500 மீட்டர் வரை பறந்த அரசுப் பள்ளி மாணவர்களின் ராக்கெட்!

11/6/2019 12:36:19 PM

500 மீட்டர் வரை பறந்த அரசுப் பள்ளி மாணவர்களின் ராக்கெட்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சேலம் மாவட்டம் கடைக்கோடியில் உள்ள கொங்கணாபுரத்தை அடுத்த தேவனூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 500 மீட்டர் உயரத்திற்கு ஒரு ராக்கெட் எஞ்சினை ஏவி சாதனை படைத்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டி அவர்களை ஆக்கப்பூர்வமான முறையில் சிறந்த விஞ்ஞானிகளாக மாற்றும் முயற்சியில் ஆர்வம் காட்டிவரும் அப்பள்ளியின் ஆசிரியர் தினேஷிடம் பேசியபோது அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்…  

‘‘நான் கிராமப்புற அரசுப் பள்ளியில் ஆசிரியராக 15 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலானவர்கள் அறிவியலில் திறன் உள்ளவர்களாக இருப்பதை காலப்போக்கில் கண்டறிந்தேன். ஆதலால் அவர்களுக்கான சரியான வழிகாட்டலை வழங்கிட திட்டமிட்டேன். அதனால் கிராமப்புற மாணவர்களுக்கு முதலில் விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்கினேன். இதுவரை எங்கள் பள்ளி மாணவர்கள் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளோடு கலந்துரையாடியுள்ளனர்.

டார்வின் அறிவியல் மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி அருகிலுள்ள பிற பள்ளிகளுக்கும் அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை செய்துவருகிறேன். பள்ளி மாணவர்களை பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள விண்வெளி ஆய்வு மையங்களுக்கு அறிவியல் சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறேன். எனது செயல்பாடுகளைக் கண்டு பெங்களூரு ஆக்டிவிட்டி எஜூகேட்டர், ஐஸ்கோப் நிறுவனம் 2.5 லட்சம் மதிப்பினில் வான் அறிவியல் தொழில்நுட்பக் காட்சிக்கூடம், ஆய்வகத்தை 2018 ஆம் ஆண்டில் வழங்கினர்.

இதனை அரசுப் பள்ளிக்கு இலவசமாக வழங்கினேன். மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த பயிற்சியளித்தேன். அதில் கொங்கணாபுரம் ஒன்றியம், தேவனூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் Solid Propellant Rocket எனும் ஒரு வகை ராக்கெட் செய்முறை மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். இந்த மாணவர்களின் திறனை உலகிற்கு காட்டிட அப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் கல்வி அதிகாரிகள், ஊர் மக்கள்,  பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் முன்பாக அவர்கள் வடிவமைத்த ராக்கெட்டை விண்ணில் 500 மீட்டர் தூரம் வெற்றிகரமாக ஏவி சோதனை செய்து காண்பித்தோம்.

இந்த ராக்கெட்டின் தலைப்பகுதியில் வளிமண்டலத்திலுள்ள காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவற்றை அறிந்திட சென்சார்களை அமைத்துள்ளனர். இந்த சென்சார் மூலமாக மாணவர்கள் வைத்திருக்கும் கைப்பேசிக்கு ஒவ்வொரு விநாடியும் தகவல்கள் அனுப்புமாறு வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு கிராமப்புற அரசுப் பள்ளிகளிலும் இருக்கும் கலாம்களைக் கண்டறிந்து களம் காண வைத்திடும் முயற்சியில் தொடர்ந்து எங்கள் டார்வின் அறிவியல் மன்றம் பயணிக்கும்’’ என்றார்.

தொகுப்பு: திருவரசு

X