BSNL நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்க திட்டம்..!

12/5/2019 4:36:58 PM

BSNL நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்க திட்டம்..!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

சர்ச்சை

ஒரு காலத்தில் பணக்காரர்களின் ஆடம்பரப் பொருளாக பேசுவதற்கு மட்டுமே இருந்த தொலைபேசி, இன்று பல பரிணாம வளர்ச்சியோடு அனைவரின் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. குரல் அழைப்புகளில் தொடங்கி இணையதள பயன்பாடு உள்ளிட்ட பல வசதிகள் இன்று சாமானிய மக்களுக்கும் கிடைத்து வருகிறது.

ஏர்செல், ஆர். காம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் சேவையினை நிறுத்திய பின்னர், தற்போது வோடபோன் இந்திய நாட்டை விட்டு வெளியேறும் என்றும், ஏர்டெல் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இவை அனைத்தையும்விட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNL ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை, ஆள்குறைப்பு, தனியாருக்கு தாரைவார்ப்பு என பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. இதில் உண்மை நிலை என்ன? என்பது குறித்து பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில செயலாளர் பாபு ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

‘‘தற்போது சந்தையில் உள்ள பி.எஸ்.என்.எல். மட்டுமல்ல, ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களும் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் இந்த நிறுவனங்களெல்லாம் நஷ்டத்தை சந்தித்து வரும்போது, கட்டணமில்லா சேவை வழங்கும் ஜியோ நிறுவனம் மட்டும் எப்படி லாபக்கணக்கை காட்டுகிறது என்பது ஆள்பவர்களுக்கே வெளிச்சம். வெகு விரைவில் வோடபோன் நிறுவனமும் தனது சேவையை நிறுத்தப்போகிறது என செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

மத்திய அரசு கடைப்பிடித்து வரும் பொதுத்துறை விரோத, ஜியோ ஆதரவு கொள்கைகள் காரணமாக பி.எஸ்.என்.எல்-ன் வருமானம் கடுமையாக குறைந்துவிட்டது. 2016-17ஆம் ஆண்டில் 31,533 கோடி ரூபாயாக இருந்த பி.எஸ்.என்.எல்-ன் வருமானம், ஜியோவின் வருகைக்கு பின் 2018-19ஆம் ஆண்டில் 19,308 கோடி ரூபாயாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக நிறுவனத்தின் அன்றாட செயல்பாட்டிற்கு தேவையான நிதியினை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றவர் ஒப்பந்த ஊழியர்களின் நிலையைப் பற்றியும் பேசினார்.

‘‘பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களைவிட மிக மிக குறைவான ஊதியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, இந்த வருவாய் குறைவை காரணம் காட்டி கடந்த ஜனவரி, 2019 முதல் 10 மாதங்களுக்கு மேலாக ஊதியம் தரவில்லை. பி.எஸ்.என்.எல். நிர்வாகம், அரசாங்கம், தொழிலாளர் நலத்துறை உட்பட அனைத்து மட்டத்தில் விவாதித்த பின்னரும், பல கட்ட போராட்டங்களை நடத்திய பின்னரும், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

அது மட்டுமில்லாமல், இவர்களுக்கு கொடுக்கவேண்டிய ஊதியத்தை தராமல், இவர்களை வீட்டுக்கு அனுப்ப பல்வேறு உத்தரவுகளை நிர்வாகம் வெளியிட்டு வருகிறது. இதன் காரணமாக மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 7 ஒப்பந்தத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்ட பின்னரும், அரசாங்கமும், நிர்வாகமும் மெத்தனமாகவே உள்ளன.

நிரந்தர ஊழியர்களுக்கான ஊதியமும் ஜூலை மாதம் முதல் உரிய தேதியில் வழங்கப்படுவதில்லை.  அக்டோபர் மாத ஊதியம் எப்போது வழங்கப்படும் என்பதை நவம்பர் 17ஆம் தேதிக்கு பின்னரும் நிர்வாகம் தெரிவிக்காமல் உள்ளது.  அது மட்டுமில்லாமல் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட GPF, கடன்கள் ஆகியவை உரிய மட்டங்களுக்கு ஆறு மாத காலத்திற்கு மேல் செலுத்தாமல் உள்ளது. இதனால் ஊழியர்கள், தங்களின் பல்வேறு சமூகக் கடமைகளை நிறைவேற்றாமல் இருக்கும்படியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்’’ என்றவர் நிதி ஆயோக்கும், நிதியமைச்சகமும் எவ்வாறு செயல்பட்டு வருகின்றது என்பது பற்றி கூறினார்.

‘‘பி.எஸ்.என்.எல். நிறுவனம் நஷ்டம் என்ற செய்தி வெளியானதிலிருந்து, தற்போது மத்திய அரசாங்கம் உருவாக்கியுள்ள நிதி ஆயோக், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடிவிட வேண்டும் என்றும், நிதியமைச்சகம் இதன் புத்தாக்கத்திற்காக எந்த ஒரு நிதியும் தரமுடியாது என்றதோடு, பி.எஸ்.என்.எல்-ஐ தனியாருக்கு தாரைவார்க்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக வாதிட்டு வருகின்றது.

இந்நிறுவனத்தின் நஷ்டத்திற்கு காரணம் எது என்பதை நியாயமாக பரிசீலிக்காமல், தங்கள் எஜமானர்களுக்கு ஆதரவாகவே இவர்கள் செயல்பட்டு வருகின்றார்கள். பத்து கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்களுக்கு சேவை கொடுத்து வரும் இந்திய நாட்டின் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனத்தின் புத்தாக்கத்திற்கு நிதி உதவி செய்ய மறுக்கும் நிதியமைச்சகம், இந்தியாவின் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2019, செப்டம்பர் மாதத்தில் மட்டும் 37,000 கோடி ரூபாய்க்கு வரிச்சலுகை அளித்துள்ளது.

பி.எஸ்.என்.எல்-ல் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள், அதற்கு பொதுமக்கள், மீடியாக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கொடுத்த ஆதரவின் காரணமாக மத்திய அமைச்சரவை பி.எஸ்.என்.எல்-ன் புத்தாக்கத்திற்கு பல்வேறு ஒப்புதல்களை கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

பல ஆண்டுகளாக மறுக்கப்பட்ட 4G அலைக்கற்றை வழங்குவது, விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வது, பி.எஸ்.என்.எல்-லிடம் காலியாக உள்ள இடங்களை பணமாக்கிக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு நல்ல அம்சங்கள் அதில் உள்ளன. இது மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது’’ என்றவர் நடைமுறையில் என்ன நடக்கிறது என்பது பற்றியும் கூறினார்.

‘‘நல்ல பல அம்சங்கள் இந்த புத்தாக்கத் திட்டத்தில் இருந்தாலும், தற்போது பி.எஸ்.என்.எல். நிர்வாகம், விருப்ப ஓய்வுத் திட்டத்தின் மூலம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது என்கின்ற ஒற்றை அஜெண்டாவில் மட்டுமே முழுமையாக ஈடுபட்டுவருகின்றது. விருப்ப ஓய்வுத் திட்டம் ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையிலானது என அமைச்சர் கூறியிருந்தாலும், நடைமுறையில் அனைத்து ஊழியர்களையும் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் செல்வதற்கு கட்டாயப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விருப்ப ஓய்வில் செல்லவில்லை என்றால், ஓய்வு பெறும் வயதை தற்போதுள்ள 60லிருந்து 58ஆக குறைத்துவிடுவார்கள் என்றும், அவர்களை தொலைதூர பகுதிக்கு மாற்றலில் அனுப்பி விடுவார்கள் என்றும் மிரட்டுவதோடு, தொடர்ந்து பணியாற்றினால், ஊதியம் உரிய தேதியில் கிடைக்காது என்பது போன்ற பல்வேறு செய்திகளை பரப்பி ஊழியர்களை கட்டாயப்படுத்தும் முயற்சிகள் பரவலாக மேற்கொண்டு வருகின்றன.

அதேசமயம், பி.எஸ்.என்.எல்-ன்புத்தாக்கத்திற்கு தேவையான 4G அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாகவோ, நிலங்களை பணமாக்குவது தொடர்பாகவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கு பின், காலியாக உள்ள இடங்களை நிரப்புவது தொடர்பாகவும், எப்படி மக்களுக்கு தடையில்லாமல் சேவை தருவது என்பது தொடர்பாகவும் தெளிவான பார்வையின்றி நிர்வாகம் உள்ளது.

இதில் ஒரு சரியான அணுகுமுறை இல்லையென்றால், சேவை கடுமையாக பாதித்து, இந்நிறுவனம் மேலும் சரிவை சந்திக்க நேரிடும். இந்த நடவடிக்கைகளெல்லாம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்க அரசாங்கம் எடுக்கும் முயற்சியே என்ற எங்கள் சங்கத்தின் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது’’ என்கிறார் பாபு ராதாகிருஷ்ணன்.

- தோ.திருத்துவராஜ்

X