துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியர்கள்!

12/5/2019 4:39:51 PM

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியர்கள்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

சாதனை

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பால் (International Shooting Sport Federation - ISSF) நடத்தப்படும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சீனாவின் புடியான் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. போட்டி தொடங்கி முதல் இரண்டு நாள் பதக்கம் ஏதும் வெல்லாத இந்தியா அதன்பின் நடைபெற்ற இறுதிச்சுற்றில் மூன்று தங்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
 
இப்போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர்(17), பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் (20) மற்றும் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் திவ்யான் சிங் (17) ஆகிய மூவரும் இந்தியாவின் சார்பாக பங்கேற்று தங்கம் வென்றுள்ளனர். 2020ல் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்கின் தரவரிசை அடிப்படையில் பயிற்சிக் களமாக இப்போட்டிகள் கருதப்படுகின்றன.

தனது முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 244.7 புள்ளிகளை ஈட்டி  தங்கம் வென்று அசத்தியுள்ளார் ஹரியானாவை சேர்ந்த மனு பாக்கர். இதற்கு முன் 2018ம் ஆண்டு காமன்வெல்த் நாடுகள் பங்குபெற்ற போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அது மனு பாக்கரின் முதல் காமன்வெல்த் போட்டியாகும். ஆசியன், காமன்வெல்த், யூத் ஒலிம்பிக், ஐ.எஸ்.எஸ்.எஃப். என பல சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் பங்கு பெற்று பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் 250.8 புள்ளிகள் பெற்று 10மீ ஏர் ரைஃபில் பெண்கள் பிரிவில் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். இது சர்வதேச அளவில் பெண்கள் பிரிவில் இவர் பெற்ற இரண்டாம் தங்கம் ஆகும். இதற்கு முன் செப்டம்பர் மாதம் பிரேசிலில் நடைபெற்ற போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஜூனியர் பெண்கள் பிரிவிலும் பல்வேறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்த திவ்யான் சிங் 250.1 புள்ளிகளை பெற்று ஆண்களுக்கான பிரிவில் தங்கம் வென்றுள்ளார். 12 வயதுமுதல் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டுவரும் திவ்யான் சிங் இதற்கு முன் ஆண்களுக்கான ஜூனியர் பிரிவில் பல சர்வதேச போட்டிகளிலும் பதக்கங்களை  
வென்றுள்ளார்.

X