்கள் சொல்வது என்னவென்றால், ஒரு கருத்தரங்கில் நாங்கள் கலந்துகொள்ளும்போது, எதேனும் சந்தேகம் வந்தால், கையை தூக்கி கேள்வி கேட்போம். கணினி வழியே கலந்துகொள்ளும்போது எப்படி கேள்வி கேட்பது? என்பதுதான்.

இதற்கு விடையாகதான் ‘ரைஸ் ஹேண்ட்’ என்றொரு பட்டன் வைத்திருக்கிறோம். விருப்பம் இருப்பவர்கள் அதை அழுத்தினால், அவர்கள் சார்பாக எங்கள் குழு நபர் அந்தக் கேள்வியைக் கேட்பார்கள். பின்னர், ஒரு விழாவிற்கான டிக்கெட் ஆயிரம் ரூபாயாக இருக்கிறதென்றால், அதில் பப்ஃபே போன்ற சில சலுகைகளும் அடக்கமாக இருக்கும். அதே பணத்தை இங்கேயும் கொடுத்துவிட்டு, வெறுமனே நிகழ்ச்சியை மட்டும் காண்பது நிறைவாக இல்லை என பலர் உணர்வார்கள்.

அதற்கு பதிலாகத்தான், அந்நிகழ்விற்கு வரும் அத்தனை நபர்களுடைய தொடர்பு விவரங்களையும் கொடுத்துவிடுவோம். இந்த பயணத்தில் இருந்த சவால்களைப் பற்றிக் கூறும்போது, “இன்ஃபோசிஸிலிருந்து வேலையை விட்ட போது, என்னை முட்டாள் என்றார்கள். பல கல்லூரிகளுக்கு சாப் (SAP) தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தச் சொல்லி பரிந்துரை செய்ய போனபோது என்னை உள்ளேயே விடவில்லை. ஆனால், பின்னாளில், என்னை ஒரு நிகழ்விற்காக அவர்களே வரவேற்றார்கள்”, எனத் தான் சந்தித்த தடைகளையும், அவற்றை எப்படி தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார் என்பதையும் சொன்னார் நவீன்.

இவர் தொழில்முனைவு மட்டுமில்லாமல் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் மிகப்பெரிய தொழிலதிபர்களையும் சமூக ஆர்வலர்களையும் ஒருமித்த கருத்துள்ள பல இளைஞர்களையும் ஒன்றிணைத்து ‘ரௌத்ரா’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பானது விவசாயம்
மற்றும் சுற்றுச்சூழல், தொழில்முனைவு, கல்வி, மருத்துவம், பெண்கள் மற்றும் மகளிர் மேம்பாடு, இளைஞர் மற்றும் சமுதாய மேம்பாடு என்ற 6 பிரிவுகளில் செயல்படுகிறது.

என்விரோன்கிளவ், பஞ்சபூத விருதுகள், பசுமைச் சுவடுகள், startup பயணம், SISA எனப்படும் தென்னிந்திய தொழில்முனைவோர் விருதுகள், ரௌத்ரா  தொழில்முனைவோர் கூட்டமைப்பு, ரௌத்ரா முதலீட்டாளர்கள் கூட்டமைப்பு என மற்றும் பல முயற்சிகள் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முயற்சிகளின் மூலம் இவர் பல இளம் தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளார். அப்பேர்ப்பட்ட ஒரு முயற்சிதான் ஸ்டார்ட்-அப் பயணம் எனப்படுவது. அது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுயமாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்.

- தோ.திருத்துவராஜ்

X