30 கிராம் எடையில் செயற்கைக்கோள்!

9/9/2019 3:22:12 PM

30 கிராம் எடையில் செயற்கைக்கோள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு

*சாதனை

பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவில் அறிவியல் போட்டிகளை ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ அமைப்பு நடத்தி ‘இந்திய இளம் விஞ்ஞானி’ விருதுகளை ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.

ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்தநாளைப் புதுமையாகக் கொண்டாடும் வகையில் மாணவர்களை ஈடுபடுத்தி புதுமையான திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. அதன்படி, தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான ’விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்’ என்ற போட்டியை அறிவித்தது. இதில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விண்ணில் செலுத்தக்கூடிய வகையில் 30 கிராம் எடையில் சிறிய வகை செயற்கைக்கோளைத் தயாரிக்க வேண்டும்.

இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். கரூர் மாவட்டம், வெள்ளியணை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களான நவீன்குமார், சுகந்த், பசுபதி, விஷ்ணு, ஜெகன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆசிரியர் பெ.தனபால் வழிகாட்டுதலுடன், 30 கிராம் எடையில் செயற்கைக்கோள் ஒன்றைத் தயாரித்தனர். தமிழக அளவில் தேர்வான 12 பள்ளிகளில் ஒன்றாக, கரூர் மாவட்டம்,வெள்ளியணை அரசு மேல்நிலைப் பள்ளியின் ‘நீர் செயற்கைக்கோள்-30’ தேர்வாகியுள்ளது.

ஆகஸ்டு 11ம் தேதி சென்னை சிறுசேரியில் சந்திரயான்-1 முன்னாள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் துணைத்தலைவர், முனைவர். மயில்சாமி அண்ணாதுரை முன்னிலையில் செயற்கைக்கோள்கள் ராட்சத பலூன்களின் உதவியோடு 15 கி.மீ. தூரத்துக்குச் செல்லும் வகையில் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் உருவாக்கம் மற்றும் செயல்பாடு குறித்து வழிகாட்டி மற்றும் இயற்பியல் ஆசிரியருமான தனபால் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களை இனி பார்ப்போம்.

‘‘இயற்பியல் ஆசிரியர் என்பதால் அடிப்படையிலேயே எனக்கு அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வுகள் மீது ஆர்வம் உண்டு. அவ்வகையில் உலகமே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டி ருக்கும் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் காட்சியை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டோவிற்கு சென்று நேரில் பார்த்துவந்தேன். பின் பள்ளியிலும் சந்திரயான் 2 எவ்வாறு விண்ணில் செலுத்தப்பட்டது என்பதை விளக்கும் வீடியோவை காண்பித்தேன். மாணவர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

இந்நேரத்தில்தான் ஸ்பேஸ்கிட்ஸ் அமைப்பின் விண்வெளி சவால் போட்டியின் அறிவிப்பும் வெளியானது. நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நவீன்குமார், சுகந்த், பசுபதி, விஷ்ணு, ஜெகன் என ஐவர் கொண்ட மாணவர் குழுவை தேர்ந்தெடுத்தோம்’’ என்கிறார் தனபால். ‘‘இப்போட்டியில் கலந்துகொள்ள 3.5 செ.மீட்டர் கனசதுரம் கொண்ட கலன் தயாரிக்க வேண்டும். மேலும் கார்பன் ஃபைபராலான உலோகக்கலவையினால் செயற்கைக்கோள் உருவாக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை விதி.

தமிழகத்தின் இன்றைய முக்கிய பிரச்னைகளான சுற்றுச்சூழல் சார்ந்த, நீர்பற்றாக்குறை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு, மழைப்பொழிவு குறைவு, விவசாய நிலங்களின் மண்வளம் பாதிப்பு, நீர், ஆறு, ஏரி, குளம், கண்மாய் என எங்கும் பரவியிருக்கும், வெட்ட வெட்ட மீண்டும் வளரும் சீமைக்கருவேலமரத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கில் செயற்கைக்கோள் செயல்படுமாறு வடிவமைக்க வேண்டும் என முடிவு செய்து ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பிற்கு தெரிவித்தோம். நல்ல முயற்சி என பாராட்டி செயற்கைகோள் தயாரிக்க ஊக்கம் கொடுத்தார்கள். சீமைக்கருவேல மரத்தின் வேர், தண்டு, பட்டை, இலை, பூ,காய், விதை ஆகிய பாகங்களிலிருந்து சாறு எடுத்து, உலரவைத்து படிகமாக மாற்றி 3.5 செ.மீ கனசதுரம் கொண்ட கலனில் ஆறு பிரிவுகளாக வைத்தோம்.

நீர் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதால் ‘நீர் செயற்கைக்கோள்’(வாட்டர் சேட்-30) என பெயரிட்டோம். செயற்கைகோள் விண்ணில் சென்று கீழே வரும்போது, வளிமண்டல அழுத்தம், சூரியக் கதிர்வீச்சு தாக்கம், ஈரப்பதம்,வெப்பநிலை வேறுபாடு காரணமாக உள்ளே உள்ள படிமங்களில் ஏற்படும் ஜீன் மற்றும் டி.என்.ஏ மாறுபாடு மூலம் இத்தாவரத்தை அழிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உள்ளோம்’’ எனக் கூறும் ஆசிரியர் தனபால், பள்ளியில் இளம் விஞ்ஞானிகள் குழுவை ஆரம்பித்து அறிவியில் துறையில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் மாணவர் தனித்திறன் வெளிப்பாடு, அறிவியல் கருத்தரங்கம், வினாடி வினா, அறிவியல் நாடகம், அறிவியல் கண்காட்சி, ஆய்வுக்கட்டுரை, குறும்படம் தயாரித்தல், களப்பயணம் என பள்ளியில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுவரை 351 அரசுப் பள்ளி மாணவர்களை இளம் விஞ்ஞானி சான்று பெறச் செய்துள்ளார்.

‘‘ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு அடிப்படை அறிவியலை கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கிராமப்புற மாணவர்கள் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும் எனவும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், அண்டம், சுற்றுச்சூழல், மருத்துவம், ரோபோட்டிக்ஸ் என மாணவர்கள் விருப்பத்திற்கிணங்க பயிற்சி அளித்து வருகிறேன். இதனால் மாணவர்கள் அடிப்படை அறிவியலை எளிதில் புரிந்துகொண்டு,சமுதாயத்தில் உள்ள சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் கடந்த 13 ஆண்டுகள் 5 மாதங்களில் 20 அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி, 29 தங்கப்பதக்கங்களுடன் சர்வதேச அளவில் சாதித்துள்ளனர்’’ எனக் கூறும் ஆசிரியர் தனபால், தன் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த சம்பவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

‘நான் படித்தது எல்லாம் கிராமப்புற அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில்தான். 1996 ஆம் ஆண்டு மும்பை, பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்தில் ஜூனியர் சயின்டிஸ்ட் படிப்பிற்கான நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுக்கு சென்றிருந்தேன். தேர்வு வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வழங்கப்பட்டதால், தமிழ் வழியில் பயின்ற என்னால் அத்தேர்வில் தேர்வாக முடியவில்லை. அறிவியல் ஆராய்ச்சியாளராக வேண்டும் என மிகுந்த ஆர்வத்தோடு இருந்த எனக்கு அந்த சம்பவம் மிகப்பெரிய ஏமாற்றமானது.

அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் சேர்ந்து என்னைப் போன்ற கிராமப்புற மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் என அன்று முடிவு செய்தேன். இந்த லட்சியக் கனவுடன் 2005 ஆம் ஆண்டு வெள்ளியணை அரசுப் பள்ளியில் சேர்ந்தேன். 2015 ஆகஸ்ட் மாதம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கிடைத்தும், கிராமப்புற அரசுப் பள்ளி இளம் விஞ்ஞானிகள் குழு மாணவர்களின் முன்னேற்றமே அவசியம் என முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை உரிமைவிடல் செய்து, பட்டதாரி ஆசிரியர் பணியில் தொடர்ந்து பணியாற்றிவருகின்றேன். 2020-க்குள் ஒரு கோடி மாணவர்கள் மனதில் கலாம் கனவுகளை விதைப்பதே எனது லட்சியமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறேன்’’ எனும் ஆசிரியர் தனபாலின் உயர்ந்த லட்சியம் நிறைவேற நாமும் வாழ்த்துவோம்! - வெங்கட் குருசாமி

X