உலக ஜூனியர் செஸ் சேம்பியன் பட்டம் வென்ற தமிழக மாணவன்!

11/18/2019 5:21:55 PM

உலக ஜூனியர் செஸ் சேம்பியன் பட்டம் வென்ற தமிழக மாணவன்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

சமீபத்தில் உலக ஜூனியர் செஸ் சேம்பியன்ஷிப் தொடர் மும்பையில் நடைபெற்றது. இந்தத் தொடரில் பல நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட இளம் செஸ் வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தத் தொடரில் அண்டர் 18 பிரிவில் சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் பதினான்கு வயதே ஆன பிரக்ஞானந்தா பங்கேற்று சேம்பியன் பட்டத்தை வென்று நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
உலக ஜூனியர் செஸ் சேம்பியன்ஷிப் தொடரில் 11 சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. அதில் முதல் பத்துப் போட்டிகளில் பிரக்ஞானந்தா 7 வெற்றிகள் மற்றும் 3 டிரா செய்திருந்தார். இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் வேலன்டின் என்ற ஜெர்மானிய வீரரை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில் டிரா செய்தாலே சேம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற நிலையில் போட்டியை டிரா செய்தார் பிரக்ஞானந்தா. இதன் மூலம் 7 வெற்றிகள், 4 டிரா செய்து அதிக புள்ளிகள் பெற்று அண்டர் 18 உலக ஜூனியர் சேம்பியன் பட்டத்தை வென்றார். முன்னதாக இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டரான இவர், தற்போது சேம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியிருக்கிறார். முதன் முறையாக இந்தியாவில் நடை
பெறும் சர்வதேசத் தொடர் ஒன்றில் சேம்பியன் பட்டம் வென்று சாதித்திருக்கிறார். கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா ஒன்றும் நடத்தப்பட்டது.

இவ்விழாவில் மாணவன் பிரக்ஞானந்தா, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த இரண்டரை வயதுக் குழந்தை சுஜித் வில்சனுக்கு தனது சேம்பியன் பட்டத்தைச் சமர்ப்பித்தார். பதின் பருவத்தை எட்டுவதற்கு முன்னதாக கிராண்ட் மாஸ்டரானது உலகிலேயே இருவர்தான். ஒருவர் பிரக்ஞானந்தா, மற்றொருவர் உக்ரைனைச் சேர்ந்த செர்கே கர்ஜாகின். பிரக்ஞானந்தா இத்தாலியில் நடந்த கிரிடின் ஓப்பன் செஸ் சேம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்று கிராண்ட் மாஸ்டரானார். பிரக்ஞானந்தாவின் வெற்றிக்குப் பின்னணியில் இருந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் போலியோவால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை ரமேஷ்பாபு. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ரமேஷ்பாபு தமிழக அரசின் கூட்டுறவு வங்கியில் 23 வயதில் பணிக்குச் சேர்ந்தார்.

தற்போது சென்னை கொரட்டூரிலுள்ள கூட்டுறவு வங்கி கிளையொன்றின் மேலாளராகப் பணிபுரிகிறார். ரமேஷ்பாபு - நாகலட்சுமி தம்பதிக்கு இரு குழந்தைகள். இவர்களது பெண் வைஷாலியும் செஸ் போட்டியில் அசத்திக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகன் எப்படி கிராண்ட் மாஸ்டர் ஆனார் என்பதுபற்றி பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ்பாபு கூறுகையில், ‘‘எனது மகள் வைஷாலியை செஸ் வகுப்பில் சேர்த்துவிட்டிருந்தேன். அவள் நன்றாக விளையாடினாள். ஆனால், செஸ் விளையாட்டுப் போட்டிகளில் பெரிய நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும்.

குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரச் சூழ்நிலை எல்லாம் கருத்தில் கொண்டு எனது மகனை செஸ் விளையாட்டில் ஈடுபடுத்தக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால், நான்கு வயது இருக்கும்போதே அக்காவுடன் செஸ் போர்டில் நிறைய நேரத்தைச் செலவிட்டார் பிரக்ஞானந்தா. தன் வயதுள்ள சிறுவர்களுடன் நேரத்தைச் செலவிடாமல் 64 கட்டங்களின் மேல் என் மகன் கொண்டிருந்த காதல் எனது எண்ணத்தை மாற்றியது’’ என்று தன் மகனின் தனித்திறனைப் பற்றி நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர், ‘‘வைஷாலிக்கும் பிரக்ஞானந்தாவுக்கும் சுமார் நான்கு வயது வித்தியாசம். பிரக்ஞானந்தா செஸ் விளையாட்டின் அடிப்படையைத் தனது அக்காவிடமிருந்து கற்றுக்கொண்டான்.

அதற்கு மேலான பயிற்சியைப் பயிற்சியாளரிடம் மேற்கொண்டான். போலியோவால் பாதிக்கப்பட்டதால் என்னால் வெகுதூரம் பயணங்கள் செல்ல முடியாது. எனது மனைவி நாகலட்சுமிதான் அயல்நாடுகளுக்கு எனது பிள்ளைகளை அழைத்துச் செல்வார். செஸ் விளையாட்டில் இருவரும் உள்ளூரில் நன்றாக விளையாடியதால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று அங்கேயும் வெற்றியைக் குவித்து இந்திய அரசின் உதவி மற்றும் செஸ் அகாடமியின் ஏற்பாடுகளில் ஆசிய அளவிலான செஸ் டோர்னமென்ட் விளையாட்டில் பங்கேற்றனர்.

எட்டு வயதுக்குட்பட்டோர் மற்றும் பத்து வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் உலக இளம் செஸ் சேம்பியன்ஷிப் போட்டியில் 2013 மற்றும் 2015 வருடங்களில் பிரக்ஞானந்தா சேம்பியன் டைட்டில் வென்றிருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே பிரக்ஞானந்தா இந்திய நாளிதழ்களின் விளையாட்டுப் பக்கங்களில் பெரிய அளவில் இடம்பிடித்துவிட்டார். ஐந்து வயதிலிருந்தே செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியவர் கடந்த 2016-ம் ஆண்டு உலகின் யங் இன்டர்நேஷனல் மாஸ்டர் (ஐஎம்) எனும் சிறப்பைப் பெற்றார். தற்போது முதன் முறையாக இந்தியாவில் நடைபெற்ற சர்வதேசத் தொடரில் பங்கேற்று உலக ஜூனியர் செஸ் சேம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தொகுப்பு: திருவரசு

X