அன்று ஜூஸ் கடை ஊழியர் பிராண்டட் இன்று ஜூஸ் வேர்ல்டு உரிமையாளர்

7/17/2019 12:38:34 PM

அன்று ஜூஸ் கடை ஊழியர் பிராண்டட் இன்று ஜூஸ் வேர்ல்டு உரிமையாளர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

‘ஒரு கனவு காண். அதை இரை துரத்தும் கழுகாய் துரத்திச்செல்..! எதிர்வரும் இடர்தனை களைந்து, இலக்கினை அடையும் வழியைக் காண். வெற்றி  உனக்கு நிச்சயம் உண்டு!’ - என்பது பொன்மொழி. இந்தப் பழமொழியை மெய்யாக்கும் விதமாக தொழிலதிபராக தான் கொண்ட லட்சியத்தில் சாதிக்க  வேண்டும் என உறுதியாக இருந்து இன்றைக்கு ஜூஸ் வேர்ல்டு என்ற பிராண்டட் நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார் அரவிந்த். அவர் தனது  வெற்றிக்கதையை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

‘‘தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டிதான் எனது சொந்தஊர். அப்பா முனியாண்டி, அம்மா தவமணி. விவசாயக் குடும்பம். அப்பா விவசாயத்தோடு  தொழிலும் செய்துவந்தார். உடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு தம்பி. எனது அக்காவை தாய்மாமா கிருஷ்ணமூர்த்தி திருமணம் செய்துகொண்டார்.  அவர் சென்னையில் ஜெமினி பார்சன் காம்ப்ளக்ஸில் சின்னதாக ஒரு ஜூஸ் கடை நடத்தி வந்தார்.

என்னுடைய 15வது வயதில் வேலை தேடி சென்னை வந்த நான் மாமாவின் ஜூஸ் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். நான்கு ஆண்டுகள் அந்தக்  கடையில் வேலை செய்தேன். இந்த நிலையில் எனது தந்தை முனியாண்டி இறந்து விட்டார். அதனால், அம்மாவையும், தம்பியையும் சென்னைக்கு  அழைத்து வர வேண்டிய சூழல்.

தம்பியை படிக்க வைத்து ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும். ஆனால், வருமானம் போதுமானதாக இல்லை. எனவே, நாமும் ஒரு  தொழிலைத் தொடங்கி நடத்த வேண்டும் என்ற வைராக்கியம் தோன்றியது. மாமாவிடம் சொன்னேன், நான்கு ஆண்டுகள் வேலை செய்ததற்கு  ஊதியமாக அவர் ஒண்ணேகால் லட்ச ரூபாய் பணம் கொடுத்தார்.  

அந்த பணத்தைக் கொண்டு எனது பத்தொன்பதாவது வயதில் முதன் முதலாக சென்னை மவுன்ட் ரோட்டில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் சொந்தமாக  ‘ஜூஸ் வேர்ல்டு ஃபிரெஷ் இன் ஜூஸி’ என்ற பெயரில் ஒரு கடையை ஆரம்பித்தேன். 1999ஆம் ஆண்டு அது, பசுமையாக நினைவில் இருக்கிறது.  2005ஆம் ஆண்டு வரையிலுமே பெரிய பிராண்டாக எல்லாம் கொண்டுவரவில்லை.

சாதாரண ஒரு ஜூஸ் கடையாகத்தான் நடத்திக் கொண்டிருந்தேன். இப்படியே நடத்திக் கொண்டிருந்தால் ஒரு கடையாகவே குறுகிய வட்டத்திற்குள்  இருந்துவிடும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு யோசனை தோன்றியது. இதையே ஒரு பிராண்டாக மாற்றி  அடுத்த லெவலுக்கு ஏன் கொண்டு செல்லக்கூடாது என்பதுதான் அந்த யோசனை.

அதையடுத்து பிராண்ட்டுக்காக ஒரு லோகோவை கிரியேட் செய்தேன். மார்க்கெட்டிங் செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன். ஏனெனில், எந்த ஒரு  தொழிலுக்கும் மார்க்கெட்டிங் என்பது மிக முக்கியம்’’ என்று பிரம்மாண்ட வளர்ச்சியின் ஆரம்பப் புள்ளியை நினைவுகூர்ந்தார் அரவிந்த். மேலும் தொடர்ந்த அவர், ‘‘எனது உறவினர்களில் பலர் நன்கு வசதியாகத்தான் இருக்கிறார்கள்.

ஆனால், யாரும் எனது தொழிலுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. தனி மனிதப் போராட்டம்தான். அப்போது ஸ்பென்சர் பிளாசாவின் மேலே ஒரு கார்ப்
பரேட் கம்பெனி இயங்கிக்கொண்டிருந்தது. அந்த கம்பெனியில் வேலை பார்க்கும் அதிகாரி என்னிடம் ‘‘உனக்கு நல்ல திறமை இருக்கிறது, அதனால்  எங்கள் கம்பெனியில் உனது கடையை நடத்தேன் என வாய்ப்பளித்தார்.

அதன் மூலம் ஜூஸ் வேர்ல்டு கடையை முதன் முதலாக ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் நிறுவும் வாய்ப்பு அமைந்தது.இதையே இன்னும் கொஞ்சம்  விரிவுபடுத்த வேண்டும் என இரண்டாவது கிளையை புரசைவாக்கத்தில் ஆரம்பித்தேன். அதற்கடுத்து தியாகராயநகர், சைதாப்பேட்டை என ஒவ்வொரு  கிளையாக சென்னையின் பல பகுதிகளிலும் ஜூஸ் வேர்ல்டு என்ற பிராண்டட் கடையைத் திறந்தேன்.

இப்படி ஜூஸ் வேர்ல்டின் ஒவ்வொரு கிளையாகத் திறந்துகொண்டிருக்கும்போதே பெருங்களத்தூரில் உள்ள ஒரு ஐ.டி (Information  Technology) கம்பெனியில் ஜூஸ் வேர்ல்டு திறக்கும் மற்றொரு வாய்ப்பு அமைந்தது. அங்கு இன்னும் எனது ஜூஸ் வேர்ல்டு  இயங்கிக்கொண்டிருக்கிறது. நன்றாக சர்வீஸ் கொடுக்கிறார் என்ற பெயர் கிடைத்தது.

அவர்கள் மூலமாக இன்றைக்கு கூடுதலாக நான்கு கார்ப்பரேட் கம்பெனிகளில் எனது ஜூஸ் வேர்ல்டு வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது’’  என்று பெருமிதத்தோடு தெரிவித்தார். ‘‘இன்றைக்கு சென்னை முழுவதும் 7 சொந்த நிறுவனங்களும், ஒரு ஃபிரான்சைஸும் இயங்கிக்கொண்டிருக்கிறது.  பலர் ஜூஸ் வேர்ல்டு என்ற பிராண்டை ஃபிரான்சைஸி கான்செப்டில் கேட்கிறார்கள்.

சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் ஸ்ட்ராட்டஜைஸர் ஃபிரான்சைஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் மூலம் ஃபிரான்சைஸி  கொடுத்துவருகிறோம். முதல் ஃபிரான்சைஸியாக சென்னை கே.கே.நகரில் கொடுத்துள்ளோம். இதையடுத்து எங்கள் பிராண்ட் இன்வெஸ்டர்ஸ்  நிறையபேர் கேட்டு வருகிறார்கள்.

அது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.எங்களது ஜூஸ் வேர்ல்டு உணவுகளை சாப்பிடுவதற்கென்றே நிறைய வாடிக்கையாளர்கள்  உள்ளனர். ஏனெனில், காலத்திற்கு தகுந்த மாற்றங்கள் பல செய்துள்ளோம். நேர்த்தியான வடிவமைப்புடன் கடை. உணவுகளைத் தரமாகவும்,  சுத்தமாகவும், சுவையாகவும் தயாரித்து வைத்துள்ளோம்.

ஏனெனில், இந்த நவநாகரீக காலத்தில் என்ன டிரெண்டோ அதற்கு ஏற்றாற்போல் ஸ்மூத்தி, ஃபலுடா, சாண்ட்விச், பர்கர் என ஏராளமான ஸ்நாக்ஸ்  மற்றும் ஜூஸ் வகைகளை தனிச்சிறப்பாகத் தயாரித்து வைத்துள்ளோம். ஸ்மூத்தி, பலுடா, பர்கர், சாண்ட்விச் உள்ளிட்ட 150 வகைகள் என ஒவ்வொரு  பொருட்களிலும் பல்வேறு வெரைட்டிகளை வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிக்கிறோம்.

குறிப்பாக குழந்தைகள் என்ன விரும்புகிறார்களோ அவர்களுக்கு ஏற்றவாறும், இளைஞர்கள் விரும்பும் வகையில் அவர்களுக்காகவும்,  பெரியவர்களுக்கேற்ற சிறப்பு தயாரிப்புடனும் என பார்த்துப் பார்த்து ஒவ்வொரு உணவுகளையும் தயாரித்து வழங்கிவருகிறோம். மேலும் ஆன்லைனில்  ஆர்டர் கொடுத்தால் வீடு தேடி ஜூஸ்களை கொண்டு சேர்க்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறோம்’’ என்கிறார் அரவிந்த்.


‘‘தந்தை இறந்துவிட்டாலும், தம்பியை நன்கு படிக்க வைத்து ஒரு நல்ல நிலைமையில் வைத்துவிட வேண்டும் என நினைத்தேன், அது  நடந்துவிட்டது. தம்பி பொறியியல் படித்துவிட்டு இன்றைக்கு வெளிநாட்டில் நல்லதொரு நிலையில் செட்டிலாகியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்து  வாழ்க்கையில் நாமும் சாதிக்க வேண்டும், ஒரு தொழிலதிபராக வரவேண்டும் என விடாமுயற்சியாக உழைத்தேன், அதன் பலனாக இன்றைக்கு ஒரு  நிறுவனத்தை பிராண்டாக மாற்றியுள்ளேன்.

ஒண்ணேகால் லட்சத்தில் ஆரம்பித்த கடை இன்றைக்கு ஃபிரான்சைஸியாக கொடுக்கப்படும்போது ஒரு கடையின் மதிப்பு 15 லட்சம் ரூபாயாக  உயர்ந்துள்ளது. தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியுடனும் உழைத்தால் வாழ்க்கையில் நிச்சயம் நாம் நினைக்கும் லட்சியத்தை அடைந்துவிட  முடியும் என்பது என் நம்பிக்கை.

ஆனாலும், இன்னும் இன்னும் உயர வேண்டும் பலபேருக்கு வேலைவாய்ப்பளிக்க வேண்டும். முதலில் உணவுப் பொருட்களில் தரம், இரண்டாவது  சுத்தம், அடுத்து கடையை வைத்திருக்கும் சூழல் ஆகியவற்றை கடைப்பிடித்தாலே தொழிலில் வெற்றிபெற்றுவிட முடியும் என்பது என் நம்பிக்கை’’  என தன்னம்பிக்கை வார்த்தைகளுடன் முடித்தார் அரவிந்த்.

- தோ.திருத்துவராஜ்

X