அன்று: கண் கண்ணாடி கடை ஊழியர் இன்று: கண் கண்ணாடி நிறுவனத்தின் உரிமையாளர்

12/5/2019 4:41:11 PM

அன்று: கண் கண்ணாடி கடை ஊழியர் இன்று: கண் கண்ணாடி நிறுவனத்தின் உரிமையாளர்

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

வெற்றிக்கதை

வெற்றிக்கான முயற்சியில் இலக்கை எட்டிய பின்னும் தொடர்ந்து உத்வேகத்தோடு செயல்பட வேண்டும். ஏனெனில், முயற்சிக்கும் விடாமுயற்சிக்கும் உள்ள வித்தியாசம் அதுதான். வெற்றிவரை தொடர்வது முயற்சி, வெற்றிக்குப் பின்னும் தொடர்வது விடாமுயற்சி.
விடாமுயற்சியே ஒரு தொழிலின் வெற்றியைத் தீர்மானிக்கும். அந்தவகையில், ஒரு நிறுவனத்தில் சாதாரண ஊழியராக மட்டும் நின்றுவிடாமல் தனது விடாமுயற்சியால் ஆப்டிக்கா மார்ட் ஐ கேர் பிரைவேட் லிமிடெட் (Optica mart eye care Pvt Ltd) என்ற ஒரு பிராண்டை கட்டியெழுப்பியிருக்கிறார் சுப்ரியா. அவர் தன் வெற்றிக்கதையை இங்கு நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்…

‘‘சென்னை தேனாம்பேட்டை தான் நான் பிறந்து வளர்ந்த இடம். அப்பா தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வயர்மேன் பணியிலிருந்தார். நடுத்தரக் குடும்ப சூழலில் அப்பாவின் வருமானம் குடும்பச் செலவுகளுக்கே சரியாக இருக்கும். இந்த நிலையில் பள்ளியில் படிக்கும்போதே மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்பது என் சிறுவயது கனவாக இருந்தது.

பள்ளிப்படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் அன்றைக்கு வீட்டிலிருந்த சூழ்நிலையால் மருத்துவம் படிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆனாலும், மருத்துவம் சார்ந்து படிக்கவேண்டும் என்பதற்காக ஆப்டோமெட்ரிஸ்ட் (Optometrist) என்ற  புரொபஷனல் கோர்ஸை எடுத்து 2008ல் படித்து முடித்தேன். நான்கு ஆண்டு படிப்பு அது.

நான்காவது ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது இன்டெர்ன்ஷிப்பில் கலந்துகொண்டேன். அதற்கடுத்து அத்துறை சார்ந்த மற்றொரு கோர்ஸை எடுத்து மலேசியா சென்று படித்தேன். அத்துறையில் ஓர் இலக்கை அடையவேண்டும் என்பதற்காக மேலும் ஒரு கோர்ஸுக்காக  சிங்கப்பூரிலிருந்த இன்டெர்ன்ஷிப் புரோக்ராமிலும் கலந்துகொண்டு தேர்வாகி அதையும் படித்து முடித்தேன்.

இந்த கோர்ஸ்கள் அனைத்தும் படித்து முடித்து சென்னை திரும்பியதும் வள்ளுவர் கோட்டம் பகுதயிலுள்ள தனியார் கண் மருத்துவ சிகிச்சை நிறுவனத்தில் கண் பரிசோதிப்பாளர் மற்றும் ஆலோசனை  வழங்குபவராக பணியைத் தொடங்கினேன். இதனையடுத்து சென்னை தி.நகரிலுள்ள ஒரு பிரைவேட் லிமிடெட் கண் கண்ணாடிக் கடையில் ஊழியராகப் பணியில் சேர்ந்தேன்.

 இதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாலும், ஏற்கனவே அதுகுறித்து படித்திருந்ததாலும் கற்பிப்பதில் ஆர்வம் பிறந்தது. அதனால் கல்லூரிகள் மற்றும் பிரபல கண் மருத்துவமனைகளுக்குச் சென்று பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கினேன். இந்த நிறுவனங்களில் டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி ஆப்டோமெட்ரிஸ்ட் (B.Sc) மாணவர்கள் என மருத்துவத்துறை சார்ந்து பலர் இருந்தார்கள், அவர்களுக்கும் பாடம் நடத்த ஆரம்பித்தேன்’’ என்று தான் கடந்துவந்த பாதையை நினைவுகூர்ந்தார் சுப்ரியா.

‘‘அந்தக் காலகட்டத்தில் கான்டாக்ட் லென்ஸில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான பிரத்யேகப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்துவந்தது. அந்த நிறுவனத்தில் கண் பார்வை சிகிச்சைக்கான தனிப்பிரிவும் இருந்தது. அதில் சர்ஜிக்கல் இன்ஸ்ட்ரூமென்டெல்லாம் செய்துகொண்டிருந்தார்கள், கூடவே கான்டாக்ட் லென்ஸும் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். உலகத் தரத்தில் முன்னிலையில் அந்த நிறுவனம் இருந்தது. தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

கண் சிகிச்சை மருத்துவத்துறையில் இயங்க வேண்டுமென்றால் என்னவெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் படிப்படியாக தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு நிறுவனமாக வேலை செய்துகொண்டிருந்தால் கடைசிவரை நல்லதொரு வேலையாளாகவே இருந்துவிடுவோம். அதனால் ஒரு தொழில்முனைவோராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. 2013ஆம் ஆண்டு ஜூலையில் எனது கணவர் டேவிட் ஜெயப்பிரகாஷிடம் எனது தொழில்முனைவோராகும் விருப்பத்தைச் சொன்னேன்.

அவரும் என்னைப் போன்றே ஆப்டோமெட்ரிஸட்் என்ற தொழில்முறை படிப்பான டிப்ளமோ கோர்ஸ் முடித்திருந்ததால் எனது விருப்பத்திற்குச் சம்மதம் தெரிவித்தார்.  இதனையடுத்து வீட்டிலிருந்த நகைகளையெல்லாம் எடுத்து அடமானம் வைத்து குறைந்த முதலீட்டில் அரும்பாக்கத்தில் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து ஆப்டிக்கா மார்ட் (Optica mart) என்ற பெயரில் முதல் கண்ணாடிக் கடையைத் தொடங்கினோம்.

ஆரம்பத்தில் எல்லா கடைகளையும் போலவே ஒரு கண்ணாடி விற்பனையகம்தானே என குறைவானவர்களே வந்தனர். அதனால் கஷ்டமாகத்தான் இருந்தது. கடையில் வேலைக்கு ஆட்கள் யாரும் கிடையாது. நான் மட்டுமே கண் பரிசோதனை மற்றும் விற்பனை என எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள ஆரம்பித்தேன். படிப்படியாக மக்கள் வர ஆரம்பித்தனர். வாடிக்கையாளர்களை எப்படி தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனும் தொழில் பக்குவமோ, தந்திரங்களோ எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை’’ என்று கூறிய சுப்ரியா வெற்றிக்கான பாதையை அமைத்துக்கொண்ட விதத்தையும் சொல்லத் தொடங்கினார்.

‘‘வெளிநாடுகளுக்குச் சென்று படித்து விட்டு வந்ததாலும், தொழிலில் முழு ஈடுபாடு காட்டியதாலும் ஆறு ஏழு மாதங்களில் எனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கி வைத்தேன். அது கொடுத்த தன்னம்பிக்கையில் சென்னை கே.கே. நகரில் அடுத்து ஒரு கடையைத் தொடங்கினோம். அந்த சமயம் பிரம்மாண்டமாக விளம்பரங்கள் கொடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை. அதனால், இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடத்தி, அதிலிருந்து வாடிக்கையாளர்களைப் பெற்றோம்.

இப்படி முகாம்கள் நடத்தியதன் மூலம் பல நூறு வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்களென்றால், அவர்களில் பத்து பேருக்காவது கேட்ரேக்ட் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாக இருக்கும். அப்போது, எனக்கு பழக்கமான மருத்துவமனை நிறுவனர்களிடம் பேசி ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு, இலவச கேட்டரேக்ட் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். இப்படி, எங்கள் ஆப்டிக்கல்ஸுக்கு வந்தால் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மக்கள் மத்தியில் பேச்சுவாக்கில் செய்திகள் பரவித்தான் எங்கள் கடைக்கான மார்க்கெட்டிங் நடந்தது.

இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் கண்ணாடியின் தரத்திற்கு ஒரு சமரசமும் செய்யாமல் அதே தரத்தில் ஒரு கண்ணாடியை அறுநூறு ரூபாய்க்கு செய்து கொடுக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாக்கினேன். இப்போதும் கூட நான் பெரிய அளவில் லாபத்திற்கு ஆசைப்படுவதில்லை.

மக்களின் நலனை மட்டுமே முக்கியமாக நினைக்கிறேன். ஏனெனில், எந்த ஒரு தொழிலும் நமக்கான லாபத்தை மட்டுமே எதிர்பார்த்து நடத்தினால் அது குறுகிய காலத்தில் காணாமல் போய்விடும். அதேநேரத்தில் சமூக அக்கறை சார்ந்து நடத்தினால் வெற்றி நம்மைத் தேடி வரும். சமுதாயத்திற்கு நாம் என்ன செய்கிறோமோ அதையும் சமுதாயம் திருப்பிச் செய்யும். அதுவே தொழிலுக்கான வெற்றி’’ என தத்துவார்த்தமாகப் பேசினார் சுப்ரியா.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘தொடர்ந்து வளர்ச்சியடைந்ததால் 2014ல் கே.கே. நகர் கடை, 2015ல் புழலில் ஒரு கடை தொடங்கியிருக்கிறோம். இன்றைக்கு ஏராளமான ஊழியர்கள் எங்களிடம் பணிபுரிகிறார்கள். எங்கள் ஆப்டிக்கல்ஸில் வேலை செய்தவர்களில் சிலர் தனியே சென்று கடை நடத்தும் அளவு வளர்ந்திருக்கிறார்கள். இது நான் எதிர்பார்க்காத வளர்ச்சி. சாதாரண ஒரு கடையாக ஆரம்பித்தது இன்றைக்கு ஆப்டிக்கா மார்ட் ஐ கேர் பிரைவேட் லிமிடெட் (Optica mart eye care Pvt Ltd) என்ற ஒரு பிராண்ட் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

பொருட்களின் தரம் மற்றும் சேவை அறிந்து இன்றைக்கு பல தொழில்முனைவோர்கள் ஃப்ரான்சைஸி கேட்டு வருகிறார்கள். எனவே, அடுத்தகட்டமாக எங்கள் பிராண்டை ஃப்ரான்சைஸி மாடலில் வளர்த்தெடுக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறோம். நிச்சயம் அடுத்த வருடம் இந்த நேரம் பத்து ஃப்ரான்சைஸி கடைகள் திறந்திருப்போம்.

சமூக அக்கறையுடன் 2016ஆம் ஆண்டு ‘விழியகம்’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவினோம். அதன் மூலம் சென்னை மற்றும் புறநகர்களில் பல கிராமங்களுக்குச் சென்று இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கண் அறுவை சிகிச்சைகளை செய்துவருகிறோம்.

அறக்கட்டளை மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் 5,000 பேருக்கு குறைந்த விலையில் கண் கண்ணாடி மற்றும் 500 பேருக்கு இலவச கண் புரை அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளோம். இந்த நிறுவனம் ஒரு தொழிலாக மட்டுமில்லாமல் சமுதாயத்தில் கண் சம்பந்தப்பட்ட சேவைகளைச் செய்யும்’’ என்ற சமூக அக்கறையுள்ள வார்த்தைகளுடன் முடித்தார் சுப்ரியா.

 - தோ.திருத்துவராஜ்

X