இலவசமாக சிலம்பப் பயிற்சி வழங்கும் லேடி கான்ஸ்டபிள்!

7/24/2019 4:52:13 PM

இலவசமாக சிலம்பப் பயிற்சி வழங்கும் லேடி கான்ஸ்டபிள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

வீட்டோடு இருக்கும் பெண்களுக்கே ஓய்வு கிடைப்பது அதிசயம், போலீஸ் கான்ஸ்டபிளாக வேலை பார்த்துக்கொண்டு, வீட்டையும் கவனித்துக்கொண்டு  இலவசமாக சிலம்பப் பயிற்சியும் தருவது பெரிய விஷயம்தான். சென்னை எழும்பூரில் உள்ளது ராஜரத்தினம் ஸ்டேடியம். இதன் பின்புறம் உள்ள  காவலர் குடியிருப்பில் வசித்துவருகிறார் ஸ்ரீதேவி. ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்துவரும் இவர்  வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் எண்பது மாணவர்களுக்கு இலவசமாகச் சிலம்பம் கற்றுக்கொடுத்துவருகிறார்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.30 முதல் 9.30 வரை காவலர் குடியிருப்பிற்கு அருகில் இருக்கும் பூங்காவில் மாணவர்களுக்கு சிலம்பம்  கற்றுக்கொடுக்கப் படுகிறது. ‘‘குழந்தைகள் தங்களை தற்காத்துக்கொள்ளவதையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்வதையும் இந்த  சிலம்பப் பயிற்சி உறுதி செய்யும்’’ என்று சொல்லும் ஸ்ரீதேவி சிலம்பப் பயிற்சியில் உண்டான ஆர்வம் முதல் இலவசப் பயிற்சி வழங்கும் திட்டம்  வரை பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘என் சொந்த ஊர் புதுக்கோட்டை. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசின் ஜவஹர் சிறுவர் பால்பவன்  செயல்பட்டு வந்தது. அங்கு தற்காப்புக் கலைகளான சிலம்பம், கராத்தே, நடனம், மிருதங்கம், ஓவியம்  போன்ற பல கலைகளை தனித்தனி  ஆசிரியர்களுடன் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுத்தார்கள். அங்கு சென்று 1999ம் ஆண்டு முதல் இலவசமாக சிலம்பம், பரதம்,  கராத்தே கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

தேனி பெரியகுளத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றுச் சென்ற பதினாறு மாணவர்களில் நான் மட்டும்  வென்றேன்.  தொடர்ந்து மாநில, தேசிய அளவில் பல பரிசுகளை வென்றேன். பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது தேசிய அளவிலான பரதநாட்டியப் போட்டியில்  வென்றேன்’’ என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

‘‘கல்லூரி படிக்கும்போது நான் சீனியர் ப்ளேயர் என்பதால் அருகில் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுக்க  ஆரம்பித்தேன். நான் பயிற்றுவித்த மாணவர்கள் பலர் மாநில, தேசிய அளவில் வென்றுள்ளனர். பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் நடுவராகவும்  செயல்பட்டேன். 2006ம் ஆண்டு காவலர் பணி நியமனம் பெற்று சென்னையில் குடியேறினேன். தற்செயலாக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த இலவச  சிலம்பப் பயிற்சி வகுப்பு’’ என்கிறார் ஸ்ரீதேவி.

‘‘வேலை, குழந்தை, குடும்பம் என ஆகியதால் சென்னை வந்ததும் முறையான சிலம்பப் பயிற்சியை நிறுத்திவிட்டேன். இந்தச் சூழலில்தான் கீழ்ப்பாக்கம் சட்டம் ஒழுங்கு ஸ்டேஷனில் பணிபுரியும் என் கணவர் என் மகளுக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்க சொன்னார். முதலில் என் மகளுக்கு  மட்டும் சிலம்பம் கற்றுக்கொடுத்து வந்தேன்.

இதை பார்த்து காவலர் குடியிருப்பில் உள்ள பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சிலம்பம் கற்றுத்தர வேண்டும் என்றனர். அவ்வாறு காவலர்களின்  குழந்தைகளுக்கென தற்செயலாக ஆரம்பித்ததுதான் இந்த இலவச சிலம்பப் பயிற்சி. தொடர்ந்து என் மகள் படிக்கும் பள்ளியில் அவளின் நண்பர்களும்  இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டனர்.

தற்போது இரண்டு பெண் காவலர்கள் உட்பட எல்.கே.ஜி. படிக்கும் குழந்தைகள் முதல் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை என சுமார் 80 பேர்  சிலம்பம் கற்றுக் கொண்டு வருகின்றனர். பூங்காவில் இவர்கள் கற்பதை பார்த்து பெரியவர்களும் சிலம்பம் கற்க வருவதாக கூறுகின்றனர். சிறப்பு கவனம்  செலுத்தி அனைவருக்கும் என்னால் கற்றுக்கொடுக்க இயலாது என்பதால், புதுக்கோட்டையில் எனக்கு மாஸ்டராக இருந்தவரின் பேட்ச்சை சேர்ந்த  மாஸ்டர் ஞானம் சென்னை வில்லிவாக்கத்திற்கு வந்துவிட்டார்.

அவரிடம் பயின்றவர்கள் மாதவரத்திலிருந்து இங்கு வந்து எனக்கு உறுதுணையாக மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்கின்றனர். ஆரம்பத்தில்  தற்காப்புக் கலை என பெயரளவில் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் மாநில அளவில் சிலம்பத்தில் வென்றவர்களுக்குக் கல்வி மற்றும்  வேலைவாய்ப்பில் மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுவருவது தெரிந்தது.

நம்மிடம் சிலம்பம் பயிலும் மாணவர்களுக்கு வெறும் தற்காப்புக் கலையை மட்டும் கற்றுக்கொடுக்காமல்  முறைசார்ந்த பயிற்சி வழங்கி அவர்களைப்  போட்டிகளில் பங்குகொள்ளச் செய்ய வேண்டும். அதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும்  என்பதை உறுதி செய்தோம்.

தமிழ்நாடு காவலர் சிறார் சிலம்பம் விளையாட்டுக் கழகம் என்ற பெயர் பொறித்த ஜெர்ஸிகளை ஏற்பாடு செய்தல், மாணவர்களைப் போட்டிகளுக்கு  தயார்ப்படுத்துதல் போன்ற ஆயத்த பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம்’’ எனும் ஸ்ரீதேவி தற்போது சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுகளுக்கு  தயாராகிவருகிறார்.

‘‘என்னுடைய இந்த முயற்சிக்கு காவலர்கள் உறுதுணையாக உள்ளனர். வருங்காலத்தில் குத்துவரிசை, மான்கொம்பு, சுருள்வாள், ஈட்டி போன்ற  பயிற்சிகளை வழங்கவும் எண்ணம் உள்ளது’’ என எதிர்காலத் திட்டங்களையும் கூறி முடித்தார் ஸ்ரீதேவி.

 -வெங்கட்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்

மேலும்

X