ஓடுவதில் உலக சாதனை படைக்கும் ஏழு வயது சிறுவன்!

9/18/2019 11:54:01 AM

 ஓடுவதில் உலக சாதனை படைக்கும் ஏழு வயது சிறுவன்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நலமோடும் வளமோடும் தம் பிள்ளை வாழவேண்டும் என்பது எல்லா பெற்றோர்களின் கனவாக இருக்கும். ஆனால், ஒரு சில பெற்றோருக்குத்தான் தன்னால் முடியாத சாதனையைத் தன் பிள்ளை சாதிக்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும். அப்படிப்பட்ட லட்சியத் தந்தையின் ஏழுவயது மகன் சர்வேஷ் பல்வேறு ஓட்டப்போட்டிகளில் கலந்துகொண்டு 92 பதக்கங்களையும், ஒரு இந்தியச் சாதனையையும் மற்றும் நான்கு உலகச் சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவருகிறார்.

சென்னை மேற்குத் தாம்பரம் நடுவீரப்பட்டில் வசித்து வருகின்றனர் விசு மற்றும் விஜயலட்சுமி தமபதியினர். இவர்களின் மகன்தான் சர்வேஷ். இச்சிறுவயதில் பல்வேறு சாதனைகள் புரிந்த சர்வேஷின் தொடக்க கால ஓட்டங்கள், மேற்கொண்ட பயிற்சிகள் மற்றும் எதிர்கால லட்சியங்கள் குறித்து தந்தை விசு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம்தான் எனக்கு சொந்த ஊர். எங்களுடையது மிடில் கிளாஸ் குடும்பம். பள்ளியில் படிக்கும்போதே எனக்கு ஸ்போர்ட்ஸ் மீது அதிக ஆர்வம் இருந்தது. ஓட்டப்பந்தயத்திலும், விளையாட்டிலும் எனக்குச் சிறுவயது முதலே ஆர்வம் அதிகம். தீவிரமாக அதில்  செயல்பட்டு வந்தேன். ஆனால், அந்தக் காலத்தில் படிப்பிற்குத் தான் முக்கியத்துவம் தந்தார்கள்.

ஆகையால் என் விளையாட்டு ஆர்வத்தை வீட்டில் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. மேலும் ஓடுவதற்கு ஷூ  போன்ற உபகரணங்கள்  அவசியம். ஆனால், வீட்டின் பொருளாதார சூழ்நிலைகளால் என்னால் அதை வாங்கவும் முடியவில்லை, தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபடவும் இயலவில்லை. ஸ்போர்ட்ஸ் பற்றிய என் கனவு வெறும் கனவாகவே போனது’’ என்று கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார்.  

மேலும் தொடர்ந்த விசு, ‘‘படிப்பை முடித்து சென்னைக்கு வந்தேன். வேலைக்குச் சேர்ந்தேன். கல்யாணம் ஆனது, குழந்தைகள் பிறந்தனர். நான் சாதிக்க முடியாததை என் பிள்ளைகளை வைத்து நிறைவேற்ற வேண்டும் என எல்லா அப்பாக்களையும் போல் எனக்கும் ஒரு ஆசை இருந்தது. ஆனால் அதற்காகப் பிள்ளைகளை கட்டாயப்படுத்தக் கூடாது என்பதிலும் அவர்களின் தனித்திறனை மறுக்கக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தேன்.
ஒரு சமயம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சொந்த ஊரான கடலூருக்குக் குடும்பத்துடன் சென்றிருந்தோம்.

அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் சிறுவர்களுக்கான மாரத்தான் (கிட்டத்தான்) போட்டி நடைபெற்றது. சர்வேஷ் சிறுவயதிலிருந்தே துறுதுறுவென விளையாடுவான். யதார்த்தமாக அந்த கிட்டத்தான் போட்டியில் சர்வேஷை பங்குகொள்ளச் செய்தோம். அவனைவிட வயது மூத்த சிறுவர்களுடன் போட்டி போட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தான். அப்போது அவனுக்கு நான்கு வயது. அவனுடைய வேகம் எங்களுக்கு ஆச்சரியம் அளித்தது. அவனுக்குள் இயல்பாகவே திறமை இருந்ததை அப்போதுதான் நாங்கள் உணர்ந்தோம்.

தொடர்ந்து சென்னையில் சிறுவர்களுக்கான சில போட்டிகளில் பங்குகொள்ளச் செய்தோம். அனைத்திலும் தோல்வி அடைந்தான். வருத்தத்திற்கு மாறாக மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஏனெனில் இவனுடன் போட்டி போட்டவர்கள் அனைவரும் இவனைவிட மூத்தவர்கள். மேலும் முந்தைய போட்டிகளில் கற்றுக்கொண்டதை அடுத்த போட்டிகளில் செயல்படுத்திப் பார்த்த விதம் எங்களுக்கு வியப்பை அளித்தது. எனவே, சீரான பயிற்சியின் மூலம் சர்வேஷின் திறனை மெருகேற்றலாம் எனப் பயிற்சியளிக்க ஆரம்பித்தேன்.

எங்கள் வீட்டுக்கு அருகில் சிறிய காட்டுப்பகுதி ஒன்று உள்ளது. அங்கு பயிற்சியை ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும்  இரண்டு கிலோமீட்டர் ஓட வைத்து பயிற்சி அளித்தேன். ஆரம்பத்தில் நானும் அவனும் சேர்ந்தே ஓடினோம். நாளடைவில் அவனுடைய வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆகையால் நான் பைக்கில் வர சர்வேஷ் அதற்கு ஈடாக ஓடிவருவான்.

இவ்வாறு நான்கு வயது முதல் ஆரம்பித்த பயிற்சி ஏழுவயதில் அவனுக்கு நான்கு உலக சாதனைகளைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து பயிற்சி பெற்றதன் விளைவாக அடுத்தடுத்த மாரத்தான்களில் முதலிடத்தைப் பெற்றுவந்தான். இதுவரை மொத்தம் 92 மாரத்தான்களில் கலந்துகொண்டு ஓடியிருக்கிறான். இந்த வருடத்திற்குள் 100 ஐ தாண்ட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறான்’’ எனக்
கூறும் விசு, சர்வேஷின் சாதனைப் பட்டியலை விவரித்தார்.

‘‘ஐந்து வயதில் ஒரு கிலோமீட்டர் தூரம் ரிவர்ஸ் ரன்னிங் ஓடி முதல் இந்திய சாதனை படைத்தார். அடுத்ததாக 49 மாரத்தான்
களில் கலந்துகொண்ட  முதல் ஆறுவயது சிறுவன் என்ற உலக சாதனை படைத்தார். டிரட்மில்லில் 13 குதிரைத்திறன் வேகத்தில் தொடர்ச்சியாக 30 நிமிடம் வெறுங்காலில் ஓடி அடுத்த உலக சாதனை படைத்தார்.

தொடர்ந்து, 464 கிலோமீட்டர் ஓடிய முதல் ஆறுவயது சிறுவன் மற்றும் 984 கிலோமீட்டர் ஓடிய முதல்  ஏழுவயது சிறுவன் என இரு உலக சாதனைகள் படைத்தார். இவ்வாறாக நான்கு உலக சாதனைகளையும், ஒரு இந்திய சாதனையையும் படைத்துள்ளார். கலாம் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட் மற்றும் லண்டனை தலைமையிடமாகவும் சென்னையில் கிளை அமைப்பினைக் கொண்டும் செயல்பட்டுவரும் வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகிய நிறுவனங்கள் இந்த சாதனைகளை ஆய்வுசெய்து அங்கீகரித்து உலக சாதனைக்கான விருதை வழங்கியது.

இதுவரை மொத்தம் 92 பதக்கங்களையும் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளான்.  மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 மாரத்தான்களில் கலந்துகொண்டு 2000 கிலோமீட்டரை கடந்து சாதனை செய்ய வேண்டும் எனவும், இங்கிலாந்துக்காரரின் சாதனையை முறியடிக்கும் வகையில் கின்னஸ் சாதனையை படைக்க வேண்டும் எனவும் திட்டமிட்டு தயாராகிவருகிறான்.

கின்னஸ் சாதனை படைக்க அவனுடைய பள்ளி நிதிஉதவி அளிக்க முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது’’ எனும் விசு, சர்வேஷின் எதிர்கால லட்சியம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். ‘‘உசேன் போல்டின் சாதனைகளை முறியடிப்பது, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது ஆகியவை ஒருபுறம் இருந்தாலும் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதே சர்வேஷின் எண்ணமாக உள்ளது. பன்னிரண்டு வயதில் சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வென்ற இந்தியர்கள்  எனக்குத் தெரிந்து எவரும் இல்லை.

ஆகையால் இளம் வயதில் உலக அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வெல்வது சர்வேஷின் லட்சியமாக உள்ளது. சர்வதேப்
போட்டிகளில் பன்னிரண்டு வயது சிறுவன் தங்கங்களை குவிப்பதே இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமையும்’’ என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் விசு.

தொகுப்பு: வெங்கட் குருசாமி

X