நீட் தேர்வு மோசடி…தொடரும் விசாரணை!

10/21/2019 5:01:44 PM

நீட் தேர்வு மோசடி…தொடரும் விசாரணை!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

சர்ச்சை

தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நீட் தேர்வு முறைகேடு, வடமாநிலங்களில் நடைபெற்றுள்ளதும், சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆள்மாறாட்டத்தில்  ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உதித் சூர்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஒரு மாணவி உட்பட 3 மாணவர்கள்  மற்றும் அவர்களது 3 பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு டாக்டர், ஒரு மாணவர் மற்றும் புரோக்கரை  போலீசார் தேடிவந்தனர். சென்னை ஸ்டான்லி  மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் வெங்கடேசன். இவரது மகன் உதித் சூர்யா. இவர், 2019-20ம் ஆண்டு ‘நீட்’தேர்வின் மூலம் தேனி அரசு மருத்துவக்  கல்லூரியில் இளங்கலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். கடந்த  சில நாட்களுக்கு முன், அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் உதித் சூர்யா படிக்கும் தேனி அரசு  மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு இ-மெயில் மூலம் புகார் ஒன்று வந்தது.

அதில், ‘உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்து ‘நீட்’தேர்வில் தேர்ச்சி  பெற்றுள்ளார். தேர்வு விண்ணப்பத்தில் உள்ள மாணவரின் புகைப்படத்திற்கும் தேனி  மருத்துவக் கல்லூரியில் படிக்கும் உதித் சூர்யாவின் புகைப்படத்திற்கும் வித்தியாசங்கள் உள்ளன’என்று அதில் கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, கல்லூரி  நிர்வாகம் புகாரின் பேரில் தேனி மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின்பேரில்,  ஐஜி சங்கர் மேற்பார்வையில் எஸ்பி விஜயகுமார்  தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில், ‘பெரிய அளவில் ‘நெட்ஒர்க்’அமைத்து பலர் முறைகேடாக நீட் தேர்வு எழுதியது தெரியவந்தது. அதையடுத்து,  மாணவன் உதித்சூர்யா மற்றும் அவரது  தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். டாக்டர் வெங்கடேசன் கொடுத்த வாக்குமூலத்தின்  அடிப்படையில் தில்லுமுல்லு செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக மாணவர்கள் இர்ஃபான், பிரவீன், ராகுல் ஆகியோரும் சிக்கினார்கள். மாணவர் பிரவீன்  மற்றும் அவரது தந்தை சரவணன், மாணவர் ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகிய 4 பேரும் தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு  அழைத்து வரப்பட்டு  அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றறது.

டி.எஸ்.பி. காட்வின் ஜெகதீஸ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவி அபிராமியும் விசாரணைக்காக தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு  அழைத்துவரப்பட்டார். அவருடன் அவரது தாயாரும் சிபிசிஐடி அலுவலகம் வந்தார். நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் வழக்கில் மாணவர் ராகுல் மற்றும் அவரது  தந்தை சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர். இது தவிர மாணவர் ராகுல், மாணவி அபிராமி ஆகியோரிடமும்,  அவர்களது பெற்றோரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இவர்களுடைய தந்தையர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோர் மோசடி செய்தது எப்படி என்பதை போலீசார் கண்டறிந்தனர். மாணவர் பிரவீன் ஆவடியிலுள்ள ஒரு  கல்லூரியில் நீட் தேர்வு எழுதினார். அதே நேரத்தில் அவர் பெயரில் ஒருவர் டெல்லி பிதம்பிபுரா பள்ளியில் நீட் தேர்வு எழுதினார். நீட் தேர்வில் பிரவீன் 720-க்கு  130 மார்க் வாங்கினார். இவரது பெயரில் டெல்லியில் தேர்வு எழுதியவர் 348 மதிப்பெண் பெற்றார். இதுபோல் ராகுல் டேவிஸ், தமிழ்நாட்டில் கோவை  கருமத்தம்பட்டி எஞ்சினியரிங் கல்லூரியில் நீட் தேர்வு எழுதினார். இதில் இவருக்கு 125 மார்க் கிடைத்தது.

இதே நேரத்தில் அவருடைய பெயரில் லக்னோவில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதியவர் 306 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வு எழுதிய பிரவீன்,  ராகுல் டேவிஸ் இருவரும் வெற்றி பெறவில்லை. அவர்களுடைய பெயரில் நீட் தேர்வு எழுதியவர்கள் முறையே 348, 306 மதிப்பெண்கள் பெற்று வெற்றி  பெற்றனர். அதைக் கொண்டு பிரவீன், ராகுல் ஆகியோர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். இந்த முறைகேட்டை அவர்கள் விண்ணப்பம் பூர்த்தி  செய்வதிலிருந்தே தொடங்கியுள்ளனர். பிரவீன் விண்ணப்ப மனுவில் பிறந்த தேதி 27 ஜூலை 1998 என்று சரியாக உள்ளது.

இவருக்கு பதிலாக எழுதியவருக்கும் இதே பிறந்த தேதி உள்ளது. ஆனால், தனது தந்தை பெயரின் முதல் எழுத்து, தாய் பெயர் ஆகியவற்றை பிரவீன் சரியாகவும்,  அவருக்கு பதிலாக தேர்வு எழுதியவர் சிறிது மாற்றி எழுதியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த  புரோக்கர் ஜார்ஜ் ஜோசப்பிடம் ₹20 லட்சம் கொடுத்து முறைகேட்டில்  ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த புரோக்கரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோல் ராகுலும் மோசடி செய்துள்ளார். வீட்டு விலாசங்களையும் 2 மாணவர்களும்  மாற்றி எழுதி தில்லுமுல்லு செய்துள்ளனர்.

இதனால்தான் சான்றிதழ் பரிசோதனையின்போது அவர்கள் இருவரும் சிக்கிக்கொள்ளாமல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இந்த மோசடிக்குத் துணை  போனவர்கள் யார் யார், ராகுல், பிரவீனுக்கு பதிலாக தேர்வு எழுதியவர்கள் யார் யார் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த  ஆள்மாறாட்ட மோசடியில் கைது செய்யப்பட்ட மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் ஜாமீனுக்காக முயற்சி செய்துவருகின்றனர். இவர்களின் ஜாமீன்  மனுக்களை தேனி மற்றும் தர்மபுரி நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.

-முத்து

X