காமன்வெல்த் பாரா ஜூடோவில் தங்கம் வென்ற தமிழக மாணவி!

10/22/2019 12:42:02 PM

காமன்வெல்த் பாரா ஜூடோவில் தங்கம் வென்ற தமிழக மாணவி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

எல்லாவிதத்திலும் ஆரோக்கியமான உடல்திறன் பெற்றவர்கள் எந்த சாதனை படைத்தாலும் அது பாராட்டுதலுக்குரியது. அதே சமயம் ஏதாவது ஒரு உடல்திறன் குறை இருந்தும் சாதனை படைத்தார்களென்றால் அது போற்றுதலுக்குரியது. அப்படி ஒரு சாதனையைத்தான் படைத்திருக்கிறார் சேலம் மாவட்டம் செட்டிமாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுபாஷினி.

லண்டன் தலைநகர் பக்கிங்ஹாமில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. சர்வதேச வீரர்கள் கலந்துகொண்ட அப்போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஜூடோவில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு 44 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். சிறுவயதிலேயே பார்வை குறைபாடு கொண்ட சுபாஷினி தன் விடாமுயற்சியால் ஆண்டுதோறும் தேசிய அளவில் நடைபெறும் ஜூடோ போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்று வருகிறார்.

சேலம் அம்மாப்பேட்டை தனியார் கல்லூரியில் இளங்கலை வரலாறு இரண்டாமாண்டு படித்து வரும்  சுபாஷினி பற்றி அவரது பயிற்சியாளர் உஷா பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ‘‘2011-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் கண்பார்வை குறைபாடு உடையோருக்கான பாரா ஜூடோவை அறிமுகப்படுத்தினார்கள். என் கணவர் மகேஷ்வரனும், நானும் இந்தியன் பாரா ஜூடோ ஃபெடரேஷனின் தமிழ்நாடு மாநிலம் சேலம் மாவட்டத்திற்கான பிரதிநிதிகளாக இருக்கிறோம். இந்த அறிவிப்பு வந்தவுடன் இந்தியா முழுவதும் கண்பார்வை குறைபாடு உடையவர்கள் மற்றும் காதுகேளாத, வாய்பேச முடியாதவர்களுக்கு இலவச ஜூடோ பயிற்சியளிக்க எங்கள் அசோசியேஷன் முடிவுசெய்தது.

காது கேளாதவர்களுக்கான ஜூடோவை அடுத்த ஒலிம்பிக்கில்தான் அறிவிப்பார்கள். ஆனால், எங்கள் அசோசியேஷன் காதுகேளாதவர்களுக்கும் பயிற்சியளிக்க முடிவு செய்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் பயிற்சியில் பங்குபெறுவதற்கானவர்களைத் தேடும்போதுதான் சுபாஷினி அறிமுகமானார். வாழப்பாடி அருகே அயோத்தியாப்பட்டணத்தில் இயங்கும் கண்பார்வை குறைபாடு உள்ளோருக்கான நல விடுதியில் தங்கி அப்போது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் சுபாஷினி. சேலம் மாவட்டத்திற்கான பாரா ஜூடோ அசோசியேஷனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷினியையும் சேர்த்து  சுமார் 30  வீரர்களுக்கு இலவசப் பயிற்சியளிக்க ஆரம்பித்தோம்.

சாதாரண நாட்களில் வாரத்தில் ஒருநாளும், போட்டி நடைபெறும் நாட்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறையும் அவரது ஹாஸ்டலுக்குச் சென்று என் கணவரும் நானும் பயிற்சியளிப்போம். ஒவ்வொரு முறையும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு செல்லும்போது சுமார் 20 வீரர்களை அழைத்துச் சென்று 12 மெடல்களை சேலம் மாவட்டம் சார்பாக வென்று வருவோம்’’ எனும் உஷா மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான சிறப்புப் பயிற்சி முறைகளை விளக்கினார். ‘‘சாதாரண வீரர்களைக் காட்டிலும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது.

வாய் பேச முடியாத, கண்பார்வை குறைபாடு உடைய வீரர்களுக்கு கமென்ட் கொடுப்பது, காதுகேளாதவர்களுக்கு பொசிஷன், மூவ்மென்ட்களை செய்து காட்டுதல், முதுகில் தட்டி கமென்ட் கொடுப்பது, கண்பார்வை குறைபாடு உடையவர்களை பொசிஷனில் நிற்கவைத்தல் என பயிற்சி முறைகள் மாறுபடும். பொசிஷனில் நிற்கவைத்தால் போதும் ஒரு நிமிடத்தில் எதிராளியை வீழ்த்துவதில் நிபுணத்துவம் பெற்றவர் சுபாஷினி. சுபாஷினியின் வேகம், கற்றுக்கொள்ளும் ஆர்வம் எங்களுக்கு ஆச்சரியமளித்தது. அதனால் தொடர்ந்து பல்வேறு மாவட்ட, மாநில மற்றும் தேசியப் போட்டிகளில் பங்குகொள்ளச் செய்தோம்.

இதுவரையில் சுமார் 7 தேசிய பாரா ஜூடோ போட்டிகள் நடைபெற்றுள்ளன. பத்து மற்றும் +2 என இரண்டு வருடங்கள் தவிர்த்து மற்ற ஐந்து போட்டிகளில் நான்கு கோல்டு மெடல்கள் மற்றும் ஒரு சில்வர் மெடலை வென்றுள்ளார். இந்த வருடம் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் ஒரு நிமிடத்தில் எதிராளியை வீழ்த்தி இவ்வாண்டுக்கான பெஸ்ட் விருது மற்றும் தங்கப்பதக்கத்தையும் வென்றுள்ளார். மேலும் சர்வதேச காமன்வெல்த் போட்டிக்கும் இந்தியா சார்பாக தமிழ்நாட்டிலிருந்து தேர்வானார். கலந்து கொண்ட முதல் சர்வதேச போட்டியிலேயே தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் சுபாஷினி’’ என்கிறார் பயிற்சியாளர் உஷா.

‘‘காமன்வெல்த் போட்டிகளுக்கு இந்தியா சார்பாக சுபாஷினி உட்பட மொத்தம் 20 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுபாஷினியின் உடன் பிறந்த சகோதரர் மற்றும் சகோதரியும் கூட கண்பார்வை குறைபாடு உடையவர்கள்தான். வறுமையான குடும்பச் சூழல் வேறு. ஆகையால் லண்டன் செல்ல பணவசதி இல்லை. சேவையுள்ளம் கொண்டவர்கள், நட்புவட்டாரத்தில் உள்ளவர்கள் செய்த பண உதவியால் லண்டன் சென்று போட்டியில் பங்குகொண்டு தங்கம் வென்றார். கலந்துகொண்ட 20 வீரர்களில் 19 பேர் இந்தியா சார்பில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

காமன்வெல்த் பாரா ஜூடோ போட்டியில் இந்தியாதான் அதிக மெடல்களை வென்றது’’ எனும் உஷா சுபாஷினியின் லட்சியம் பற்றியும் கூறினார். ‘‘ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே சுபாஷினியின் கனவு. அதற்காகத்தான்  தீவிர பயிற்சி மேற்கொண்டுவருகிறார். ரேங்கிங் அடிப்படையில்தான் ஒலிம்பிக்கில் தேர்வு செய்யப்படுவார்கள். ரேங்கிங்கில் முன்னிலை வகிக்க வேண்டும். ஆகையால் பல சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு வென்றாக வேண்டும். அதில்தான் முழுக்கவனமும் செலுத்திவருகிறார் சுபாஷினி’’ என்றார் உஷா நிறைவாக. சுபாஷினியின் கனவு நிறைவேற நாமும் வாழ்த்துவோம்!

தொகுப்பு: வெங்கட் குருசாமி    

X