அன்று: ஆட்டோ ஓட்டுநர் இன்று:செந்கா குரூப் ஆஃப் கம்பெனீஸ் தலைவர்

9/11/2019 5:22:56 PM

அன்று: ஆட்டோ ஓட்டுநர் இன்று:செந்கா குரூப் ஆஃப் கம்பெனீஸ் தலைவர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்த வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்களைவிட அதிக திறமைசாலி   என்று நாம் கணித்தவர்கள் சாதிக்காமல் போகும்போது அது ஏன் என்ற ஒரு மிகப் பெரிய கேள்வி நமக்குள் எழும். அதற்கு ‘விதி’ என்ற மிக வசதியான பதிலை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். ஆனால், அபூர்வமாக ஒருசில விதிவிலக்குகள் தவிர  அந்த விதி அவரவர்களால் எழுதப்படுவது அல்லது ஏற்படுத்திக்கொள்வது என்பதே மறுக்கமுடியாத உண்மை.

ஒரு ஆட்டோ டிரைவராக தனது பணியைத் தொடங்கி, இன்று ரியல் எஸ்டேட் பிசினஸ், சூப்பர் மார்க்கெட், தகவல் தொழில்நுட்பம் என செந்கா குரூப் ஆஃப் (SENKA GROUP OF COMPANIES) கம்பெனிகளுக்குத் தலைவராக இருக்கும் செந்தில்குமாரின் வெற்றிக்கதையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
‘‘சென்னை மாதவரம்தான் நான் பிறந்து வளர்ந்தது. அங்குள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தேன். அதற்குமேல் அந்தப் பள்ளியில் படிக்க முடியவில்லை. காரணம், ஆறாம் வகுப்பு மாடியில் உள்ளது.

அங்குதான் எல்லா குழந்தைகளும் போகவேண்டும் என்றார்கள். என்னால் படிக்கட்டு ஏற முடியாது (உடலில் குறைபாடு) என்பதால் நீங்கள் வேறு ஒரு பள்ளிக்கு மாற்றிக்கொள்ளுங்கள் என எனது பெற்றோரிடம் கூறிவிட்டார்கள். இது என் வாழ்க்கையில் நான் கண்ட முதல் தோல்வி எனச் சொல்வேன். அடுத்து வேறு ஒரு பள்ளியில் சேர்ந்தேன். அந்தப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புவரை எனக்காக வகுப்பைக் கீழ்தளத்தில் அமைத்து கல்வி கற்றுக்கொடுத்தார்கள். அந்தப் பள்ளிக்கு இந்த நேரத்தில் நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்ந்தார் செந்தில் குமார்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘பள்ளிப்படிப்பை முடித்ததும், குடும்பத்தின் சூழல், வறுமை காரணமாக மேற்கொண்டு என்னால் படிக்க முடியவில்லை. அதன் காரணமாக ஆட்டோ ஓட்ட தொடங்கினேன். ஆட்டோ ஓட்டும்போதும் உடல் ரீதியான குறைபாடு உள்ளதால் அரசாங்க விதிமுறைகளான லைசென்ஸ் வாங்குவது உள்ளிட்டவற்றில் பிரச்னை ஏற்பட்டது. அதனால் அந்தத் தொழிலை என்னால் சரிவரச் செய்ய முடியவில்லை. அதனால் வேறு வேலைக்குப் போகலாம் என முடிவு செய்து, ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலைக்கு சேர்ந்தேன்.
 
வேலையில் சேர்ந்து அதிலிருந்து கிடைத்த வருமானத்தின் மூலம் உயர்கல்விக்கு விண்ணப்பித்து படிப்பைத் தொடர்ந்தேன். அந்த தனியார் நிறுவன வேலையில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதாவது, வேலையில் அவரவர் பெர்ஃபாமென்ஸைக் காட்டுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். கொடுக்கப்பட்டுள்ள புராஜெக்டை யார் விரைவாக முடித்துக்கொடுத்தாலும் அவர்களுக்கு மேனேஜர் பதவி வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. அந்த சவாலை ஏற்று அதற்கு கொடுக்கப்பட்ட காலகட்டத்திற்குள் செயல்பட்டு ‘சவுத் இண்டியாவில் ஃபர்ஸ்ட் பெர்ஃபாமர்’ என்ற இடத்துக்கு வந்தேன்’’ என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.

மறுக்கப்பட்ட வாய்ப்பு திருப்புமுனையான விதத்தை விவரிக்கும்போது, ‘‘சவாலை ஏற்று வெற்றி பெற்றுவிட்டாலும், விதி விளையாடியது. எல்லாம் சரியாக முடித்துக்கொடுத்துவிட்டாலும், பிசிக்கல் ஃபிட்னஸ் இல்லாத ஒரே காரணத்தால் அந்தப் பதவி உனக்கு தரமுடியாது என மறுத்துவிட்டார்கள். அந்த கணம், ‘இனிமேல் வெளியில் யாரிடமும்வேலைக்குச் செல்லக்கூடாது; நாம் தான் மற்றவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்’ என்று அப்போது நான் முடிவு செய்தேன். இதற்கிடையில் எனது சிவில் எஞ்சினியரிங் படிப்பையும் படித்து முடித்திருந்தேன். இனிமேல் வீடு கட்ட ஆரம்பிக்கலாம் என நினைத்து வாய்ப்புகளைத் தேடினேன்.

பொதுவாக ஒரு வீடு கட்ட வேண்டுமென்றால்கூட அந்த எஞ்சினியர் ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்திருக்க வேண்டும் அல்லது நாலு பில்டிங்குக்கு தண்ணீராவது ஊற்றியிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மக்களின் இயல்பு. ஆனால், எந்த பில்டிங்கிலும் ஏறி வேலை செய்யும் அளவுக்கு எனது உடல்நிலை கிடையாது.  எல்லோருக்குமே வழிகாட்டியாக இருப்பவர் அவரவர் தந்தைதான். எனவே, எனது தந்தையிடம் போய் ஒரே ஒரு கேள்வி கேட்டேன். ‘அப்பா, நமது வீட்டை இடித்துவிட்டு நானே கட்டலாம் என நினைக்கிறேன்’ என்றேன். எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் எனக்கு அந்த வாய்ப்பை அவர் கொடுத்தார்.

நாங்கள் குடியிருந்த வீட்டை இடித்துவிட்டு பாதியளவு கட்டிக்கொண்டிருக்கும்போதே ‘நான் ஒரு எஞ்சினியர், உங்களுக்கும் இதுபோன்ற அழகான வீடுகள் கட்டித்தரப்படும்’ என்று விளம்பரம் செய்தேன். அதன்மூலம் இருபத்தைந்து வீடுகள் கட்ட வாய்ப்புகள் கிடைத்தது. ஒரு சம்பவம் சொல்ல மறந்துவிட்டேன். இனிமேல் யாரிடமும் வேலைக்குச் செல்லக்கூடாது என முடிவு செய்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது ரயில்வேயிலிருந்து வேலைக்கு சேர ஆர்டர் வந்திருந்தது. ஆனால், நான் தெளிவாக முடிவு செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன், இனிமேல் எங்கும் நான் வேலைக்கு செல்ல மாட்டேன் என்றதும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘ரயில்வேயில் வேலை கிடைப்பது கஷ்டம், எனவே, அந்த வேலையில் சேர்ந்துவிடு’ என்றனர்.
 
என் குடும்பத்தினரிடம் நான் சொன்னேன், ‘என்னுடைய வாழ்க்கையில் 56 வயது வரைக்கும் உழைத்து முடித்து லாபம் எனப் பார்க்கும்போது எழுபத்தைந்து லட்சம் ரூபாய் வேண்டுமானால் சம்பாதிக்க முடியுமா? எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள் அந்த எழுபத்தைந்து லட்சத்தை மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்துக் காட்டுகிறேன்’ என்றேன். இதற்கு எனது மனைவி மட்டுமே சம்மதித்தார். அவர் மூலமாக மற்றவர்களையும் சம்மதிக்க வைத்தேன். சொன்னபடியே மூன்று ஆண்டுகளில் அந்த இருபத்தைந்து லட்சத்தையும் சம்பாதித்துக் காட்டினேன். இது நான் கண்ட முதல் வெற்றி எனச் சொல்லலாம்’’ என்றார் செந்தில்குமார்.
‘‘வெற்றியைத் தொடர்ந்து செந்கா குரூப் ஆஃப் கம்பெனீஸ் (SENKA GROUP OF COMPANIES) ஆரம்பித்தேன்.

அதாவது, செந்கா (SENKA) என்றால் எனது பெயர் செந்தில், எனது மனைவியின் பெயர் காஞ்சனா, இரண்டையும் சேர்த்து செந்கா என பெயர் வைத்தேன். அக்குழுமத்தில் ஒன்றான டிரீம்ஸ் இண்டியா (DREAMS INDIA)-வில் 2007-லிருந்து வீடுகள் கட்டி விற்பதோடு வீட்டுமனை விற்பனை செய்யும் தொழிலையும் கையிலெடுத்தேன். நான் ஆரம்பித்தபோது சென்னையில் இருபத்தெட்டாவது இடத்தில் எங்கள் நிறுவனம் இருந்ததாக நாங்களே எடுத்த சர்வே மூலம் தெரிந்துகொண்டோம். இன்றைக்கு இந்திய அளவில் ஒரு மிகப் பெரிய நிறுவனமாக உள்ளது. காரணம், ஒரு ரூபாய் தவணை கட்டும் திட்டத்தில் வீட்டு மனை விற்பனை தொடங்கினோம்.

இதுவரையில் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுக்கு இடம் விற்பனை செய்துள்ளேன். கிட்டத்தட்ட 5 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
இதையும் தாண்டி செந்கா சூப்பர் மார்க்கெட் (SENKA SUPER MARKET) ஆரம்பித்து சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் விற்கும் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நபர்களுக்கு எனக்கு கிடைக்கும் பத்து சதவிகித லாபத்தில் ஐந்து சதவிகிதத்தை வழங்கி வருகிறேன். இதன் மூலம் சுமார் இரண்டாயிரம் குடும்பத்தினருக்கு வருமானம் போய்க்கொண்டிருக்கிறது. அதற்கடுத்து செந்கா இன்ஃபோடெக் (SENKA INFOTECH) என ஒரு ஐடி செக்டார் நிறுவனம் நடத்திவருகிறேன். அடுத்து செந்கா கன்ட்ரி சிக்கன் ஒன்று ஆரம்பித்துள்ளோம்.

கடைசியாக செந்கா நிதி லிமிடெட் என பேங்க் செக்டார் ஒன்று மினிஸ்ட்ரி ஆஃப் கார்ப்பரேட்(Ministry of Corporate) மூலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  குறைந்தது ஒரு லட்சம் குடும்பத்துக்காவது வீட்டு மனையை கொடுக்கவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளேன். ஒரு ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையைத் தொடங்கி இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் நிலைக்கு இறைவனின் அருளால் வளர்ந்துள்ளேன். 2020 இறுதிக்குள் செந்கா நிறுவனம் பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு வருகிறேன்’’ என்று தன்னம்பிக்கை ததும்ப பேசி முடித்தார் தொழிலதிபர் செந்தில்குமார்.

-தோ.திருத்துவராஜ்

மேலும்

X