அன்று: தள்ளுவண்டியில் உணவகம் நடத்தியவர் இன்று: பல ஓட்டல்களின் உரிமையாளர்

10/22/2019 5:24:18 PM

அன்று: தள்ளுவண்டியில் உணவகம் நடத்தியவர் இன்று: பல ஓட்டல்களின் உரிமையாளர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தன்னம்பிக்கை உள்ள மனிதன் தோற்பதே இல்லை; தன்மேல் நம்பிக்கை இல்லாத மனிதன் வெற்றிபெறுவதே இல்லை  என்பது நம் முன்னோர்கள் சொல்லிவைத்த வாக்கு. எத்தனை இடர் வந்தாலும் அத்தனையும் இன்முகத்துடன் ஏற்று இலக்கில் மட்டுமே குறிக்கோளுடன் பயணிப்பவர்கள்தான் நினைத்ததை அடைகிறார்கள். டீ கிளாஸ் கழுவி, தள்ளுவண்டி கடை நடத்தி கடும் உழைப்பால் இன்று தமிழகத்தின் தலைநகரான சென்னையின் பல இடங்களில் சேலம் ஆர்.ஆர். பிரியாணி என்ற பெயரில் உணவகம் நடத்திவரும் தமிழ்ச்செல்வன் தன் வெற்றிக்கதையை இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

‘‘எனக்கு பத்து வயது இருக்கும்போது என்னுடைய தாயார் பழனியம்மாள் இறந்துவிட்டார். அப்பா ராஜு மதுவுக்கு அடிமையாகிவிட்டார். இதனால் என்னையும், என் தங்கையையும் கவனிக்க ஆளில்லை. பெரியம்மாதான் எடுத்து வளர்த்தார்கள். அவர்கள் வீட்டிலும் பயங்கர கஷ்டம். எனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆலச்சம்பாளையம் கிராமத்திலுள்ள கொட்டகைப் பள்ளியில்தான் படித்தேன். அங்கு கிடைக்கும் மதிய உணவு போதுமானதாக இருக்காது, அதற்காக வகுப்பறை பெஞ்சுகளை அடுக்கி கொடுத்தால் கூடுதலாக கொஞ்சம் சாப்பாடு தருவார்கள். அப்படி சாப்பிட்டுதான் வளர்ந்தேன்.

ஒரு கட்டத்தில் குடும்ப வறுமை காரணமாக 5ம் வகுப்போடு பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டேன். அப்பகுதியில் உள்ள கடையில் டீ கிளாஸ் கழுவத் தொடங்கினேன். அப்போது என் உறவினர்கள் டீ குடிக்க வரும்போது ஓடி ஒளிந்துகொள்வேன். அவர்கள் முன்னால் டீ கிளாஸ் கழுவ என் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அதனால், அன்று மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இன்றைய சென்னைக்கு செல்ல முடிவெடுத்தேன். ஏனெனில், சிறுவயதில் உறவினர்கள் என்னை சினிமாவுக்கு அழைத்துச் செல்வார்கள். சினிமாவில் எம்.ஜி.ஆரும், விஜயகாந்தும் கூலிதொழிலாளியாக மூட்டைத் தூக்கிப் பிழைத்து பெரிய ஆளான படங்களைப் பார்த்திருக்கிறேன். அதுபோல் நாமும் மூட்டைத் தூக்கி பெரிய ஆளாகிவிடலாம் என்பது என் எண்ணம்’’ என்று தான் கடந்துவந்த பாதையை நினைவுகூர்ந்தார் தமிழ்ச்செல்வன்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘சென்னை செல்வதற்காக எங்கள் ஊர் சாலைகளில் வண்டி மாடுகள் செல்லும்போது அதன் கால்களிலிருந்து விழும் இரும்பு லாடம், ஆணி ஆகியவற்றை சேகரித்தேன். ஒரு இரும்புக் கடையில் விற்றதில் பதினெட்டு ரூபாய் கிடைத்தது. அதில் ஒரு டவுசர், சட்டை எடுத்துக்கொண்டு மீதமுள்ள பணத்தில் டிக்கெட் எடுத்து ரயில் ஏறினேன். ஈரோடு வரைதான் வர முடிந்தது. ஈரோடு ரயில் நிலையத்திலுள்ள அதிகாரியிடம் என்னுடைய நிலையைச் சொன்னேன். அவர் சென்னைக்கு டிக்கெட் எடுத்து என்னை அனுப்பி வைத்தார். சென்னைக்கு வந்து இறங்கியவுடன் பசி மயக்கம் காரணமாக மயங்கி விழுந்துவிட்டேன்.

பெரியவர் ஒருவர்  என்னைத் தூக்கி நாட்டுச் சர்க்கரை, ஜவ்வரிசி கலந்த பாயாசத்தை குடிக்க கொடுத்தார். அப்போதுதான் மயக்கத்திலிருந்து தெளிந்தேன். சென்னை என்னை இனிப்பு கொடுத்து வரவேற்றது என்றே சொல்வேன். அவரிடம் என் கதையை சொன்னேன். அவர் பாரிமுனையில் புதிதாக திறக்கப்பட்ட ஒரு ஓட்டலில் சேர்த்துவிடுவதாகச் சொன்னார். அதை மறுத்துவிட்டு மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என கொத்தவால் சாவடிக்குச் சென்றேன். கொத்தவால்சாவடியில் சிறுசிறு மூட்டைகளை தூக்கி காலத்தை ஓட்டினேன். அதில் கிடைக்கும் கூலி சாப்பாட்டுக்கே போதவில்லை.

சம்பாதிக்கிறது சாப்பாட்டுக்கே போதவில்லையே என்று நினைத்து மீண்டும் ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கே தட்டு கழுவும் வேலை. தொடர்ந்து ஈரத்தில் நின்றதால் கை, கால்களில் சேற்றுப்புண் வந்துவிட்டது. அந்த சமயத்தில் கைகளில் கேரிபேக் சுற்றிக்கொண்டுதான் சாப்பிடுவேன். நாம் ஓட்டல் தொடங்கினால் தொழிலாளர்களை கஷ்டப்படுத்தி லாபம் சம்பாதிக்கக்கூடாது. அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து அவர்களுக்கு போக என்ன கிடைக்கிறதோ அது மட்டும் போதும் என்று அன்றைக்கு முடிவுசெய்தேன். இதற்கிடையில் ஓட்டலில் சப்ளையராக ஆகிவிட்டேன்.

என் அப்பா சமையல் வேலை செய்துவந்ததால் உணவு தயாரிப்பு குறித்து ஓரளவுக்கு தெரியும். அதனால் ஓட்டல் தொடங்க முடிவு செய்தேன். அதற்காக தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்துகொண்டிருந்தவரிடம் நெசப்பாக்கத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த தள்ளுவண்டிக்கு சொந்தக்காரர் சில மாதங்களில் அந்த வண்டியை எனக்கே விற்றுவிட்டு சென்றுவிட்டார். நான்கு நண்பர்கள் சேர்ந்து அதை நடத்தினோம். ஆனால், ஒற்றுமை இல்லாத காரணத்தால் தள்ளுவண்டி வியாபாரம் முடிவுக்கு வந்துவிட்டது. பின்னர் மறுபடியும் ஓட்டலில் வேலை பார்த்து சீட்டு போட்டு பணம் சேர்த்தேன்.

உழைத்துக்கொண்டேயிரு ஒருநாள் உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவாய் என்று என் உள்மனம் சொன்னது. அதேசமயம் என் உழைப்பிற்குபக்கபலமாக இருக்கவும் வாழ்க்கைத் துணைக்காகவும் ஒரு பெண்ணை தேடினேன். அவர் அழகாக இருக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால் உழைக்கத் தயாராக இருக்கவேண்டும் என எண்ணினேன். என் எதிர்பார்ப்பின்படியே எனக்கு கிடைத்தவர் என் மனைவி அமுதா. சீட்டுப்போட்டு சேர்த்த பணத்தை வைத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு புரசைவாக்கத்தில் ஒரு தள்ளுவண்டி வாங்கினேன். அதை கூடுவாஞ்சேரிக்கு கொண்டுபோய் சேர்க்க 300 ரூபாய் கூலி கேட்டதால் நானே அதைத் தள்ளிக்கொண்டு போய் சேர்த்தேன்’’ என்று தன் கடந்த கால அனுபவங்களை கூறினார்.

‘‘கூடுவாஞ்சேரியில் தள்ளுவண்டியில் உணவகத்தை தொடங்கினேன். தள்ளுவண்டி வியாபாரத்தில் ரவுடிகளின் அட்டகாசம் மற்றும் நெருக்கடியால் நண்பர் செந்தில் ஊருக்கே சென்றுவிட்டார். உணவகத்தை நடத்துவது போல் மிகவும் கடினமான தொழில் எதுவும் இல்லை. நாள், கிழமை அனைத்தையும் பார்த்துதான் இந்தத் தொழிலை நடத்த முடியும். இதில் வெற்றி பெற்றவர்களை விட தோற்றவர்களே அதிகம். தரம் மற்றும் ருசியின் காரணமாக தள்ளுவண்டி கடைக்கு வாடிக்கை யாளர்கள் அதிகளவில் வரத்தொடங்கினர். அந்தக் காலகட்டத்திலேயே முதன்முறையாக பாசுமதி அரிசி வாங்கி தள்ளுவண்டியில் பிரியாணி வியாபாரத்தைத் தொடங்கினேன்.

என் மனைவி அமுதா தான் சமையலில் மிகப்பெரிய உதவியாக இருந்தார். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பார் அல்லவா, அந்தப் பெண் எனக்கு என் மனைவி அமுதாதான். பிரியாணியின் ருசியைப் பார்த்தவிட்டு ஒரு அரசியல் பிரமுகர் தாம்பரம் வந்து அவருடைய இடத்தில் தள்ளுவண்டிக் கடை நடத்தும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி தாம்பரம் வந்து தள்ளுவண்டியில் பிரியாணி வியாபாரத்தை தொடர்ந்தேன். என் கடையின் ருசி அறிந்து வந்த பிரபலங்கள் எல்லாம் நிரந்தரக் கடையாக தொடங்கும்படி சொன்னார்கள். இதையடுத்து இரண்டு லட்சம் ரூபாய் சீட்டு போட்டு அதை எடுத்து முதல் கடையை இரண்டு டேபிள்களுடன் தொடங்கினேன்.

கடைக்கு பிலால் என பெயர் வைத்திருந்தேன். ஏனெனில், அன்றைக்கு பெரும்பாலான பிரியாணிக் கடைகளின் பெயர் பிலால் என்பதாகவே இருந்தது. ஆனால், ஒருவர் முஸ்லிம் பெயரை வைத்தால் கடை நன்றாக நடக்கும் என அந்தப் பெயரை வைத்துள்ளாயா’’ என்று கேட்டு சண்டை போட்டார். அன்று இரவு முழுவதும் யோசித்தேன், நமது மாவட்டம் சேலம், அப்பாவின் பெயரில் முதல் எழுத்து ஆர், உடனிருந்த ஒரு நண்பரின் பெயர் முதல் எழுத்து ஆர் இவற்றைச் சேர்த்து சேலம் ஆர்.ஆர். பிரியாணி என்ற பெயரை வைக்க முடிவு செய்தேன். அதன்படி மறுநாள் காலையில் எனது கடைக்கு சேலம் ஆர்.ஆர். பிரியாணி உணவகம் என்ற பெயரும் வைத்தேன்.

என்னை பொறுத்தவரையில் பணம் காசு பெரிதல்ல, தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்திதான் முக்கியம். எனக்கு படிப்பறிவு கிடையாது, ஆடிட்டர்தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். அவரிடம் சொல்வது ஒன்றே ஒன்றுதான் எந்தச் சூழ்நிலையிலும் தவறு செய்துவிடாதீர்கள், அரசுக்கு செலுத்தவேண்டிய வரியை ஒழுங்காக செலுத்துங்கள், தொழிலாளர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்ய முடியுமோ அதைச் செய்துவிடுவோம். அதையும் தாண்டி மீதமிருக்கும் பணமே நமக்கு லாபம் என்பதை தாரகமந்திரமாக கொண்டு செயல்பட்டுவருகிறேன்.

அதுதான் என் வெற்றிக்கு காரணம். இன்று வரையிலும் கடையின் கைப்பையில் என்னுடைய மொபைல் எண்ணைத்தான் பதிவிட்டுள்ளேன். சென்னை முழுவதும் பல இடங்களில் எங்கள் கிளைகள் உள்ளன. விரைவில் வெளிநாடுகளிலும் கிளைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன்’’ என சுவையாக பேசி முடித்தார் தமிழ்ச்செல்வன்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

X