நாசாவுக்குச் செல்லும் தமிழக மாணவி!

9/18/2019 12:00:39 PM

 நாசாவுக்குச் செல்லும் தமிழக மாணவி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

கிராமப்புற மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தொழில்நுட்பத் திறனை ஊக்குவிப்பதற்காக இந்தியாவை சேர்ந்த காயம்பூ ராமலிங்கம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது ’கோ4குரு’ எனும் அமைப்பு.  இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார் காயம்பூ ராமலிங்கம். இவ்வமைப்பு உலகெங்கிலும் உள்ள திறமையான பள்ளிமாணவர்களை அறிவியல் திறமை மற்றும் பொதுஅறிவுப் போட்டிகளின் மூலம் தேர்ந்தெடுத்து அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்திற்கு ஒவ்வொரு வருடமும் அனுப்பிவருகிறது.

2019ம் ஆண்டுக்கான ‘Internationl Space Science Competition’ போட்டிகளைக் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கோ4குரு அமைப்பு நடத்தியது. இந்தியாவிலுள்ள 23 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். அந்தப் போட்டியில் முதல் இடத்தை பெற்று நாசாவிற்கு செல்ல தேர்வாகியுள்ளார் மதுரையைச் சேர்ந்த ஜே.தான்யா தஸ்னம்.
 
இந்திய அளவில் மூன்று மாணவர்களே தேர்வாகியுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் தான்யா தஸ்னம் வெற்றி பெற்றிருப்பது தமிழகத்திற்கு பெருமைசேர்க்கக்கூடிய விஷயமாகும். கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்க, போட்டித் தேர்வில் வெற்றி பெற்றதைக் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார் தான்யா தஸ்னம்.
‘‘மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கடச்சனேந்தல்தான் எங்கள் ஊர்.

அப்பா ஜாபர் உசேன் டீக்கடை வைத்திருக்கிறார். நான் மதுரை மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறேன். அம்மா அங்கு டீச்சராக பணியாற்றிவருகிறார். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே எனக்கு அறிவியலில் ஆர்வம் அதிகம். அறிவியல் செய்திகள், ஆராய்ச்சிகளைத் தேடித்தேடிப் படிப்பேன்.

எங்கள் பள்ளி தாளாளர் பிரேமலதா பன்னீர்செல்வம் ஒவ்வொரு முறை பள்ளிக்கு வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு சாதனையாளர்கள் பற்றி அவர்களின் சாதனைகள், கண்டுபிடிப்புகள், சமூகத்திற்கு அவை உதவிய விதம் என  விரிவாக எங்களுக்கு கூறுவார். அவ்வாறு அவர் அப்துல் கலாம் அய்யாவை பற்றி கூறினார். உடனே நான் மேலும் அய்யாவை பற்றி தகவல்களைத் தேடி முழுவதுமாக படித்தேன். அவரது எளிமையும், அறிவியல் அறிவும் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

அப்துல் கலாம் அய்யா மாதிரி ஒரு சயின்டிஸ்ட் ஆகணும்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன்’’ என்று கூறும் தான்யா, நாசா செல்லும் வாய்ப்பு தற்செயலாக அமைந்தது என்கிறார். ‘‘போன வருடம் டிசம்பர் மாதம் ஒரு நாள் பள்ளியில் கோ4குரு அமைப்பு நடத்தும் கட்டுரைப் போட்டி பற்றி எங்கள் ஆசிரியர் எதேச்சையாக கூறினார். கல்பனா சாவ்லா, நியூட்டன், அப்துல் கலாம் என நான்கு அறிவியாளர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரைப் பற்றி விரிவான கட்டுரையை ஒரு வாரத்திற்குள் எழுதவேண்டும்.

இப்போட்டியில் வெற்றி பெற்றால் நாசாவிற்கு செல்லலாம் என அப்போது வரை எனக்கு தெரியாது. மற்ற போட்டிகளை போல் இதுவும் ஒரு போட்டி என கருதிதான் அதில் கலந்துகொண்டேன்.  அப்துல் கலாம் அய்யாவை தேர்ந்தெடுத்து ‘Dr.Kalam is  My Hero’ என்ற தலைப்பில் ஆயிரம் வரிகளில் விரிவான கட்டுரை எழுதினேன். இந்த வருடம் ஜனவரி மாதம் நான் வெற்றி பெற்றதாக கூறினார்கள்.

என்னுடன் சேர்த்து ஆந்திராவை சேர்ந்த சாய்புஜிதா மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த அபிசேக் ஷர்மா ஆகிய மூவர் இந்திய அளவில் தேர்வாகியுள்ளனர் எனவும் இம்மூவரும் நாசாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனவும் கூறினர். அப்போதுதான் நாசாவிற்கு செல்வது குறித்து எனக்குத் தெரியவந்தது’’ என்ற மாணவி தான்யா பத்து நாள் பயணமாக நாசாவிற்கு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

‘‘கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. கோ4குரு அமைப்பின் நிறுவனர் காயம்பூ ராமலிங்கம் எனக்கு அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட்டை வழங்கினார். இதில் ‘நாசா’விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் வீரரும், விஞ்ஞானியுமான டான் தாமஸ், சவீதா பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்.எம்.வீரைய்யன், இயக்குநர் சவீதா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட்டை வழங்கியதோடு, ‘நாசா’செல்வதற்காக ‘கோ4குரு’நிறுவனம் நடத்தும் அடுத்த ஆண்டுக்கான பொது அறிவு போட்டியையும் ‘நாசா’முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ் தொடங்கி வைத்தார். இவ்வாண்டு அக்டோபர் மாதம் முதல்வாரத்தில் அமெரிக்கா செல்லவிருக்கிறோம். மொத்தம் பத்து நாள் பயணத்தில் முதல் மூன்று நாட்கள் நாசாவை சுற்றிப்பார்க்க ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மூன்று நாட்களில்,  ராக்கெட்டில் பயணப்படும்போது ஏற்படும் அதிர்வை நேரடியாக உணரும் வாய்ப்பு கிடைக்கும்.

அடுத்தடுத்த நாட்களில் விண்வெளி வீரர்களுடனான கலந்துரையாடல்கள் நடைபெறும். மேலும் அங்கும் ஒரு கட்டுரை போட்டி நடத்தப்படவிருக்கிறது. போட்டி நடைபெறும்போதுதான் நாசா விண்வெளி வீரர் தலைப்பை கொடுத்து கட்டுரை எழுதச் சொல்வார். விண்வெளி, அறிவியல், சமூகம், சூழலியல், ஆளுமை என எந்தத் துறையிலிருந்தும் தலைப்பு கொடுக்கப்படும்.

சிங்கப்பூர், மலேசியா என உலகெங்கிலும் இருந்துவந்த போட்டியாளர்கள் அனைவரும் அக்கட்டுரை போட்டியில்  கலந்துகொள்வர். போட்டியில் வெற்றி பெற்ற ஐந்து மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடா யுனிவர்சிட்டியில் இலவசமாக உயர்கல்வி படிக்க ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளது. தற்போது என் முழுக் கவனமும் அப்போட்டியில் வெற்றி பெற்று ஐந்து இடத்திற்குள் வருவதில்தான் உள்ளது’’ என மிகுந்த ஆர்வத்துடன் கூறுகிறார் தான்யா தஸ்னம். தான்யா தஸ்னமின் எதிர்பார்ப்பு பூர்த்தியடைய, மேலும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க நாமும் வாழ்த்துவோம்.

தொகுப்பு: வெங்கட் குருசாமி   

X