சிலம்பப் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம்!

12/3/2019 2:32:54 PM

சிலம்பப் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழக மாணவியின் அபார சாதனை!

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள். அந்த வகையில் உலக சிலம்ப சேம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் தமிழக மாணவி கீர்த்தனா. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த அரசுப் பள்ளியில் பயின்றுவரும் வெற்றி வீராங்கனை மாணவி கீர்த்தனா பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்…

‘‘நான் விவசாயக் குடும்பத்துப் பெண். அப்பா குமார், அம்மா ஜெயம்மா தம்பதியினருக்கு எனது அக்கா வந்தனா, நான், தம்பி அம்ருத் என நாங்கள் மூன்று பேர். 12ஆம் வகுப்புவரை தாளவாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தேன். தற்போது கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறேன்.

சிறுவயது முதலே எனக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டு. அதனால், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொள்வேன். கல்லூரியில் சேர்ந்த பிறகும் ஓட்டப்பந்தயப் போட்டிகளிலேயே கலந்துகொண்டு வந்தேன். இந்த நிலையில், இமாசா அகாடெமி (IMAASA - Indian Martial Arts And Silambam Academy) சார்பில் சிலம்பப் பயிற்சி அளிப்பதைப் பார்த்தேன். சிலம்பம் ஒரு தற்காப்புக்கலை என்பதால் பெண்களுக்கு நிச்சயம் தேவை என உணர்ந்து அதில் சேர்ந்தேன்.’’ என்று கூறும் கீர்த்தனா படிப்படியாகப் பயிற்சியெடுத்து போட்டிகளில் கலந்துகொண்டதை விவரித்தார்.

‘‘சிலம்பப் பயிற்சியில் சேர்ந்த ஆரம்பத்தில் எல்லாமே புதுசாக இருந்தது. ஆனால், சுதாகர் மாஸ்டர் தைரியம் கொடுத்து பயிற்சியளித்தார். முதல் ஆண்டு முழுவதும் நிறைய பயிற்சி யெடுத்தேன். இரண்டாம் ஆண்டிலிருந்துதான் போட்டியில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். முதன்முதலில் கோயம்புத்தூரில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொண்டு முதல் போட்டியிலேயே மூன்றாம் இடம் பிடித்தேன். மூன்றாம் இடம் வந்தது மனதுக்கு வருத்தமாக இருந்ததால் இன்னும் அதிக பயிற்சியில் ஈடுபட்டேன்.

அதனைத் தொடர்ந்து கலந்துகொள்ளும் ஒவ்வொரு போட்டியிலும் கண்டிப்பாக ஒரு பதக்கம் வெல்ல ஆரம்பித்தேன்’’ என்ற கீர்த்தனா, தேசிய அளவிலான போட்டிக்கும், சர்வதேச சேம்பியன்ஷிப் போட்டிக்கும் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை விளக்கலானார். ‘‘தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்வற்கு முன் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். அந்தப் போட்டி மூன்று கட்டமாக குழுக் கம்பு வீச்சு, கம்புச் சண்டை, தனித் திறமை என நடத்தப்படும். இந்த மூன்று போட்டிகளிலும் கலந்துகொண்டு மூன்று பதக்கம் வென்றேன். இதனையடுத்து தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இதற்கிடையில், கன்னியாகுமரியில் தெற்கு ஆசிய சிலம்பம் சேம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் கலந்துகொண்டன. இதில் அனைத்துப் போட்டிகளிலும் இந்தியாவே முதலிடம் பிடித்தது. இந்தப் போட்டியில் நான்கு கட்டமாகக் கலந்துகொள்ள வேண்டும். நான், வேல் கம்பு வீச்சு, குழு கம்பு வீச்சு, கம்புச் சண்டை, மான்கொம்பு வீச்சு ஆகிய நான்கில் கலந்துகொண்டு மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றேன். ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றேன்.

அதற்கடுத்து 2019-ல் விருதுநகரில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பதக்கம் வென்றேன். இவைகளுக்குப் பின்பே 15வது தேசிய அளவில் திருச்செங்கோட்டில் 2019, பிப்ரவரி 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு வாள்வீச்சு, கம்பு சண்டை, குழு ஆயுத வீச்சு ஆகியவற்றில் 2 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றேன். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் 6ஆம் தேதி வரை மலேஷியாவில் உள்ள கெடா நகரில் நடைபெற்ற முதல் உலகக்கோப்பை சிலம்பாட்டப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றேன். தனியார் அமைப்புகளின் உதவியுடன் மலேஷியா சென்றேன். ஈரோடு ரோட்டரி கிளப் மிகவும் உதவி செய்தது.

இந்த உலக சிலம்ப சேம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். சீனியர் பிரிவில் இரட்டை வாள் வீச்சு மற்றும் குழுக் கம்பு ஆட்டத்தில் 2 தங்கப்பதக்கங்களையும் தொடுமுனை ஆட்டத்தில் வெண்கலப் பதக்கங்களையும் வென்றேன்.

எனது வெற்றிக்குப் பெரிதும் ஊக்கம் கொடுத்தவர் எனக்கு பயிற்சியளிக்கும் சுதாகர் மாஸ்டர் மற்றும் என்னை ஊக்குவிக்கும் அப்பா குமார், அம்மா ஜெயம்பா, தம்பி அம்ருத், அக்கா வந்தனா ஆகியோரை இந்த நேரத்தில் பெருமையோடு நினைத்து நன்றி கூறுகிறேன். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பத்திற்கு அரசு உதவி செய்தால் பல்வேறு சாதனைகளைப் படைத்து நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்’’ என்றார் நம்பிக்கையுடன். இதுபோன்ற திறமையுடைய விளையாட்டு வீராங்கனைகளை அரசு உதவி செய்து ஊக்குவித்தால் விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார்கள். மேலும் பல சாதனைகளைப் படைக்க கீர்த்தனாவுக்கு நம் வாழ்த்துகள்.

- தோ.திருத்துவராஜ்
படங்கள் : U.கனகராஜ்

X