சாஃப்ட்வேர் டெவலப்பர் ஆகவேண்டும்!

10/22/2019 12:50:42 PM

சாஃப்ட்வேர் டெவலப்பர் ஆகவேண்டும்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சைக்கிளில் உணவு டெலிவரி செய்யும் கல்லூரி மாணவரின் கனவு!

வறுமையின் நிறம் சிவப்பு. ஆம், இன்னும் இந்தியாவின் பல கிராமங்களில் இந்த நிலைமை நீடித்துக்கொண்டுதானிருக்கின்றது. தொழிற்புரட்சி, விஞ்ஞான வளர்ச்சி என பெருமை பேசினாலும் வாழ்வாதாரத்துக்கு தடுமாறும் நிலைதான் இன்றைய இளைய தலைமுறையின் பிரச்னையாக உள்ளது. குடும்ப வறுமை மற்றும் நல்ல வேலையில் சேர படிக்க வேண்டும் என்பதற்காக இந்த நவீன யுகத்திலும் பல கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் உணவு டெலிவரி செய்கிறார் ஒரு இளைஞர். கரூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரகுநாத்தான் அந்த நபர். கல்லூரி முடிந்ததும் பகுதிநேர வேலை என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ரகுநாத்திடம் பேசியதிலிருந்து...

‘‘கரூரிலிருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் உள்ள குக்கிராமமான காசிப்பாளையம்தான் எனது ஊர். அப்பா பெயர் பொன்னுசாமி, அம்மா பெயர் ரேவதி, ஒரு தங்கை கற்பகவள்ளி எங்கள் பகுதியிலுள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருகிறாள். அப்பா ஒரு கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்துவருகிறார். மாதம் ஏழாயிரம் ரூபாய் கிடைக்கும். அம்மா கூலி வேலை செய்கிறார். அதுவும் மாதத்துக்கு ஏழாயிரம் வந்துவிடும். வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். இதில், வீட்டு வாடகை 3000 ரூபாய் கொடுத்தது போக மீதியுள்ள பணத்தைக் கொண்டுதான் எல்லா செலவுகளையும் பார்க்க வேண்டும்.

பலநாள் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில் இருந்துள்ளோம். இருந்தாலும், படிக்க வைத்துவிட்டால் ஏதாவது ஒரு வேலைக்குப் போய் பிழைத்துக்கொள்வார்கள் என கஷ்டப்பட்டு எங்கள் இரண்டு பேரையும் படிக்கவைத்துவருகிறார்கள். அதனால், நாமும் வளர்ந்துவிட்டோம் இனிமேல் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 11ம் வகுப்பு படிக்கின்ற காலத்திலிருந்தே பகுதி நேரமாக வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டேன்.’’ என்று தனது குடும்பப் பின்னணியையும் வேலைக்கு போய்க்கொண்டே படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய சூழலையும் கூறினார் ரகுநாத்.

‘‘முதலில் டெக்ஸ்டைல்ஸ்களில் பிசிறு எடுக்கின்ற வேலை, மில்லில் தேங்காய் மட்டை வெட்டிப்போடுகின்ற வேலை என கிடைக்கின்ற வேலைகளுக்குப் போக ஆரம்பித்தேன். தினமும் மாலை 6 மணி தொடங்கி இரவு 12 மணி வரை வேலை பார்ப்பேன். 2000 ரூபாய் வரை மாதம் வருமானம் கிடைத்தது. இந்தச் சூழலில்தான், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, 11ம் வகுப்பு விடுமுறையில் நண்பர் ஒருத்தரோடு சேர்ந்து, ஒரு டெக்ஸ்டைல்ஸ்ல பிசிறு எடுக்கிற கான்ட்ராக்ட்டை வாங்கி செய்ய ஆரம்பிச்சோம். மாசம் 3500 ரூபாய் வரை கிடைத்தது. அதை வைத்து கரூர்ல ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. கோர்ஸ் சேர்ந்தேன். கல்லூரி முடிந்தபிறகு மாலையிலிருந்து இரவு 11 மணி வரை வேலை பார்த்தேன்.

ஆனால், நாளாக நாளாக கான்ட்ராக்ட் வருவது குறைய, மாதம் 1500 ரூபாய்தான் வருமானம் கிடைத்தது. ஆனால், நான் செய்யும் வேலையில் வருமானம் போதாத சூழ்நிலையில் அப்பாவோடு வேலை பார்க்கின்ற மேகநாதன் என்பவர், பார்ட் டைம் ஜாபுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்தார். அவருக்குப் பிரபல உணவு டெலிவரி ஸ்டார்ட் அப் (சொமேட்டோ) கம்பெனியில வேலை கிடைத்தது. அவர்கள், ‘இன்னும் ஓர் ஆள் வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். அவர் என்னை சிபாரிசு செய்தார். நானும் வருமானம் இல்லாமல் தவித்ததால், அந்த வேலையில் சேர்ந்தேன்.’’ என தனக்கு சொமேட்டோவில் வேலை கிடைத்த விதத்தை தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த ரகுநாத், ‘‘வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தபோது ‘சைக்கிள் வாகனம்’ என்றுதான் பதிந்தேன். வேலை கிடைத்தது. சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பித்தேன். புது சைக்கிள்கூட வாங்கவில்லை. ஏற்கெனவே பயன்படுத்தி வந்த பழைய சைக்கிளையே உணவு டெலிவரி பண்ணுவதற்குப் பயன்படுத்த ஆரம்பித்தேன். தினமும் குறைந்தபட்சம் 5 ஆர்டர்கள், அதிகபட்சம் 8 வரை கிடைக்கும். சைக்கிளில் அதிகபட்சமாக 5 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டியிருக்கும். இப்போது மாதம் 4000 ரூபாய் வரை கிடைக்கிறது.

ஒருநாள் ரோட்டுல ஒருத்தர் என்னைப் பார்த்து, ‘இருக்கிறதை வெச்சு வாழுறதுக்கு பெரிய மனசு வேணும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும், இந்த மனநிலையை மாத்திக்க வேணாம். ஒருநாள் உங்களை இந்த உலகமே கொண்டாடும்’னு கைகொடுத்தார். அதேபோல, கரூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ஒருத்தர், ‘15 நிமிஷத்துல உணவு வேண்டும்’ என ஆர்டர் பண்ணியிருந்தார். 8 நிமிடத்தில் அவர் முன்னால் போய் நின்றேன். ‘சைக்கிளை வைத்துக்கொண்டு இவ்வளவு வேகமாக எப்படி வந்தாய்? எதுவும் ஜீபூம்பா வேலை காட்டுகின்றாயா? அசத்தலான ஆளுப்பா நீ’ என்று பாராட்டினார்.
எனது உழைப்பை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுவிடமாட்டேன்.

ஏனெனில், உழைத்தால் நிச்சயம் உயர்வு உண்டு என்பது என் நம்பிக்கை. சாஃப்ட்வேர் டெவலப்பராக வேண்டும், எம்.சி.ஏ. படிக்க வேண்டும் என்பது என் கனவாக உள்ளது. நல்லதொரு வேலைக்குப் போகவேண்டும், தங்கையை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும், அப்பா, அம்மாவின் கஷ்டத்தைப் போக்கவேண்டும். அதற்காகவேனும் உழைத்தாக வேண்டும் என்பதில் ஓடிக்கொண்டிருக்கிறேன்’’ என்றார். நம்பிக்கை ஒரு நாளும் வீண்போகாது, அதுவும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தோற்றதாக வரலாறு இல்லை. ரகுநாத்தின் உயரிய எண்ணங்கள் ஈடேற வாழ்த்துவோம்!

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

X