உடற்கல்வி ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பள்ளிக் கல்வித்துறை!

10/9/2019 3:26:33 PM

உடற்கல்வி ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பள்ளிக் கல்வித்துறை!

நன்றி குங்குமம் கல்வி-வழிக்காட்டி

சர்ச்சை

பாடத்திட்டம், பொதுத்தேர்வு முறை, சீருடை என பள்ளிக் கல்வித்துறை பல மாற்றங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் விளையாட்டுத் துறையிலும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‘அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் இனி கிராமங்களுக்குச் சென்று அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின்கீழ், அங்குள்ள இளைஞர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளித்து போட்டிக்கு தயார்படுத்த வேண்டும். இதற்காக அவர்கள் ஊராட்சியில் உள்ள புறம்போக்கு இடங்களை அறிந்து விளையாட்டு மைதானங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் கோவை கல்வி அலுவலர் முருகன் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது உடற்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், இவர்கள் வெளியில் பயிற்சி அளிக்கச் சென்றால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யார் விளையாட்டுப் பயிற்சி அளிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர்கள் கழக செயலாளர் தாமஸ் ராஜா செல்வத்திடம் பேசினோம். அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்…  ‘‘இது வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.

 ஆனால், இத்திட்டத்தில் பயிற்சியளிக்க அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதில்தான் சிரமங்கள் உள்ளன. ஏற்கனவே பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில் இருக்கின்ற ஆசிரியர்களையும் இப்படி வெளியில் பணிக்கு ஒதுக்கினால் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகால் என்ற நிலை அல்லவா ஏற்படும். அந்தத் திட்டம் எப்படி முழுமையான பலன் தரும்?

அதேசமயம் ஏற்கனவே உடற்கல்வி ஆசிரியர்களுக்கு படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ள இளைஞர்களை இத்திட்டத்தில் பணியமர்த்தினால் புதிய வேலை வாய்ப்பினை ஏற்படுத்திய மாதிரியும் இருக்கும்; பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலையினைப் பெற்று திறம்பட பணியாற்றும்போது திட்டமும் முழுப் பலன் தரும்.

  மேலோட்டமாகப் பார்த்தால் இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டியா என்று எள்ளி நகையாடும் திட்டம்தான். ஆனால், இதன் பலன் நம்நாட்டிற்கு கிடைக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எவ்வளவு அறிவுத்திறன் புத்திசாலித்தனம் இருந்தாலும் உடற்தகுதி இருந்தால் மட்டுமே மனிதனால் சிறப்பாகச் செயல்பட முடியும்’’ என்கிறார் தாமஸ் ராஜா.

 ‘‘ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது. அதுபோல கல்வியறிவு மட்டுமே மாணவர்களுக்குப் போதாது. விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதனை வியாபாரமாக்கியதன் விளைவு இன்றைய இளைய தலைமுறையின் சீரழிவு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கட்டப்பஞ்சாயத்து, அடியாள் வேலை என அனைத்திலும் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற இளைஞர்களை தவறான சிந்தனையிலிருந்து மீட்டு தன்னம்பிக்கை மிக்கவனாக, தேச நலன் மிக்கவனாக மாற்றும் சக்தி விளையாட்டுத் துறைக்கே உள்ளது.

விளையாட்டு மீது ஆர்வம் இல்லாத குழந்தைகள் இந்த உலகில் கிடையாது. எனவேதான் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் விளையாட்டுத் துறைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளன. இது அரசின் செலவில் கண்டிப்பாக வராது. அரசின் ஆகச்சிறந்த மூலதனம் ஆகும். நாட்டின் இளைய சமுதாயம் சிறப்பாக வழிநடத்தப்பட்டால் நாட்டின் அத்தனை துறையும் தானாக வளரும் என்பது உண்மையே.

இளைஞர்களின் உடற்தகுதி நாட்டின் மிகப்பெரிய மூலதனம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். சிறந்த உடற்தகுதியினைப் பெற விளையாட்டு மட்டுமே வழிவகை செய்கின்றது. எனவே, அரசு முன்பெல்லாம் செயல்படுத்தியதைப்போல இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசுத் துறைகளில், அதாவது அனைத்து மாவட்ட போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம், காவல்துறை, வங்கிகள், துறைமுகம், தபால், தந்தித் துறை, வரி வருவாய்த் துறை போன்றவற்றில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பினை கொடுக்க வேண்டும்’’ என்று கூறும் தாமஸ் ராஜா நம் நாட்டில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் திறன்மிக்க விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கைமுறையில் ஒரு மாணவனுக்கு காலை முதல் இரவு தூங்கும் வரை விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் எப்போதும் படிப்பு படிப்புதான். படிப்பு எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு அவனது உடல்நிலையும் முக்கியம். நம் கல்வி முறையில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் இல்லாததால் நிறைய விளையாட்டு வீரர்களை நாம் இழந்திருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டின்போது நூறு கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட நம் நாடு எத்தனை பதக்கங்கள் வாங்குகிறது என்று பார்த்தால் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை.  ஒரு வெண்கலப் பதக்கம் வாங்கினாலே அவர்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் நிலைதான் உள்ளது.

விளையாட்டு வீரர்களை உருவாக்குவது அவர்களது கல்வி முறையில்தான் உள்ளது. நல்ல பயிற்சி கொடுத்தால் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கலாம். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. இன்றைய நிலையில் அரசுப் பள்ளியில் மட்டுமே விளையாட்டுக்கு ஓரளவு முக்கியத்துவம் தருகிறார்கள். இந்த நிலையில் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களை பஞ்சாயத்து கிராமத்துக்குப்போ, அங்கு புறம்போக்கு நிலத்தை கண்டுபிடித்து விளையாட்டை சொல்லிக்கொடு என்பது வேடிக்கையாகத்தான் உள்ளது.

புதிதாக உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்து இத்திட்டத்தை செயல்படுத்தினால் திறமையானவர்களைக் கண்டுபிடித்து சர்வதேச வீரர்களை உருவாக்க முடியும். ஒவ்வொரு இளைஞரும் சமுதாயத்தில் உயர்ந்து நிற்பதற்கு கல்வி அவசியம். அதேபோல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற்கல்வியும் அவசியம்’’ என்றார்.

  - தோ.திருத்துவராஜ்

X