உயர்கல்வித் துறைக்கு புதிய ஆணையம் தேவையா?

10/17/2019 3:40:46 PM

உயர்கல்வித் துறைக்கு புதிய ஆணையம் தேவையா?

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்தியா சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து உயர்கல்வியின் அனைத்துக் கூறுகளையும் கவனித்துவந்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (AICTE) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) என்ற இரு அமைப்புகளையும் கலைத்துவிட்டு அதற்கு மாற்றாக இந்திய உயர்கல்வி ஆணையத்தை (HECI) அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறது மத்திய அரசு.

பழைய உயர்கல்வி முறையை மாற்றி வேலைவாய்ப்பை உருவாக்கும் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கல்விமுறையை உருவாக்குவது, சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்விநிறுவனங்களை இந்தியாவில் நிறுவி சர்வதேசத் தரத்திலான கல்வியை வழங்கவும், உள்நாட்டு கல்வி நிறுவனங்களை மேம்படுத்தி உலக அரங்கில் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இந்தியக் கல்வி நிறுவனங்களைச் சேர்ப்பதற்கும் இந்த மாற்றங்கள் அவசியம் என்கிறது மத்திய அரசு.

இவ்வறிவிப்பு வந்தவுடன் `கல்வியை, தனியார் மயமாக்கலின் மற்றொரு வழிமுறையே, இதன் மூலம் கல்வி நிறுவனங்கள் எளிதில் தன்னாட்சி அந்தஸ்தைப் பெற முடியும். இது தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சாதகமானதாகவே இருக்கும். என சில எதிர்கருத்துகள் எழுந்தன. இதுகுறித்து பேராசிரியர் முனைவர் நவநீதகிருஷ்ணன் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களை இனி பார்ப்போம். ‘‘அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மன்றம் (AICTE) நாட்டில் தொழில்நுட்பக் கல்வியையும் மேலாண்மைக் கல்வியையும் முறைப்படுத்துகிறது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதையும் அவற்றை முறைப்படுத்தித் தரம் காப்பதையும் செய்துவருகிறது.

இனி, இந்திய உயர்கல்வி ஆணையம் (HCEI) என்ற அமைப்பு, முதலில் UGC-யின் பணிகளையும், பிறகு AICTE-யின் பணிகளையும் ஏற்று, ஒருங்கிணைந்த முறையில் உயர்கல்வியைத் தரம் காத்து, தன்னிறைவு பெறச்செய்து சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. நவம்பர் 1945ல் AICTE தோற்றுவிக்கப்பட்டது. 1987ல் சட்டமாக (Act) உருப்பெற்றது.  டிசம்பர் 1953ல் UGC தோற்றுவிக்கப்பட்டு, சட்டமாக 1956ல் உருவானது. AICTE மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் உயர்கல்வித் துறையில், அகில இந்திய அளவில் இயங்கும் ஓர் அமைப்பு. நாட்டில் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வித்துறைகளில் முறையான திட்டமிடலுக்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் பொறுப்பு வகிக்கிறது.

இளநிலை, மேல்நிலைப் பொறியியல் கல்வி முதலாக, கவின் கட்டடவியல் (Architecture) வரையிலான சுமார் 10 துறைகளில் கவனம் செலுத்துகிறது. ஆயினும் இதன் அதிகார வரம்பு உச்சநீதி மன்றத்தினாலேயே கட்டுப்படுத்தப்பட நேர்ந்ததுண்டு. தேவைக்கு அதிகமான அளவில் பொறியியல் கல்லூரிகள் தோன்ற அனுமதி அளித்து, பொறியியல் கல்வித்துறையில் இன்று மந்தநிலை நிலவ இது ஒரு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. UGC-யும் MHRD-யின் அங்கமாக இயங்குகிறது.

இந்தியப் பல்கலைக்கழகங்களை அங்கீகரிப்பதும் நிதிப் பங்கீடு செய்வதும் இதன் முக்கியப் பணி என்றாலும், உயர்கல்வித் துறையின் தரநிர்ணயம், தரக்காப்பு, ஒருங்கிணைப்பு முதலிய பணிகளும் இதன் பொறுப்பு. 2015ல் நிறுவப்பட்ட இந்திய நிறுவனங்களின் தரவரிசை நிர்ணய அமைப்பு (National Institute of Ranking Framework) இதன் பொறுப்பில் சிறந்த பணியாற்றிவருகிறது. மத்திய அரசு, மாநில அரசு, நிகர்நிலை, தனியார் - பல்கலைக் கழகங்களைப் பராமரிப்பதுடன், போலிப் பல்கலைக்கழகங்களை அடையாளம் கண்டு அறிவிப்பதும் இதன் கடமை.

AICTE, DEC, ICAR, BCI, MCI, DCI, SCHE, COA, VCI என உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைத் தணிக்கை செய்து தரம் காக்கும் 15 தன்னிறைவு பெற்ற அமைப்புகள் UGC-யின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகின்றன. HECI Act-ன் நகல் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டதில் 8000 கருத்துகள் பெறப்பட்டனவாம். அவை கருத்தில் கொள்ளப்பட்டு இத்திட்டம் இறுதி வடிவத்தில் அடுத்த மாதம் மைய அமைச்சரவையில் ஏற்புக்காக வைக்கப்படவிருப்பதாகத் தெரிகிறது.

இதன் முக்கிய நோக்கங்களாக, குறைந்த அரசியல் தலையீடு, மிகுந்த சீரமைப்பு, நிதி தொடர்பான குறுக்கீடு நீக்கம், மேற்பார்வை / குறைகாணல் ஒழிப்பு, ஆற்றல்/தரம் காத்தல், தரமற்ற மற்றும் போலி நிறுவனங்களை இனம்கண்டு ஒழித்தல், ஆராய்ச்சி, கற்றல், கற்பித்தல் ஆகியவற்றின் தரமேம்பாடு, நாளைய தொழில்நுட்ப வளர்ச்சி முதலியவை சொல்லப்படுகின்றன. இவை செயலாக்கப்படுமென்றால் வரவேற்கப்பட வேண்டியவையே’’ என்று கூறும் பேராசிரியர் நவநீதகிருஷ்ணன் சில பாதகமான முன்னுதாரணங்களையும் சுட்டிக்காட்டினார்.

‘‘ஆங்கிலத்தில் ‘No man can serve two masters’ என ஒரு பழமொழி உண்டு. அதன்படி UGC, AICTE ஆகிய இரண்டின் கட்டுப்பாட்டிலும் வரும் பல்கலைக்கழகங்கள் சில வழிகளில் அல்லல்பட்டதுண்டு. இந்த இரண்டுக்குள் சில சமயம் ‘நீயா, நானா’ என்ற போட்டி வேறு. எடுத்துக்காட்டாக 15 ஆண்டுகளுக்கு முன் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நிறைய வரத் தொடங்கிய நிலையில், பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களும் பெற்றோர்களும் அவை AICTE-யின் அங்கீகரிப்பைப் பெறவில்லை என்ற காரணத்தால் போராட்டங்களை நடத்தினார்கள்.

AICTE-யோ அந்த அங்கீகரிப்பைத் தர மறுத்தது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அதன் கட்டுப்பாட்டில் வரவில்லை. UGC தான் பொறுப்பு என்ற காரணத்தைக் காட்டியது. ஆக இப்பல்கலைக்கழகங்கள் ‘திரிசங்கு சொர்க’ நிலையில் சில காலம் இருந்தன. இந்த வகைத் தவிப்பு இனி இருக்காது என்பது ஓர் ஆறுதல். ஆனாலும், ‘பழைய பாண்டம், புதிய பாத்திரம்’ என்பது போல் AICTE, UGC இரண்டிலும் இருந்த முறைகளை, குறைகளுடன், ஓரளவு உருவ மாற்றத்துடன் தந்ததாக HECI அமைந்துவிடக்கூடாது என்பது பலரின் விருப்பம். இரண்டு பாத்திரங்களுக்குப் பதில் ஒரே பாத்திரம் என்பது மட்டும் பெரிய முன்னேற்றமாகிவிடாது.

மேலும், புதிய தேசியக் கல்விக் கொள்கையில் (NEP) இந்த அமைப்புக்கு இடம் இருக்கிறதா, இருந்தாக வேண்டுமா என்ற கேள்விகளும் எழுகின்றன.
ஓர் எச்சரிக்கை: புதிதாகக் கொண்டுவரப்படும் எந்த அமைப்பும் உயர்ந்த நோக்கங்களை முன்வைத்தே அனுமதி பெறுகிறது. AICTE, UGC ஆகியவையும் விதிவிலக்கு அல்ல. ஆனால், நாளடைவில் அவை பொலிவிழப்பது, சிலரால் அவற்றில் தவறுகள் தலைதூக்குவதாலும், அத்தவறுகள் அவ்வப்போது கண்டு களையப்படாததாலும்தான். புதிய திட்டத்தில் இதற்கெல்லாம் வழி இருக்கும் என நம்புவோம்’’ என்று முடித்தார் பேராசிரியர் நவநீதகிருஷ்ணன்.

தொகுப்பு: வெங்கட் குருசாமி

X