பொருளாதார பின்னடைவால் மூடப்படும் தொழிற்சாலைகள்! வேலை இழப்பால் வாடும் தொழிலாளர்கள்!

9/16/2019 12:22:46 PM

பொருளாதார பின்னடைவால் மூடப்படும் தொழிற்சாலைகள்! வேலை இழப்பால் வாடும் தொழிலாளர்கள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

வட இந்தியாவில் ஒரு பெண் ‘‘நானும் எனது கணவரும் இணைந்து பாடுபட்டால்தான் குடும்பம் நடத்த முடியும். கொஞ்ச நாள் உடல்நலம் இல்லை. வைத்தியம் செய்துகொண்டு வேலைக்கு செல்வதற்குள் மில்லையே மூடிவிட்டார்கள்’’ என்று கதறி அழுகிறார். இந்தச் சூழ்நிலையில் வட இந்திய மில் முதலாளிகள் சங்கம் சொல்கின்றது ‘‘இதுவரை மூன்று லட்சம் பேர் வேலை இழந்துவிட்டார்கள். இன்னமும் 50 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் இருக்கிறது’’ என்று. ‘என்ன இது? வட இந்திய நிலைமை இவ்வளவு மோசமா?’ என்று அதிர்ந்துபோய் தென்னிந்தியாவை திரும்பிப் பார்த்தால், இங்கு அதைவிட மோசமான நிலைமை.

இதுவரை மூடப்பட்ட 605 நூற்பாலைகளில் 225 நூற்பாலைகள் தமிழ்நாட்டில் இருக்கிறதாம். மில் முதலாளிகள் விற்கத் தயார். இன்றைய பொருளாதார மந்தநிலையில் 500 கோடி கொடுத்து இந்த மாதிரி மில்களை வாங்க யாரும் முன்வரவில்லை. இது தமிழ் நாட்டின் நிலை. இதன் காரணமாக சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் வேலை இழந்து நிற்கிறார்கள். கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி என்கிறது மில் உரிமையாளர்கள் சங்கம்.

மக்களின் வருவாய் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் வாங்க இருமுறை யோசிக்கிறார்கள். பற்றாக்குறைக்கு ஜிஎஸ்டி வேறு. ‘சந்தை சரிந்துவருகிறது. அடுத்து நாங்களும் ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்யவேண்டியதுதான்’ என்கிறார் பார்லே பிஸ்கட் உரிமையாளர் வருண் பெரி. பிரிட்டானியா உள்ளிட்ட பிஸ்கெட் கம்பெனிகளுக்கும் கூட இதே கதிதான்.

எல்லாவற்றையும் விட தற்போது எல்லோரும் அறிந்த செய்தி இந்தியாவின் அனைத்துத் தானியங்கி வாகனங்கள் விற்பனையும் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருவது. நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள் என எல்லாவற்றின் விற்பனையும் மூச்சு முட்டும் அளவு குறைந்து வருகிறது. எனவே, டாட்டா மோட்டார்ஸ் ஹீரோ மோட்டார்ஸ், டி.வி.எஸ். மோட்டார்ஸ், மஹிந்திரா, அசோக் லேலண்ட், சுசுகி என ஆகப்பெரிய நிறுவனங்கள் அனைத்தும் லேஆப் எனப்படும் பணிக் குறைப்பைப் படிப்படியாக செய்துவருகிறது. ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் வேலை இழந்துவிட்டனர்.

இதற்கு மேலும் ஆலை மூடல் ஆட்குறைப்பு தொடர்ந்து நிகழும் அபாயம் உள்ளது. வாகன விற்பனை குறைந்தால் நிச்சயமாக அத்தோடு நிற்கப்போவதில்லை. வாகன விற்பனை குறைவு உடனடியாக சில்லறை வாகன விற்பனையைப் பாதிக்கும்.இதில் மட்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்து லட்சம் பேர் நாடு முழுவதும் வேலை செய்கிறார்கள். 26,000 ஷோரூம்கள் உள்ளன. 15,000 டீலர்கள் உள்ளனர். கடந்த 18 மாதங்களில் 272 நகரங்களில் உள்ள 286 ஷோரூம்கள் மூடப்பட்டுவிட்டன. இதைத் தொடர்ந்து வாகன உற்பத்தியை நம்பியுள்ள உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் டயர் கம்பெனிகள் என்று இதன் உபதொழில்கள் அனைத்தும் நசிவுறத் தொடங்கியுள்ளது.

நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 7 விழுக்காடு பங்கை வகிக்கும் இந்த வாகன உற்பத்தித் தொழில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த வீழ்ச்சி தொடர்ந்தால் நாடு முழுவதும் 50 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்று மில் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை செய்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை (ஏப்ரல் முதல் ஜுன் வரை) ஒப்பிடும்போது இந்த ஆண்டு உள்நாட்டு கார் விற்பனை வீழ்ச்சி 23 விழுக்காடு வீழ்ச்சி. இரண்டு சக்கர வாகன விற்பனை 11.7 விழுக்காடு சரிவு. டிராக்டர் விற்பனை 14 விழுக்காடு வீழ்ச்சி என்று தொடரும் வீழ்ச்சி பட்டியல் இதர துறைகளையும் கவ்விப் பிடிக்கிறது.

கட்டுமானத்தை எடுத்துக்கொண்டால் கட்டிய வீடுகள் விற்பனை 7 விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சில்லறை விற்பனைத் துறை மற்றும் சேவைத் துறைகளிலும் வீழ்ச்சிப் தொடங்கிவிட்டது. வாகன விற்பனையில் நான்கில் மூன்று பங்கு வங்கிக் கடன்களே. எனவே, இயல்பாகவே வங்கித் துறையிலும் சரிவு தவிர்க்க முடியாதது. இப்படி சகல துறைகளிலும் இது நீட்சி அடைந்து வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு தொடர்பான பொருட்கள், பல்வேறு வகையான பிரின்டர்கள் விற்பனையும் சரிந்து வருகிறது. தானியங்கி வாகனங்கள் உற்பத்தித் துறையோ வேறு எந்தத் தொழில் துறையோ சேவைத் துறையோ வேளாண்மை துறையோ ஒன்றை ஒன்று சார்ந்தது. ஒன்றின் வீழ்ச்சி அனைத்து துறைகளிலும் சங்கிலித்தொடர் போன்ற பாதிப்புகளை உருவாக்கும்.

2008ல் அமெரிக்காவின் வீட்டுமனைத் துறையில் ஏற்பட்ட பாதிப்பு அமெரிக்க பொருளாதாரத்தை உலகப் பொருளாதாரம் முழுவதையும் சுற்றிச் சுழன்று தாக்கியது. அதன் பாதிப்பிலிருந்து இன்னமும் உலகம் மீளவில்லை என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் பட்டிதொட்டி முழுவதும் தானியங்கி வாகனங்கள் உற்பத்தி விற்பனை வேலையின்மை நெருக்கடி பற்றி பேசும் செய்தியாகிவிட்டது. அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சம் சற்று விவரம் அறிந்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு அந்த அச்சம் சிறிதும் இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் அதற்கு வலுவான காரணங்களும் இருக்கின்றன. அரசியல் பொருளாதாரப் பிரச்னைகளை மக்களின் சமாதான சகவாழ்வு என்று எல்லாவற்றையும் உணர்வுகளைத் தூண்டிவிட்டு சமாளிக்கிறார்கள். இது வெகு நாட்களுக்குச் செல்லாது என்பதே நிதர்சனமான உண்மை.

X