தன்னம்பிக்கையுடன் கைகொடுங்கள்!

11/21/2019 3:47:07 PM

தன்னம்பிக்கையுடன் கைகொடுங்கள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உடலின் செயல் அதன் பாகங்கள் ஒவ்வொன்றுடனும் இணைந்து வெளிப்படும் மாபெரும் இயக்கம். உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் தனித்துவத்தோடு இருப்பதால், அதன் வெளிப்பாடுகள் ஒவ்வொன்றும் ஓர் அர்த்தத்துடனேயே இருக்கும். அதே நேரம் பாகங்கள் ஒவ்வொன்றும் ஒட்டுமொத்தமாக இணைந்து உடல் திரட்சியாகச் செயல்படும்போது அதன் மொழி வேறு விதமாகவும் இருக்கும். தனித்தனிப் பாகங்களின் மொழி ஒன்றாகவும், உடல் முழுமைக்குமான மொழி வேறொன்றாகவும் இருப்பது ஒரு விசித்திரம்தான்.

கைகுலுக்குவது அல்லது கைகொடுப்பது நட்பையும், தோழமையையும் ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தது. அதே நேரம் அது எரிச்சலூட்டும் விதமாகவும், வெறுப்பேற்றும் விதமாகவும் அமைந்துவிடுவது மனித இயல்பால் ஏற்படக்கூடியது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சந்தித்து கைகுலுக்க வேண்டிய நேரங்களில், ‘தவிர்க்க வேண்டிய கைகுலுக்கல் முறைகள்’ என்று எட்டுவிதமான கைகுலுக்கல் முறைகள் இருக்கின்றன. அவை.

ஈரமான கைகுலுக்கல்

பதற்றத்தாலும், படபடப்பாலும் கை குலுக்கும் நேரத்தில் திடீரென்று சிலருக்கு உள்ளங்கை வியர்த்துப்போகும். வேறு சிலருக்கு கைகள் எப்போதும் ஈரமாகவும் பிசுபிசுப்பாகவும் இருக்கும். (ஹைப்பர் ஹைடிராசிஸ் காரணமாக) அப்படிப்பட்டவர்களுடன் கைகுலுக்கும்போது ஏதோ ஈரமான மீனைத் தொட்டதுபோல் அவஸ்தையாக உணர்வார்கள். ஈரமான கைகளைக் கொண்டவருடனான கைகுலுக்கல் பலமில்லாமல் இருப்பதால் அவர் உறுதியற்றவர் என்ற பிம்பத்தையும் பலவீனமானவர் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும். அடுத்தவருடன் கைகுலுக்குமுன் கைகளை நன்கு துடைத்துக்கொள்வது நலம்.

காந்தக் கைகுலுக்கல்

சிலர் கைகுலுக்க வரும்போது திடீரென்று அடுத்தவரின் கைகளைப் பற்றி காந்தம்போல் நெருக்கமாக இழுத்துக்கொள்வார்கள். எங்கே அடுத்தவர் தம்மீது அதிகாரத்தை செலுத்திவிடுவார்களோ என்ற பயத்தால், ஒரு தற்காப்பிற்காக இப்படி நடந்துகொண்டாலும், இது ஒரு பலவீனமான செயல். அடுத்தவருக்கு நிலை தடுமாற்றத்தைத் தரும் இந்த காந்தச் செயல் உறவைக் கெடுத்துவிடும்.

பற்றி இழுக்கும் கைகுலுக்கல்

ஏதோ ஒரு ஆசையால், அன்பின் மிகுதியால் உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் கைகுலுக்கும்போது சிலர் அடுத்தவரின் கைகளை இரண்டு கைகளால் குலுக்கி, அப்படியே தங்கள் பக்கம் இழுத்து அணைத்துக்கொள்ள முற்படுவார்கள். கைகுலுக்க வந்தவருக்கு இந்த எதிர்பாராத நிகழ்வு நிலைதடுமாற்றத்தை ஏற்படுத்துவதோடு, பற்றி இழுப்பவர் தன்மீது ஆளுமையைச் செலுத்துகிறார், கட்டுப்படுத்த நினைக்கிறார் என்ற எண்ணத்தையும் வலுவாக ஏற்படுத்திவிடும். பற்றி இழுக்கும் இந்த எதிர்பாராத நிகழ்வு சூழலையே கெடுத்துவிடும்.

இறுக்கமான கைகுலுக்கல்

அடுத்தவருடன் கைகுலுக்க உள்ளங்கையைக் கீழ் நோக்கிய நிலையில் நீட்டுபவர் திடீரென்று ஒரு முரட்டுத்தனத்தை இறுக்கத்தில் காட்டிவிடுவார்கள். இவர்கள் கைகளைப் பற்றிக் குலுக்கமாட்டார்கள். ஆனால் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு விடாமல் அடுத்தவரை நகர்த்துவார்கள். கைகுலுக்க வந்தவரை இறுக்கத்துடன் அவரது வட்டத்தைவிட்டு வெளியே தள்ளு வதாகவும், இழுத்த இழுப்பிற்கெல்லாம் போகச் செய்வதாகவும் இருக்கும். கைகுலுக்க கை நீட்டியவர் தனது கையை விட்டால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்.

அடிபம்ப் கைகுலுக்கல்

சிலர் கைகுலுக்கும்போது அடுத்த வரின் கைகளைப் பற்றி உதறுவது போல் குலுக்குவார்கள். கூடவே மாற்றி மாற்றி பல தடவை அடிபம்ப்பை அடிப்பதுபோல் கைகளை அழுத்துவார்கள். பொதுவாகப் பலரும் இவ்வகையான கைகுலுக்கலை 3 முதல் 4 முறை வரை சரி போகட்டும் என்று பொறுத்துக்கொள்வார்கள். அதற்கு மேல் பம்ப் அடிக்கப்படுகையில்(!!!) வலுக்கட்டாயமாகக் கைகளை விடுவித்துக்கொள்வார்கள். இந்த பம்ப் அடிக்கும் கைகுலுக்கலைக் கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்களுடன் கைகுலுக்கும்போது கவனிக்க முடியும். பம்ப் அடிப்பது போல் கைகுலுக்குபவர்கள் மனத்துணிவு இல்லாதவர்கள் என்ற எண்ணத்தைத்தான் அடுத்தவருக்கு ஏற்படுத்தும்.

டச்சு கைகுலுக்கல்

ஒரு கொத்து கேரட்டைப் பிடித்து ஒவ்வொரு கேரட்டாகத் தொட்டுப் பார்ப்பதுபோல் சிலர் கைகுலுக்கும்போது அடுத்தவரின் விரல்களைத் தொட்டு நீவிவிட்டபடி கைகுலுக்குவார்கள். எந்த உரிமையும் இல்லாதவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்ற வெறுப்பில் யாரும் இதை ரசிக்க மாட்டார்கள். ஒரு அழுக்கைத் தொட்டுப் பார்த்ததுபோல் முகச் சுழிப்புடனேயே பார்ப்பார்கள். இது நெதர்லாண்டில் உருவான கைகுலுக்கல் முறை என்பதால் இதற்கு அந்த நாட்டின் பெயர்.

நுனி விரல் கைகுலுக்கல்

ஆண் பெண் கைகுலுக்கலின்போது இதை அதிகம் பார்க்கலாம். உறுதியாக உள்ளங்கைகள் பதிய கைகுலுக்காமல், பேருக்கு ஒட்டுதல் இல்லாமல் விரல்களை மட்டும் தொட்டுக்கொண்டு சிலர் கை குலுக்குவதுபோல் பாவனை செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள் மீது அடுத்தவருக்கு ஒருநாளும் நம்பிக்கை வராது. இவர்களின் முகம் சிரித்தபடி இருந்தாலும், விரல்கள் நுனி விரலை மாத்திரம் பற்றியபடி இருக்கும். தன்னம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் இப்படி கைகுலுக்குகிறார் என்ற பிம்பத்தை அடுத்தவருக்கு ஏற்படுத்தித்தரும். ஒருவருக்கொருவர் தூரமாக இருந்து கைகுலுக்க முற்படும்போது, எட்டாத தூரத்தால் விரல்களை மட்டும் தொட்டுக்கொள்வது போல் அமையலாம். ஆனால், அப்போதுகூட அந்தச் சூழலிலிருந்து வெளிப்பட்டு சற்று நெருங்கிவந்து ‘வாங்க’ என்று அழைத்து அன்பாகக் கைகுலுக்கிக் கொள்வதுதான் சரி.

நொறுக்கும் கைகுலுக்கல்

மோசமான கைகுலுக்கலின் அண்ணன் என்றால் அது நொறுக்கும் கைகுலுக்கல்தான். கைகுலுக்கலின்போது பலரும் பயப்படுவது இந்த கைகுலுக்கலுக்குத்தான். சாதாரணமாக கைகுலுக்கும்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் அடுத்தவரின் கை விரல்கள் நொறுங்கும் அளவுக்கு அழுத்திவிடுவார்கள். விரல்கள் ஒன்றோடு ஒன்று இறுக்கி, மோதிரத்தை விரல்களோடு நசுக்கி, ‘ஸ்ஆ’ என்று அலற வைப்பதாக இருக்கும். நொறுக்கலால் ஏற்படும் வலி முதல் சந்திப்பைக் கசப்பானதாக மாற்றிவிடும். முரட்டுத்தனம் வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

ஒரு சந்திப்பில் முதல் சில நிமிடங்களில் ஒரு உறவின் தொடர்ச்சியைத் தீர்மானிக்கும் வல்லமை கைகுலுக்கலுக்கு மாத்திரமே இருக்கிறது. மனிதர்களுடனான உறவு சுமூகமாக மலர, அடுத்தவருடன் கைகுலுக்குவதுதான் உடல்மொழி காட்டும் முறையான வழி! யார் ஒருவருடனும் கைகுலுக்கும்போது கம்பீரமாக உள்ளங்கையைச் செங்குத்தாக வைத்திருந்து அடுத்தவரது அழுத்தத்திற்கு ஈடு கொடுத்து தன்னம்பிக்கையுடன் கை கொடுப்பதுதான் சரி!! உறவுக்குக் கைகொடுப்போம் என்பது கைகுலுக்கலைப் பொறுத்தவரை மிகப் பொருத்தமானது.

- தொடரும்

உடை வழி - டர்பன் (தலைப்பாகை)

டர்பன் முதல் முதலாக எப்போது கண்டறியப்பட்டது என்பது இன்று வரை யாராலும் அறுதியிட்டுச் சொல்லமுடிவதில்லை. முதன் முதலாக கி.மு 2350-ல் டர்பனைப் போன்ற ஒரு பொருள் மெசப்பட்டோமியாவில் கண்டறியப்பட்டது என்றே குறிப்பிடுகிறார்கள். இந்தியாவில் 17-ம் நூற்றாண்டில் மக்கள் அனைவரிடமும் தலைப்பாகை அணியும் வழக்கம் மேலோங்கியிருந்தது. அப்போது டில்லியை ஆண்ட ஔரங்கசீப் முஸ்லிம் அல்லாதவர்கள் தலைப்பாகை அணியக்கூடாது என்று உத்தரவிட்டார். இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

தலைப்பாகை விஷயத்தில் சீக்கியர்கள் அதை ஒரு புனித உடையாகவே பாவித்தார்கள். அதேபோல் இந்துக்களிலும் குறிப்பாக ராஜபுத்திரர்கள்/ஜாட்/மராட்டியர்கள் தலைப்பாகையைத் தங்களின் இன அடையாளமாகவே கருதினர். தடை உத்தரவிற்குப் பின், சீக்கியர்களுக்கும், இந்துக்களுக்கும் முகலாய அரசுடன் மோதல் ஏற்படத் தொடங்கியது. அது ஒரு கட்டத்தில் முற்றிப்போய், தலைப்பாகையை விட்டுத்தரமுடியாது என்று போராடிய சீக்கிய குரு தேஜ் பகதூரை ஔரங்கசீப் டெல்லியில் தூக்கிலிட்டுக் கொன்றார். அது சீக்கியர்களிடம் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

தலைமுடியை இழந்து தலைப்பாகையைக் கழற்றும் சந்தர்ப்பம் வருமானால் அதற்குத் தலையையே தரக்கூடியவர்களாக சீக்கியர்கள் மாறினார்கள். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது (1947ல்) இந்து முஸ்லிம் கலவரம் ஏற்பட்டது. அப்போது பச்சை நிறத் தலைப்பாகை அணியாத அனைவரும் இந்துக்கள் என்ற எண்ணத்தில் தாக்குதல் நடந்தது. தலைப்பாகையைக் கொண்டு நடைபெற்ற இந்த சம்பவம் சரித்திரத்தில் பெரிய தழும்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து இந்துக்கள் தலைப்பாகை அணிவதைக் குறைத்துக்கொண்டார்கள்(விஷேசங்கள் தவிர).

சீக்கியர்கள் விடாமல் அணிந்தார்கள். அமெரிக்கா லண்டன் போன்ற நாடுகளில் குடியேறத் தொடங்கிய சீக்கியர்கள் தங்கள் மத அடையாளமான தலைப்பாகை உடையை ஒரு தனித்துவமான உடையாகவே உலகத்திற்குக் காட்டினார்கள். சீக்கியர்களின் தலைப்பாகை உடை இன்றளவும் உலக மக்களுக்கு அவர்களை இந்தியர்களாகவே காட்டிக்கொண்டிருக்கிறது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், 1970ல் வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று பிரிட்டன் அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. ஹெல்மெட் அணிய வேண்டுமென்றால் தலைப்பாகையைக் கழற்றவேண்டும் என்பதைக் குறிப்பிட்டு பேரணி நடத்தி பிரிட்டிஷ் சட்டத்திலேயே திருத்தம் கொண்டுவந்து, ஹெல்மெட் அணிவதினின்றும் விலக்கு பெற்றார்கள் சீக்கியர்கள்.

-தொடரும்

X